Monday, January 14, 2013
பாடசாலைகளில் பிள்ளைகளை அறிதல் நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கியத்துவம் பேணப்படுவதன் அவசியம்.
Monday, January 14, 2013
EDUCATION GUIDE
எஸ்.எல்.மன்சூர் (கல்விமாணி)இலங்கையின் புதிய கல்விச் சீர்திருத்தமானது கடந்த 1998ல் ஆரம்பமாகி 1999ல் நாடுமுழுவதும் அமுலுக்கு வந்தது.
ஆரம்பகல்விச் சீர்திருத்தத்திற்கமைய புதிய நடைமுறைகளும் கொள்கைகளும் ஆரம்பமாகின.
அந்த அடிப்படையில் ஆரம்பக் கல்விக் கலைத்திட்டத்திலும் விசேட சிறப்புக்கள் அடங்கிய பின்வரும் விடயங்களும் உருவாக்
கம் பெற்றன. புதிய கட்டமைப்பு பிள்ளையை இனங்காணல் தேர்ச்சிமைய கலைத்திட்டம் அதற்கான பாடங்கள் வாய்மொழியிலமைந்த ஆங்கிலம் இணைத்தலும் ஒன்று சேர்த்தலும் இணைக்கலைத்திட்டமும் விருப்பத் தெரிவு நடவடிக்கைகளும் கற்றல் கற்பித்தல் செயல்முறைகள் அத்தியவசியக் கற்றல் தேர்ச்சிகள் புதிய அடிப்படையிலமைந்த மதிப்பீடு ஒவ்வொரு முதன்மை நிலைக்கும் கற்பிக்கவென ஓரே ஆசிரியர்கள் வயதான பிள்ளைகளுடன் குழுவேலைகளில் ஈடுபடல் போன்ற சிறப்புக்களை உள்ளடக்கியவாறு ஆரம்பமாகிய இக்கலைத்திட்டத்தில் புதிதாக பிள்ளைகள் தரம் ஒன்றில் (முதன்மைநிலை ஒன்றில்) சேருகின்ற பிள்ளைகளை ஆசிரியர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு இத்திட்டம் முன்னெடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அந்த அடிப்படையில் தரம் ஒன்றில் பிள்ளையைச் சேர்க்கும்போது ஆசிரியர் பயன்படுத்தக்கூடியவாறு விளையாட்டுப் பொருட்கள் மற்றும் செயற்பாடுகள் கொண்ட இச்செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்;துவதன் முக்கியத்துவம் பற்றி ஆசிரியர்கள் அறிந்திருத்தல் அவசியமாகும். பிள்ளைகளை தனித்தனியாகவும் அல்லது சிறு குழுக்களாகவும் அச் செயற்பாடுகளில் ஈடுபடுத்தி அவர்களின் விருத்திக்குத் தேவையான உதவி மற்றும் திறன்கள் ஆகியவற்றின் பரப்புக்களை ஆசிரியரால் இனங்கண்டு பிள்ளையின் கல்வி சம்பந்தமான சுய தகவல்களும் சேகரிக்கப்படுவதுடன் ஒவ்வொரு பிள்ளையையும் தனித்தனியாக அறிந்து அவர்களுக்கு பொருத்தமான வகையில் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளைத் திட்டமிடவும் இது உதவியாக அமைகின்றது.
பாடசாலைகளில் தரம் ஒன்றில் புதிதாக சேருகின்ற மாணவர்களை பாடசாலை மையத்தினுள் உள்வாங்குவதற்கான நடவடிக்கை கல்வியமைச்சினது அறிவுறுத்தலின் பிரகாரம் 'வித்தியாரம்பம்' நிகழ்வு பாடசாலைதோறும் நடைபெறுவது அனைவரும் அறிந்த விடயமாகும். புத்தாண்டில் பாடசாலைகள் ஆரம்பித்து இரு வாரங்கள் கழிந்ததன் பிற்பாடு இவ்வாறான நிகழ்வினை அதிபர்கள் ஆசிரியர்கள் இணைந்து சமூகத்தின் துணையுடன் நடாத்துதல் வேண்டும்.
இத்தினமானது அந்தப்பிள்ளையின் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு நிகழ்வாகவும் முதல் நாள் அனுபவம் என்பது பசுமரத்தாணிபோல பதியும்படியும் பாடசாலையானது வீட்டுச் சூழலின் அடுத்த கட்டத்திற்கான நகர்வாகவும் அந்த மாணவனுக்கு அமையும்படி பாடசாலையின் அன்றைய நாள் அமைய வேண்டும். இது மாணவனின் உள்ளத்தில் பாடசாலையைப் பற்றிய பயவுணர்வுகள் அற்ற நிலையைத் தோற்றுவிப்பதுடன் கற்கின்ற ஒரு சூழ்நிலைக்குள் தன்னை நிலைநிறுத்தவும் உதவும்படியாக இச்செயற்பாடுகள் அமையவேண்டும் எனபதற்காக தேசிய நிகழ்வாக இவ்விழாக்கள் நடைபெறுவது அவசியமாகும்.
