உயிரியல் மற்றும் மருத்துவத்
துறைகளில் ஏற்பட்டுள்ள பெரும் வளர்ச்சி காரணமாக அவை தொடர்பான படிப்புகளை
அதிக அளவில் மாணவர்கள் பயில்கின்றனர்.
அந்த வரிசையில், இன்ஜினியரிங்
துறையின் தத்துவங்களையும், தொழில்நுட்பங்களையும் மருத்துவத் துறைக்கு
பயன்படுத்துவதே பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறை நோக்கமாக
கொண்டிருக்கிறது. இருதுறைகளுக்கும் இடையில் இருந்த இடைவெளி முற்றிலும்
குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் உயிரியல் துறையுடன்
இன்ஜினியரிங் துறை இணைந்து உருவாக்கப்படும் கருவிகளும், தொழில்
நுட்பங்களும் மருத்துவர்கள் நோயை கண்டறிந்து குணமாக்குவதற்கு உதவுகின்றன.
இத்துறையில்
ஆராய்ச்சி மேற்கொள்வதும், அதை மேம்படுத்துதலும் முக்கியமாக
கருதப்படுகிறது. அதி நவீன கருவிகளான இ.சி.ஜி., இ.இ.ஜி., இ.எம்.ஜி., ரத்த
மூலக்கூறுகளை கண்டறியும் சென்சார்கள், சி.டி. மற்றும் எம்.ஆர். ஸ்கேனர்கள்,
மெக்கானிக்கல் ரெஸ்பிரேட்டர், கார்டியாக் பேஸ்மேக்கர் போன்ற கருவிகள்
பயன்படுத்தப்படுகின்றன.
பயோமெடிக்கல் இன்ஜினியரிங் உதவியோடு,லேசர்
கருவிகள் மூலம் பெரும்பாலான ஆப்ரேஷன்கள் மருத்துவமனைகளில் நடக்கின்றன.
முன் ஆப்பரேஷன்கள் செய்வதற்கு பல பாட்டில்கள் ரத்தம் தேவைப்படும். ஆனால்
இப்போது ரத்தம் மட்டுமல்லாமல் கத்தியுமின்றி லேசர் மூலம் ஆப்பரேஷன்கள்
செய்யப்படுகின்றன. மேலும், செயற்கை இருதயம், பேஸ்மேக்கர், செயற்கை
வால்வுகள், செயற்கை எலும்புகள், கிரையோசர்ஜரி, அல்ட்ராசானிக் கருவிகள்
போன்றவைகளும் இவற்றில் அடங்கும்.
கிளைப்பிரிவுகள்
மற்ற இன்ஜினியரிங் துறைகளை போன்று பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறையும் சில
கிளைப்பிரிவுகளை உள்ளடக்கியது.
* பயோ இன்ஸ்ட்ருமென்டேஷன் :
இத்துறையானது எலக்ட்ரானிக் உதவியுடன் உரிய அளவுகோலை கொண்டு நோய்களை
கண்டறிந்து சிகிச்சை அளிக்க உதவுகிறது.
* பயோ மெட்டீரியல்ஸ்: மாற்று
அறுவை சிகிச்சை செய்வதற்கான செயற்கை உடல் உறுப்புகளை இத்துறை இன்ஜினியர்கள்
உருவாக்குகின்றனர்.
* பயோ மெக்கானிக்ஸ்: உயிரியல் மற்றும்
மருத்துவத்துறைக்கு மெக்கானிக்கல் அப்ளிகேஷனை பயன்படுத்துவதாகும். இதன்
மூலம் எலும்புமுறிவு, பேஸ்மேக்கர் போன்றவை செயல்படுத்தப்படுகின்றன.
*
செல்லுலார் இன்ஜினியரிங்: மனித உடலில் உள்ள உயிரணுக்கள் தொடர்பான
அனைத்தும் அறியலாம்
* டிஸ்யூ இன்ஜினியரிங்: திசுக்கள் வளர்ச்சி,
திசுக்களை பேணுதல் போன்றவற்றின் மூலமாக நோய்களை குணமாக்கலாம்.
