* 3 A பெற்றும் பல்கலைக்கழக வாய்ப்பை இழந்து தவிக்கும் மாணவர் சமூகத்தின் பரிதாப நிலை.
* அனுமதி முறையில் மாற்றத்தைக் கோரும் கல்வியியலாளர்கள்.நம் நாடு தென்கிழக்காசியாவிலேயே கல்வித்துறையில் முன்னேற்றமடைந்த நாடுகளுள் ஒன்றாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது ஆங்கிலம் அரச கரும மொழியாக இருந்தது. நகரப்பாடசாலையில் ஆங்கிலம் கற்றவர்கள் அரச ஊழியர்களாகப் பணிபுரிய வாய்ப்புக் கிடைத்தது.
அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் பணிமனைகளில் நிர்வாக அதிகாரிகளாகவும் எழுதுவினைஞர்களாகவும் பலர் அரச பணியில் ஈடுபட்டனர். வங்கிகளிலும் தனியார் பணிமனைகளிலும் பலர் தொழில் பெற்றனர்.
இத்தகைய சொகுசுத் தொழில் செய்வது நாகரிகமாகவும் சமூக மதிப்புக்குரியதாகவும் கருதப்பட்டது. நாடு சுதந்திரமடைந்த பின் சுதேச மொழிகளில் கல்விப் போதனை அமைந்தபோதும் நாட்டின் கல்வித்திட்டம் சொகுசுத் தொழில் செய்யக்கூடியவர்களையே உருவாக்கி வந்தது. கலாநிதி கன்னங்கரா அவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட இலவசக் கல்வித்திட்டம் நகர மாணவர் போல கிராமிய மாணவரும் சம வாய்ப்புப் பெற்று கல்வி கற்க வசதியளித்தது. நூற்கல்விக்கு முக்கியத்துவம் அளித்த கல்வித்திட்டம் அமுல்படுத்தப்பட்டதால் கலைத்துறை, வணிகத்துறை, விஞ்ஞானத்துறைகளில் கல்வி கற்றவர்கள் தமது தகைமைக்கேற்ற பதவிகளில் அமர்ந்து அரச, தனியார் பணிமனைகளில் தொழில் புரிவது வழக்கமாயிற்று. இத்தகைய சொகுசுத் தொழில் புரிவோர் நாட்டின் அரச நிர்வாக இயக்கத்துக்குப் போதுமான நிலையில், கற்றுத்தேறும் எதிர்கால இளைஞர் சமூகத்துக்குத் தொழில் வழங்க முடியாமல் அரசு கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றது. ஆண்டுதோறும் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறும் பட்டதாரிகளும் க.பொ.த உயர்தரம், சாதாரண தரம் சித்தி பெற்றவர்களும் சொகுசுத் தொழில் தேடி அலைகின்றனர். தொழில் வழங்குமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். அரசு அனைவரையும் அரச தொழிலில் உள்Zர்க்க முடியாது.
அதேவேளை தொழில் திறன் பெற்ற (Skilled labourers) தொழிலாளர்கள் பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இருக்கிறது. நமது நாட்டு இளைஞர்களுக்குத் தொழிற்பயிற்சி இல்லாமையாலும் தொழில் புரிவதில் நாட்டம் இல்லாமையாலும் தேவைக்குரிய தொழிலாளர்களை வெளிநாடுகளிலிருந்து கொண்டுவர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
கல்வியின் நோக்கங்கள் பல. எனினும் தொழில் வாய்ப்புப் பெறுவதும் அவற்றுள் ஒன்றே. எனவே நூல்களைப் படித்து அறிவைத் தேடுவது மட்டும் பூரண கல்வியாகாது என்பதை உணர்ந்து மாணவர் சமூகம் தொழில்நுட்பக்கல்வி, தொழிற்கல்வியை ஆர்வமுடன் கற்றுத்தேற முன்வரவேண்டும். சமூகத்தின் வாழ்வாதாரத் தொழில்களான விவசாயம், கைத்தொழில்கள், கட்டட நிர்மாணம், ஆயுத, தளபாட உற்பத்தி போன்ற மனித உடல்வலுவுடன் செய்யப்படும் தொழில்களைச் சமூகம் மதிப்புக்குரிய தொழிலாகக் கருதாமை காரணமாக இளைஞர்கள் இத்தொழிலில் ஈடுபட விரும்புவதில்லை. விவசாயிகளும் தொழிலாளர்களும் தமது சந்ததிக்குத் தம் தொழிலில் பரிச்சயம் ஏற்படுத்தாது. நூலறிவுக் கல்வி பெற அனுப்புவதால் வாழ்வாதாரத் தொழில்புரிவோரின் தொகை அருகி வருகின்றது. இதனால் தொழில்துறையிலே ஆளணிப்பற்றாக்குறை நிலவுகின்றது. பல ஏக்கர் வயல் நிலத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகள் விதைப்புக்கும் பயிர்நடுவதற்கும் அறுவடைக்கும் களை கட்டுவதற்கும் தேவையான தொழிலாளர் இன்றிப் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். உரிய பருவத்திலே செய்ய வேண்டிய வேலையை செய்ய முடியாது போவதால் அப்பருவச் செய்கை நஷ்டத்தை ஏற்படுத்துகின்றது. தொழிலாளர் தட்டுப்பாட்டை ஈடுசெய்ய அவர்கள் அதிக ஊதியத்தைத் தொழிலாளர்களுக்கு கொடுக்க நேரிடும்போது அவரது உற்பத்திச் செலவு அதிகரிப்பதுடன் இலாபமும் கிடைப்பதில்லை. இத்தகைய ஆளணிப்பற்றாக்குறை எல்லாத் தொழில்களையும் பாதிக்கின்றது.
