காத்தான்குடி மில்லத் மகளிர் கல்லூரி மாணவிகள் உட்கொண்ட காலை உணவு நஞ்சானதில் சுமார் 20 இற்கும் மேற்பட்ட மாணவிகள் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று திங்கட்கிழமை காலை உட்கொண்ட உணவு நஞ்சானதில் மயக்கமுற்றும் வாந்தி எடுத்த நிலையிலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இம்மாணவிகள் தற்போது காத்தான்குடி தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இது தொடர்பான பரிசோதனைகளை காத்தான்குடி தள வைத்தியசாலை வைத்தியர்கள் மேற்கொண்டு வருவதாகவும் காத்தான்குடி தள வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர்.எம்.ஆதில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இது சம்பந்தமாக பரிசீலிப்பதற்காக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.நசிர்தீன் தலைமையிலான குழுவும் காத்தான்குடி வைத்தியசாலைக்கு விஜயம் செய்திருந்தனர்.
குறித்த மாணவிகளில் அதிகமானவர்கள் காத்தான்குடி சித்தீக்கிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி விடுதியைச் சேர்ந்த மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன தலைமையிலான குழுவினரும் காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு விஜயம் செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.