பெரும்பாலும் சிறுநீரக குறைபாடு தொடர்பான நோய்கள் இதன் மூலம் சரி
செய்யபடுகின்றன.
* ஜெனிடிக் இன்ஜினியரிங்: மரபு வழிப்பண்பியல் பற்றி
அறியலாம்.
* கிளினிக்கல் இன்ஜினியரிங்: மெடிக்கல் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்
மற்றும் பிற உபகரணங்கள் பற்றி விரிவாக பயிலலாம்.
* ஆர்த்தோ பீடிக்
பயோஇன்ஜினியரிங்: எலும்பு, நரம்புகள், இணைப்புகள், தசைகள் ஆகியவற்றின்
செயல்பாடுகளை கண்டறிந்து அதற்கேற்ப செயற்கையான எலும்புகள், இணைப்புகள்
தயார் செய்தலை பற்றி விளக்கும் பிரிவாகும்.
* நேவிகேஷன் சிஸ்டம்ஸ்:
இத்துறை பயோ இன்ஜினியர்கள் கம்ப்யூட்டர் மென்பொருள் உதவியுடன் மனித
உடலின் உறுப்புகளின் டிஜிட்டல் படங்களை உருவாக்குகின்றனர். இம்முறை நவீன
லேசர் தொழில்நுட்பங்களில் உதவுகிறது.
பயோஇன்ஜினியரிங் துறையில்
பி.இ., பி.டெக். படிப்புகள் உள்ளன. பிளஸ் 2வில் கணிதம், இயற்பியல்,
வேதியியல், உயிரியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
முதுநிலைபடிப்புகள்
இது தவிர இன்ஜினியரிங் படிப்பில் இ.சி.இ., இ.இ.இ., இ அண்டு ஐ
படித்தவர்களும் இத்துறையில் பட்ட மேற்படிப்புகளை படிக்கலாம். பி.எஸ்சி.
இயற்பியல் படித்தவர்கள் அதில் பட்ட மேற்படிப்புக்குப் பின் மெடிக்கல்
எலக்ட்ரானிக்ஸ் படித்தும் இத் துறையில் நுழையலாம்.
வேலை வாய்ப்புகள்
ஹெல்த்கேர் நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பு அதிகமாக
உள்ளது. டெக்னீசியன், மேனேஜர் போன்ற நிலைகளில் வாய்ப்புகள் உள்ளன.
இந்தியாவில் பயோமெடிக்கல் கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் அதிகமாகக்
கிடையாது. இந்தியாவில் உள்ள இத்தகைய நிறுவனங்கள் பெரிதும் பன்னாட்டு
நிறுவனங்களாகவே இருக்கின்றன.
இந்த நிறுவனங்களுக்கு
பயோஇன்ஜினியர்கள் தேவைப்படுவதோடு அவை நல்ல சம்பளம் தரத் தயாராக உள்ளன.
ஆண்டிற்கு 2 முதல் 2.5 லட்சம் வரை ஊதியம் அளிக்கிறது. ஆனால் இந்த
நிறுவனங்கள் ஐ.ஐ.டி., வி.ஐ.டி. போன்ற பெயர்பெற்ற கல்வி
நிறுவனங்களிலிருந்து பயோஇன்ஜினியரிங் துறையில் நல்ல திறனும்
மதிப்பெண்ணையும் பெற்றவர்களையும் ஆழ்ந்த துறை அனுபவம் உள்ளவர்களையும்
மட்டுமே பணிக்காகத் தேர்வு செய்கின்றன. வெளிநாடுகளில் இத்துறைக்கான
வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன. ஏனெனில் அங்கு இந்த துறையின்
வளர்ச்சி மிகவும்
அதிகமாக உள்ளது.