2011 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேற்றின் வெட்டுப் புள்ளிகளின் பிரகாரம் பல்கலைக்கழகங்களில் 94 கற்கை நெறிகளுக்காக 26,994 பேர் அனுமதிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி கடந்த முறையை விட இம்முறை 5,182 பேர் மேலதிகமாக பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.
இசற் புள்ளிகள் தொடர்பான பிரச்சினையைத் தொடர்ந்து முன்னர் 5,609 மாணவர்களை மேலதிகமாக பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்குமாறு உயர்நீதிமன்றம் அறிவித்திருந்த போதும் சில கற்கை நெறிகளுக்காக நடத்தப்பட்ட செயல்முறை பரீட்சையில் 427 பேர் சித்தியடையத் தவறியமையினால் பின்னர் நீதிமன்ற அனுமதி மூலம் மேலதிகமாக இணைத்துக்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை 427 ஆல் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி பல்கலைக்கழகங்களுக்கு 2011/2012 கல்வியாண்டுக்கென மொத்தமாக சேர்த்துக்கொள்ளப்படவுள்ள மாணவர் எண்ணிக்கையில் மருத்துவ விஞ்ஞான கற்கைநெறிக்கு கடந்த முறையைவிட மேலதிகமாக 158 பேருடன் 1333 பேரும் பல் மருத்துவ கற்கை நெறிக்கு கடந்த முறையை விட 38 பேர் அதிகமாக 118 பேரும் பொறியியல் கற்கை நெறிக்கு கடந்த முறையை விட 268 பேர் அதிகமாக 1583 பேரும் முகாமைத்துவ கற்கை நெறிக்கு கடந்த முறையை விட 531 பேர் அதிகமாக 4036 பேரும் கலை கற்கை நெறிக்கு கடந்த முறையை விட 1095 பேர் அதிகமாக 5995 பேரும் வணிக கற்கை நெறிக்கு கடந்த முறையை விட 145 பேர் அதிகமாக 665 பேரும் சட்டக் கற்கை நெறிக்கு கடந்த முறையை விட 99 பேர் அதிகமாக 449 பேரும் அனுமதிக்கப்படவுள்ளனர்.
இவ்வாறு பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் மார்ச் மாத இறுதிக்குள் நடைபெறுமென உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.