எங்கள் நாட்டின் பாடசாலைகளின் இரண்டாம் நிலைக் கல்வியில் பல யதார்த்தபூர்வ மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு இப்போது கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சுகள் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் ஒத்துழைப்புடன் ஒரு பாரிய திட்ட த்தை ஏற்படுத்த உள்ளன.
இன்று எங்கள் நாட்டின் இரண்டாம் நிலை கல்வியில் தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளுடன் கணிதம், இரசாயனவியல், பெளதீகவியல், நாட்டின் பரிபாலனம் பற் றிய அரசியல் நிலை அல்லது குடியியல், பூமி சாஸ்திரம், வர்த்தகம், வரலாறு, சித்திரம் போன்ற பாடங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பிரென்ஞ் மொழி, சீன மொழி, ஜப்பானிய மொழி, கொரிய மொழி, ஹிந்தி, உருது, அரபு மொழி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளையும் எமது நாட்டின் இரண்டாம் நிலை கல்வியில் சேர்த்துக் கொள்வது பற்றி இப்போது அரசாங்கம் நிபுணர்களின் குழுவொன்றை நியமித்து ஆய்வொன்றை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே சில பாடசாலைகளில் குறிப்பாக, சர்வதேச பாட சாலைகளில் இந்த சில மொழிகளில் கற்பிக்கப்படுகின்றன. கொழும்பு மாநகரில் உள்ள முன்னணி அரசாங்கப் பாடசாலைகளிலும் பிரென்ஞ் மொழி கற்பிக்கப்படுகின்றது.
எங்கள் நாட்டின் இரண்டாம் நிலை கல்வியில் கற்பிக்கப்படும் பாடங்களில் மாணவ, மாணவியருக்கு மொழி அறிவும், கணிதம், விஞ்ஞானம், வணிகம், பூமிசாஸ்திரம், வரலாறு, குடியியல் மற்றும் கணனி போன்ற பாடங்களில் ஓரளவு அறிவை பெருக்குவ தற்கு பேருதவியாக அமைந்துள்ளது.
எமது அரசாங்கப் பாடசாலைகளின் தற்போதைய இரண்டாம் நிலை கல்வி விதானத்தைப் பற்றி ஒரு பிரபல கல்விமான் கருத்து தெரிவிக்கையில், இவை மாணவர்களுக்கு கல்வித்துறையில் ஒரு அடிதளத்தை அமைப்பதற்கு உதவுகின்ற போதிலும் இந்த மாணவ, மாணவியர் அனைவருமே டாக்டர்களாகவோ, பொறி யியலாளர்களாகவோ, விஞ்ஞானிகளாகவோ, கணக்காளர்களாகவோ, சட்டத்தரணிகளாகவோ எதிர்காலத்தில் உயர்பதவி வகிப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது.
இதனால், எங்கள் நாட்டின் அரசாங்கப் பாடசாலைகளில் இரண் டாம் நிலை கல்வி பெறும் மாணவ, மாணவியர் இயற்கையி லேயே உள்ள திறன்களை அல்லது திறமைகளை அபிவிருத்தி செய்யக்கூடிய வகையில் பாடவிதானங்களை ஏற்படுத்துவதன் அவசியம் இப்போது வலுப்பெற்று வருகின்றது.
இந்த யோசனைக்கு உந்து சக்தியாக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத் தில் இளைஞர் அபிவிருத்தி நிபுணராக விளங்கும் ரவி கர்கார் பல நல்ல யோசனைகளை கல்வி மற்றும் உயர்கல்வி அமைச் சுக்கு முன்வைத்துள்ளார். இலங்கைக்கான குறுகிய கால விஜய மொன்றை மேற்கொண்டுள்ள கர்கார், அரசாங்கப் பாடசாலைக ளில் தரம் ஒன்றில் இருந்து மாணவ, மாணவியரின் திறன்களை அபிவிருத்தி செய்வதற்கான பாடத்திட்டமொன்றை பாடவிதா னத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று யோசனை தெரிவித் துள்ளார்.
