பல்கலைக்கழகத்தின் புதிய கல்வி ஆண்டிற்கு கலை பிரிவில் தெரிவாகியுள்ள மாணவர்களுக்கு தொழில் சந்தைக்கு ஏற்ற வகையிலான புதிய பாடத்திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு உயர்கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்த மாணவர்களுக்கு தமது பாடத்திட்டத்திற்கு அப்பால் சென்று கல்வி பயில்வதற்கான சந்தர்ப்பம் இதனூடாக அறிமுகப்படுத்தப்படுவதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கலை பீடத்திலுள்ள மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறியதன் பின்னர் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் அதனை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில் ஆங்கில பட்டப்படிப்பு, மும்மொழி பட்டப்படிப்பு, சுற்றுலாத்துறை பட்டப்படிப்பு போன்ற புதிய பாடத்திட்டங்களை ஆங்கில மொழியில் அறிமுகப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறும் மாணவர்களுக்கு மொழி தொடர்பிலான பிரச்சினை காணப்படுகின்றமையால் தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதில் அவர்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டுகிறார்.