இதற்கு முன்னோடியாக பாடசாலையில் சேர்கின்ற பிள்ளைகளை சில பாடசாலையின் அதிபர்களும் ஆசிரியர்களும் விழா நடைபெறுகின்ற தினத்திற்கே வரும்படி அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இது ஒருபிழையான நடவடிக்கை என்பதை கல்வியோடு சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொள்ளல் வேண்டும். அண்மையில் ஒரு பாடசாலையின் அதிபர் தன்னுடைய பாடசாலையில் புதிதாக சேர்ந்த மாணவர்கள் அனைவரையும் வித்தியாரம்ப நிகழ்வு நடைபெறும் தினத்தில் வரும்படி பெற்றோர்களிடம் கூறியிருந்தார்.
அப்போது விடயத்தைத் தெரிந்து கொண்ட மாணவனின் பெற்றார் ஒருவர் 'பிள்ளையை அறிந்து கொள்ளல்' எனும் செயற்றிட்டம் பாடசாலை தொடங்கிய இருவாரகாலத்திற்கு ஆசிரியரால் அமுல்படுத்தப்படுவது பற்றி விசாரித்தபோது ஆசிரியரும் அதிபரும் தன்னுடைய இயலாமையை எண்ணி தலைகுணிந்து கொண்டனர். இவ்விடயம் பற்றி இன்னுமொரு ஆசிரியரிடம் வினவியபோது தனக்கு இது பற்றி எதுவுமே தெரியாது என்றும் கூறினார். ஆரம்பக்கல்விப் புலத்தில் கற்பிக்கின்ற இவ்வாசிரியரின் நடத்தைக் கோலத்தை என்வென்று கூறுவது.
கல்வி மறுசீரமைப்பின் பிரகாரம் கடந்த 1999ஆம் ஆண்டிலிருந்து பிள்ளையை அறிந்து கொள்ளல் எனும் புத்தம்சம் நடைமுறையிலிருந்து வருகின்றது. இதற்கான வேலைத்திட்டம் அடங்கிய கைநூல் ஒன்றும் 1995 ஆண்டு வெளியிடப்பட்டு அதற்கான பயிற்சிகளும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதிலும் சில பாடசாலைகளின் ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள் இதில் அதிக கவனம் செலுத்துவதில்லை என்கிற குறைபாடுகளும் எழுந்துள்ளன.
இந்நிலையில் இதனை அறிந்து கொள்ளும் முகமாக இதுபற்றிய விளக்கத்தை விபரமாக அறிந்துகொள்வோம். அதாவது பிள்ளையை அறிந்து கொள்ளல் எனும் வேலைத்திட்டத்தை மேலும் விருத்தி செய்யும் நோக்குடன் 16 செயற்பாடுகள் இரசனைமிக்கதான அடிப்படையில் முன்னெடுக்கப்படுதல் அவசியமாகும். கல்வியமைச்சினால் அறிவுறுத்தப்பட்டு தரம் 1இல் பிரவேசிக்கும் பிள்ளைகளை அறிந்து கொள்வோம் எனும் தலைப்பிட்டு முன்பள்ளிப் பருவ அபிவிருத்தியும் கனிஷ்ட நிலைக்கல்வித் திணைக்களம் தேசிய கல்வி நிறுவகத்தினால் வெளியிடப்பட்டுள்ள நூலிலும் இது தொடர்பான விளக்கங்கள் தெளிவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பாடசாலைகளில் பதினாறு செயற்பாடுகளையும் முழுமையாக அந்த மாணவர்களிடையே மேற்கொள்கின்றபோது பின்வரும் குறிக்கோள்களை அடையும் நோக்குடன் திட்டமிடப்படுதல் முக்கியமாகும்.
Ø முதலாந்தரத்தில் பிரவேசிக்கும் பிள்ளைகளிடத்தே பாடசாலை தொடர்பான விருப்பத்தை ஏற்படுத்தல்.
Ø முதலாந்தரத்தில் பிரவேசிக்கும் பிள்ளைகளுக்கு இடையே நட்பை உருவாக்கல்.
Ø மாணவருக்கும் ஆசிரியருக்குமிடையே நட்பை உருவாக்கல்
Ø மாணவரின் உள்ளார்ந்த ஆற்றல்களை வருட ஆரம்பத்திலேயே இனங்காண்பதற்கு ஆசிரியருக்கு வாய்ப்பளித்தல்
Ø முதலாந்தரத்தில் முறைசார் கல்விக்காகப் பிரவேசிக்கும் மாணவரின் உள்ளார்ந்த ஆற்றல்களை எதிர்காலக் கல்விச் செயன்முறையின் தரத்தை மேம்படுத்துவதற்காகப் பயன்படுத்தல் ஆகியன இதன் நோக்காகக் கொள்ளப்படுகின்றது.
இதுதொடர்பான திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படுகின்ற காலத்தில் பின்வரும் விடயங்கள் தொடர்பாகவும் ஆசிரியர்கள் அதிக கவனம் செலுத்துதல் அவசியமாகும்.