இலங்கையின் கல்வித்துறை மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றதென்பதற்கு கட்டியம் கூறுவதுபோல அண்மையில் வெளிவந்த கல்விப்பொதுத்தராததர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் அமைந்துள்ளன.
க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி 8544 பேர் மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளைப் பெற்றுள்ள அதேவேளை, 16,538 பேர் மூன்று பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர்.
இதில் மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்தி பெற்றுள்ள மாணவர்களில் அதிகமானோர் வர்த்தகப் பிரிவைச் சேர்ந்தவர்களேயாகும். இதன்படி வர்த்தகப் பிரிவில் 6,471 பேரும், கலைப்பிரிவில் 1,313 பேரும், கணிதப் பிரிவில் 443 பேரும், விஞ்ஞான பிரிவில் 313 பேரும், பொதுப் பாடப் பிரிவில் 4 பேரும் 3 ‘ஏ’ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
இதேவேளை, புதிய பாடத்திட்டத்தின் கீழ் பரீட்சைக்குத் தோற்றிய 2 இலட்சத்து 7 ஆயிரத்து 910 பேரில் ஒரு இலட்சத்து 28 ஆயிரத்து 809 பேர் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளதுடன், பழைய பாடத்திட்டத்தின் கீழ் தோற்றிய 24,966 பேரில் 513 பேர் மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்திகளைப் பெற்றுள்ளதுடன், 15,936 பேர் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் மற்றைய மாகாணங்களை விட மூன்று பாடங்களிலும் சித்தியடைந்த அதிக மாணவர்களும், சகல பாடங்களிலும் சித்தியடையாதவர்களில் அதிக மாணவர்களும் தென் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். இதன்படி இந்த மாகாணத்தில் 18, 935 பேர் புதிய பாடத்திட்டத்திலும், 3064 பேர் பழைய பாடத்திட்டத்திலும் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்துள்ளதுடன், புதிய பாடத்திட்டத்தில் 2630 பேரும் பழைய பாடத்திட்டத்தில் 314 பேரும் சகல பாடங்களிலும் சித்திபெறத் தவறியுள்ளனர்.
இதேவேளை, வடமாகாணத்தில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் 7011 பேரும், பழைய பாடத்திட்டத்தின் கீழ் 1145 பேரும் சகல பாடங்களிலும் சித்தியடைந்துள்ளதுடன் அதே மாகாணத்தில் புதிய பாடத்திட்டத்தில் 947 பேரும், பழைய பாடத்திட்டத்தில் 153 பேரும் சகல பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர்.
மத்திய மாகாணத்தில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் 8525 பேரும், பழைய பாடத்திட்டத்தின் கீழ் 1809 பேரும் சகல பாடங்களிலும் சித்தியடைந்துள்ள அதேவேளை பழைய மற்றும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் மொத்தமாக 2129 பேர் சகல பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் 8525 பேரும், பழைய பாடத்திட்டத்தின் கீழ் 1112 பேரும் சகல பாடங்களிலும் சித்தியடைந்துள்ளதுடன் அந்த மாகாணத்தில் பழைய மற்றும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் 1276 பேர் சகல பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர்.
பரீட்சைத்திணைக்களத் தகவல்களின்படி புதிய பாடத்திட்டத்தின் கீழ் தோற்றியவர்களில் 1,28,809 பேரும் பழைய பாடத்திட்டத்தின் கீழ் தோற்றியவர்களில் 15,936 பேரும் பல்கலைக்கழகத் தெரிவுக்கான Z ஷிணீorலீ பெற்றுத் தகுதி பெற்றுள்ளனர். அத்துடன் மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்தி பெற்ற 9,057 பேரில் 5,280 பேர் பெண்களாவர்.
