இன்று சர்வதேசப் பாடசாலைகள் அதிகரிப்பது போன்று முஸ்லிம் சமூகத்தில் ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலும் முன்பள்ளிகளும் குர்ஆன் மத்ரஸாக்களும் முளைத்து வருகின்றன. சுற்றியிருப்போர் எல்லோரும் நம்மிடம்தான் வந்தாக வேண்டும் என்ற நம்பிக்கையில் பலரும் இவ்வாறான கல்வி நிறுவனங்களைத் தொடங்குகின்றனர். வீட்டில் இருந்தவாறே பீடி சுற்றுதல், கயிறு திரித்தல் போன்று முன்பள்ளியும் மத்ரஸாவும் பல இடங்களில் ஒரு வீட்டுக் கைத்தொழிலாகவே மாறி வருகின்றது.
தர மதிப்பீடு செய்ய யாருமில்லை என்ற ஒரே நம்பிக்கையில்தான் இத்தனை மத்ரஸாக்களும் முன்பள்ளிகளும் தொடங்கப்படுகின்றன. குறிப்பிட்ட சீருடையுடன் மாணவர்கள் முற்சக்கர வண்டிகளில் வந்து இறங்கிவிட்டால் நாம் சரியாகவே பள்ளிக்கூடம் நடத்துகின்றோம் என அதனை நடத்துகின்றவர்கள் எண்ணுகின்றனர்.
குர்ஆனை திறம்பட கற்பிப்பதிலும் மாணவர்கள் அதை எந்தளவு உள்வாங்குகின்றார்கள் என்பதைப் பரிசீலிப்பதிலும் தேவையான அக்கறை இல்லாமலேயே போய்விட்டது. விதிவிலக்காக சில குர்ஆன் மத்ரஸாக்கள் இயங்குகின்றபோதும், பொதுவாக மேலே சொன்ன நிலமை நீடிப்பதை மறுக்க முடியாது. குர்ஆன் பள்ளிகளில் ஆசிரியர்களது பணி என்ன என்பதும் தெளிவற்றதாகவே உள்ளது.
ஏனெனில், வீட்டில் பல்வேறு சோலிகளுக்கு மத்தியில் பெற்றோர்தான் பிள்ளைகளுக்குக் குர்ஆன் பாடம் சொல்லித் தருகிறார்கள். தஜ்வீத் முறைப்படி ராகத்தோடு ஓதப் பழக்குவதும் அவர்கள்தான். இவ்வாறு வீட்டில் ஓதப் பழகியதை பாடம் கொடுப்பதற்கு மத்ரஸா ஆசிரியர்களிடம் அவர்கள் அனுப்பப்படுகின்றனர்.
இவ்வாறு அனுப்பப்படும் மாணவர்களுக்கு பெற்றோர்கள் கொடுக்கும் விலை மிகவும் அதிகம். சிலபோது குர்ஆன் மத்ரஸாக்களில் பாடம் சொல்லாத மாணவர்களைத் தடிகளினால் தண்டிக்கின்ற ஆசிரியர்கள் இன்னும் உள்ளனர்.
முன்பள்ளியிலும் இதுபோன்ற அவலமே நீடிக்கின்றது. மாணவர்களின் அடிப்படை உளவியல் தேவைகள் குறித்த எந்தப் பின்னணி அறிவும் இல்லாதவர்கள் ஆசிரியர்களாக அமர்த்தப்படுகின்றனர். அனேகமானோர் பெண்கள். அவர்களுக்கு எவ்விதப் பயிற்சியோ அனுபவமோ இல்லை. ஆனால், இதிலுள்ள வினோதமான விடயம் என்னவெனில், முன்பள்ளிகளை நடத்தும் முதலாளிகளுக்கு இத்தகைய வலுவூட்டல் நிகழ்ச்சிகள் ஆசிரியர்களுக்கு அவசியம் என்பதில் எவ்வித அக்கறையும் இல்லாமல் இருப்பதே.
வணிக நிறுவனங்களுக்கும் குறைந்தபட்ச சமூக சேவை மனப்பாங்கு அவசியம். இல்லாதபோது புற்றீசல்கள் போல் பரவும் முன்பள்ளிகளும் குர்ஆன் மத்ரஸாக்களும் சமூகத்தின் எதிர்பார்க்கைகளை நிறைவேற்றும் இடத்தில் இருக்காது. ஸ்தாபகர்கள் இது குறித்து கொஞ்சமேனும் சிந்திக்கட்டும்.
source- meelparvai