
அகில இலங்கை முஸ்லீம் கல்வி மகாநாட்டின் பிரதிநிதிகள் புத்தளத்திற்குச் விஜயம் மேற்கொண்டு 2011 ஆம் ஆண்டில் வைத்திய, பொறியியல்துறைக்குத் தெரிவாகியுள்ள 5 மாணவர்களை கௌரவித்தனர்.
புத்தளத்தின் முன்னாள் பிரதியமைச்சரும் புத்தளம் நகர சபைத் தலைவருமான கே.ஏ.பாயிஸ் அவர்களின் முயற்சியில், புத்தளத்திலுள்ள பாடசாலைகளில் பயிலும் உயர்தர விஞ்ஞான மாணவர்களுக்காக தணியானதொரு விஞ்ஞானக் கல்லூரியொன்றை ஸ்தாபித்தார். அக் கல்லூரியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 2010 இல் ஆரம்பித்து வைத்தார்.
இக் கல்லூரியில் புத்தளத்தில் உள்ள சகல தமிழ் மொழி மூலமான கல்லூரிகளில் இருந்து க.பொ.சாதாரண தரம் சித்தியடைந்து விஞ்ஞான மற்றும் கணிதத் துறையில் கற்கும் மாணவர்களே சேர்த்துக் கொள்ளப்படுவர்.
இக் கல்லூரியில் 2012 ஆம் ஆண்டில் உயாதரப் பரீட்சை எழுதிய மாணவர்களுள் 60 வீதமாண மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
இக் கல்லூரியை ஆரம்பிப்பதற்கு பாரிய எதிர்ப்புக்கள் இருந்து வந்தன. தற்பொழுது இக் கல்லூரியின் கல்வி முன்னேற்றம் சகலரினதும் பாராட்டைப் பெற்று வருகின்றது. இக் கல்லூரியினை பார்வையிடவே 2010 ஆம் ஆண்டில் அகில இலங்கை முஸ்லீம் கல்வி மாநாட்டின் பிரதிநிதிகள் கலாநிதி ஹூசைன் இஸ்மாயிலின் தலைமையில் புத்தளத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.
அத்தோடு, கல்வி மாநாட்டின் பொருளாளர் பாருக் இப்றாஹீம், இக் கல்லூரியில் இருந்து வைத்தியர்களாக, பொறியியளாலர்களாகச் சித்தியடையும் மாணவர்களை முஸ்லீம் கல்வி மாநாடு கௌரவிக்கும் என அம் மாணவர்கள் மத்தியில் அன்று வாக்குறுதியளித்திருந்தார்.
அதனை நிறைவேற்றுவதற்காகவே கடந்த புதன்கிழமை (06.02.2013) கல்வி மாநாட்டின் செயலாளர் எம்.வை.பாவா, மர்ஹூம் பாருக் இப்றாஹிமின் புதல்வர் சல்மான் மற்றும் உறுப்பினர் ஹமீட் ஆகியோர் புத்தளத்திற்குச் சென்று இக் கல்லூரியிலிருந்து வைத்தியத் துறைக்குத் தெரிவான 4 பேரையும் பொறியியல்துறைக்கு தெரிவு செய்யப்பட்ட ஒருவரையும் பாராட்டி கௌரவித்தது.
இந் நிகழ்வில் கல்லூரியின் அதிபர் ஆசிரியர்கள் வலயக் கல்விப் பணிமனையின் அதிகாரிகள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இலங்கையில் தமிழ் மொழி முலம் முதன் முறையாக தனியானதொரு விஞ்ஞானக் கல்லூரியை ஆரம்பித்த பெருமை முன்னாள் பிரதியமைச்சர் கே. பாயிஸ் அவர்களை சாரும் அதற்காக அவரையும் கல்வி மாநாடு பாராட்டி கௌரவித்தது.
அத்துடன் கல்லூரி அதிபர் உட்பட விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியர்கள் 9 பேரையும் மாணவர்கள் 5 பேரையும் கௌரவித்தனர். ஆசிரியர்களைக் கௌரவிக்கும் விருதுகளை கவிஞரும் டாக்டருமான தாசிம் அஹமத் அணுசரனை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.