இந்த சர்வதேச நிபுணர் இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளையும், பல்கலைக்கழகங்களின் உயர் அதி காரிகளையும் சந்தித்தார். இது பற்றி தேசிய இளைஞர் சேவை கள் மன்றத்தின் செயற்பாட்டு பணிப்பாளர் மிலிந்த ராஜபக்ஷ தகவல் தருகையில், அடுத்தாண்டில் இலங்கையின் முதலாவது தேசிய இளைஞர் கொள்கை பிரகடனம் ஒன்று அறிமுகம் செய் யப்படும் என்று கூறினார்.
பாடசாலைகளில் தரம் ஒன்று முதல் ஜீ.சி.ஈ. உயர்தர வகுப்பு வரை யிலான பாடவிதானத்தில் செய்திறன் அபிவிருத்தியை ஒரு பாட மாக அறிமுகம் செய்வதன் அவசியத்தை இப்போது அரசாங் கத் தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்தப் பாரிய திட்டம் தயாரிக்கப்பட்டவுடன் அதற்கான மேலதிக நிதி ஒதுக்கீடுகள் திறைசேரியினால் வழங்கப்பட்டவுடன் இத்திட்டம் விரை வில் நடைமுறைப்படுத்தப்படும்.
சில மாணவ, மாணவியர் ஜீ.சி.ஈ. சாதாரண தரப்பரீட்சையில் பல பாடங்களில் சித்தியடையாமல் மன வேதனையுடன் இருப்பதை நாம் நாளாந்த வாழ்க்கையில் பார்த்திருக்கிறோம். ஜீ.சி.ஈ.சாதாரண தர பரீட்சையில் தோல்வியடையும் மாணவ, மாணவியரின் எதிர்காலமே இதனால் சீர்குலைந்துவிடுகிறது.
இவ்விதம் பரீட்சைகளில் தோல்வியடையும் மாணவர்களிடம் வேறு ஏதோ ஒரு விடயத்தில் மிதமிஞ்சிய திறமை இருக்கும். சிலர் சித் திரம் வரைவதில் திறமை மிக்கவர்களாக இருப்பார்கள். வேறு சில மாணவ, மாணவியர் நடனமாடுவதிலும், கர்நாடக இசையிலும் திறமைமிக்கவர்களாக இருப்பார்கள். இன்னும் சிலர் சிலை களை வடிப்பதில் திறமைசாலிகளாக இருப்பார்கள். இன்னும் சிலர் நடிப்புக்கலையில் நிகரற்றவர்களாக இருப்பார்கள். கைப்பணிப் பொருட்களை தயாரிப்பதிலும் சிலருக்கு திறமை இருக்கும்.
மேலே நாம் குறிப்பிட்ட மாணவர்கள் ஜீ.சி.ஈ. சாதாரண தரத்தில் சித்தியடையாது இருந்தாலும் அவர்களுக்கு இயற்கை அன்னை தந்த இந்த செய்திறன் கொடை பிற்காலத்தில் அவர்களின் வாழ்க்கையை வளமாக்குவதற்கு உதவியாக அமையும். இத்தகைய திறமை மிக்கவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அந்தந்த துறைகளில் பயிற்சியையும், மேலதிக வழிகாட்டலையும் வழங்க க்கூடிய வகையில் பாடவிதானத்தை தயாரிக்க வேண்டும் என்று கல்விமான்கள் கூறுகிறார்கள்.
இவ்விதம் கூடிய விரைவில் பாடசாலைகளில் இரண்டாம் நிலை கல்வி பாடவிதானத்தில் செய்திறன் பாடத்தையும் இணைத்துக் கொள்வதன் மூலம் எங்கள் நாட்டில் அனைவரது வாழ்க்கையையும் வளமாக்கக்கூடிய சிறந்த வாழ்வாதார திட்டங்களை நாம் உருவாக்க முடியும்.
-தினகரன்
Friday, February 1, 2013
பாட விதானங்களில் செய்திறன் பாடங்களை இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது
Friday, February 01, 2013
News