இந்த நிலையில் பெருமளவிலான மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ள போதும் இந்த முறை சுமார் 21ஆயிரம் மாணவர்களே பல்கலைக்கழகத்துக்கு அனுமதி பெறும் வாய்ப்பு உள்ளது. தற்போது பல்கலைக்கழக அனுமதிக்கு கடைப்பிடிக்கப்படும் மாவட்ட கோட்டா முறையின்படி இம்முறை பரீட்சைக்குத் தோற்றி 3 தி பெற்றவர்கள் கூட பல்கலைக்கழகப் படிக்கட்டுகளை மிதிக்க முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் 2 தி, கி பெற்றவர்களும் பல்கலைக்கழகத்துக்கு இலகுவாக அனுமதிபெறும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இம்முறை 3தி பெற்றவர்கள் கூட பல்கலைக்கழகம் புக முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை காணமுடிகின்றது. இதனை ஓர் உதாரணம் மூலம் குறிப்பிடலாம். கம்பஹா மாவட்டத்தில் 1064 வது இடத்திலுள்ள ஒரு பரீட்சார்த்தி 3தி பெற்றுள்ளார். ஆனால் அந்த மாவட்டத்தில் சுமார் 500 பேரே பல்கலைக்கழகத்துக்கு உள்வாங்கப்பட வாய்ப்பு உள்ளதால் 3தி பெற்ற குறிப்பிட்ட இந்த பரீட்சார்த்தி பல்கலைக்கு தெரிவாகும் சந்தர்ப்பம் அநேகமாக இழக்கப்படுகின்றது. நாட்டின் அநேகமான இடங்களில் இவ்வாறான நிலையே காணப்படுகின்றது.
தற்போது நடைமுறையிலுள்ள மாவட்ட கோட்டா முறையில் 40 சதவீதமானவர்கள் அகில இலங்கை ரீதியிலும் 55 சதவீதமானோர் திறமை அடிப்படையிலும் 5 சதவீதமானோர் பின்தங்கிய மாவட்ட அடிப்படையிலும் பல்கலைக்கழகத்துக்கு உள்வாங்கப்படுகின்றனர். எனவே 3 ஏ பெற்றவர்களுக்கே இந்த நிலை என்றால் நகரப்புறங்களிலுள்ள ஏனைய மாணவர்களின் நிலை என்னவாகும் என்பதை நாம் ஊகித்துப் பார்க்க முடியும்.
இம்முறை பரீட்சைப் பெறுபேறுகள் தோற்றுவித்திருக்கும் இந்தச் சிக்கலான நிலை கல்வியியலாளர்களைப் பெரிதும் சிந்திக்க வைத்துள்ளது. கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள இந்தக் குறைபாட்டை எவ்வாறு நிவர்த்திக்க முடியுமென்ற வினா பல்வேறு மட்டங்களில் எழுந்திருக்கும் நிலையில் பல்கலைக்கழக அனுமதியில் புதிய முறையொன்றை அறிமுகப்படுத்த திட்டங்கள் தீட்டப்படுகின்றன என்ற தகவல்களும் வெளிவந்துள்ளன. மாவட்ட சனத்தொகையை அடிப்படையாகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் பாராளுமன்றுக்கு எம்.பிக்களைத் தெரிவு செய்வது போன்று பல்கலைக்கழகத்துக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதாக இருப்பதாக கல்வியியலாளர்கள் கூறுகின்றனர். எனவே திறமைச் சித்தி அடிப்படையில் சகல மாவட்டங்களையும் உள்வாங்கும் வகையில் மாணவர்களை அனுமதிப்பது சிறந்தது என்ற கருத்தே தற்போதைய கல்விச் சமூகத்தில் மேலோங்கி இருக்கின்றது.
எனினும் எல்லா இடங்களிலும் வளப்பகிர்வு சமமாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பாக ஆசிரியர் பற்றாக்குறை இருக்கக்கூடாதெனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதன் மூலமே இந்த புதிய திட்டத்துக்கு வெற்றி கிடைக்கும் என இவர்கள் கருதுகின்றனர்.
1973-74ஆம் ஆண்டு காலப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட தரப்படுத்தல் முறை வடக்கு-கிழக்கு தமிழ் மாணவர்களை மிகவும் மோசமாகப் பாதித்ததால் ஏற்பட்ட விளைவுகளே இனப்பிரச்சினையின் தோற்றுவாய் என்பதை நாம் மறந்துவிட முடியாது. எனவே பல்கலை அனுமதி முறையில் மாற்றம் வேண்டும் என்ற கருத்து அனைவராலும் சிலாகிக்கப்படுகின்றது.
எனினும் பல்கலைக்கழக கல்வி எப்படி இருந்தபோதும் எதிர்கால சந்ததியினர் தொழில் மகத்துவத்தை உணர்ந்து தொழிலில் ஈடுபடக்கூடியவாறு கல்விச் செயற்பாடுகள் அமைய வேண்டும். நூலறிவு ஊட்டப்படுவது போல தொழில் சார்ந்த கல்வியில் அறிவும் திறமையும் பெற வாய்ப்பளிக்க வேண்டும். தொழில்நுட்பக் கல்லூரியின் தரம் உயர்த்தப்பட்டுத் தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்விக்கான பல்கலைக்கழகங்கள் உருவாகும் போது பட்டப்படிப்பை நாடி மாணவர்கள் இங்கேயும் கற்க வாய்ப்புக் கிடைக்கும்.
சுஐப் எம்.காசிம்... -
source thinakaran