Ø பிள்ளையை அறிந்து கொள்ளல் எனும் வேலைத்திட்டத்தின் குறிக்கோள்கள் இவ்வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விதம்.
Ø ஆரம்பத்திலேயே பெற்றோருக்கு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தல்
Ø முதலாந்தரத்திற்கு மாணவர்களை சேர்க்கும் உத்தியோகபூர்வ நிகழ்வுக்கு சுமார் இரு வாரங்களுக்கு முன்னர் இவ்வேலைத்திட்டத்தை நடாத்துதல்
Ø மாணவர்கள் மகிழ்ச்சியுடனும் இரசனை பெறத்தக்கதாகவும் அந்த இரு வாரங்களை உருவாக்கிக் கொடுத்தல்.
Ø வகுப்பு மாணவர்கள் சகலருக்கும் கூட்டாகப் பங்குபெறத்தக்க வகையில் அமைத்தல்
Ø முதலாவது செயற்பாடான விளையாட்டு வீடுகள் மூலம் இவ்வேலைத்திட்டத்தை ஆரம்பித்தல்
Ø இவ்வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலப்பகுதியில் பாடசாலைச் சீருடையிலன்றி சாதாரண உடையிலும் பிள்ளைகள் பாடசாலைக்கு வருதல்
இவ்வாறாக கவனம் செலுத்துகின்றபோது மாணவர்கள் தங்களது வீட்டின் சூழலில் இருப்பதுபோலவும் தனது தாய் தந்தையரிடமிருந்து பிரிந்துள்ளதை மறந்து பாடசாலையின் கற்றல் நடவடிக்கைகளில் ஆசிரியர்களின் அன்பான பேச்சில் நடத்தையில் கட்டுண்டு போவார்கள் என்பதற்கு கீழே வரும் பதினாறு செயற்பாடுகளும் முக்கியத்துவமிக்கதாக அமைகின்றது. அந்தவகையில் பின்வரும் தலைப்புக்களில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.
01. விளையாட்டு வீடு
02. சுதந்திரமான செயற்பாடுகள்
03. குழு விளையாட்டு - 1
04. குழு விளையாட்டு - 11
05. ஆடல் பாடல் அபிநயம்
06. கதையில் வரும் பாத்திரங்களைப் பாவனை செய்தலும் பல்வேறு ஒலிகளை எழுப்புதலும்
07. பாத்திரங்களைப் பாவனை செய்தலும் ஒலிகளை எழுப்புதலும்;;;
08. விளையாட்டு முற்றம்
09. வெட்டுதல் குறித்த எல்லையினுள் நிறந்தீட்டுதல்
10. ஆக்கச் செயற்பாடுகள்- 1
11. ஆக்கச் செயற்பாடுகள் - 11
12. கதை – சித்திரம் வரைதல்
13. ஊர்வலம்
14. எண்ணுதல்
15. பொருள்களை எண்ணுதல்ஃஎண் விளக்கம்
16. எண் விளக்கம்
மேற்படி செயற்பாடுகளை மேற்கொள்ளுகின்றபோது பின்வரும் குறிக்கோள்களை அடைவதும் முக்கியமாகும்.
பாடசாலையில் நண்பர்களுடன் விளையாடி மகிழ்ச்சியாகச் செயல்படக்கூடிய ஓர் இடம் எனும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ளல் குழுவாகவோ தனியாகவோ ஆக்கபூர்வமாக பொருட்களைக் கையாண்டு மகிழ்ச்சியடைதல் இலகுவான கட்டளைகளைப் பின்பற்றி விளையாட்டில் ஈடுபடுதல் தெரிதல் பொருத்துதல் தெடர்பான குழு விளையாட்டில் ஈடுபடுவதையும் இசையோடும் அபிநயத்துடனும் பாடல்களை பாடுவதையும் பாவனை செய்து விளையாடி மகிழ்வதையும் பாத்திரங்களையும் ஒலிகளையும் பாவனை செய்து மகிழ்ச்சியடைவதையும் விளையாட்டு முற்றத்தில் விளையாடி மகிழ்வதையும் படங்களை வெட்டி ஒட்டும் கைத்திறன் செயற்பாடுகளை வெளிப்படுத்தும் குழுச் செயற்பாடுகளில் ஈடுபட்டு மகிழ்ச்சியடைவதையும் கதையை செவிமடுத்து மகிழ்ச்சியடைவதையும் ஆக்கத்திறன்கள் அழகியல் ஆற்றல்கள் ஆகியவற்றை வெளிப்படுத்துவதிலும் 1தொடக்கம் 5 வரையில் எண்ணி விளையாடுவதிலும் பூக்களை எண்ணியவாறு விளையாடுவதிலும் உருவங்களின் எண்ணிக்கை தொடர்பாக விளையாடி மகிழ்வதையும் நோக்கமாகக் கொண்டு இப்பயிற்சிகள் அனைத்தும் ஆசிரியரால் முன்னெடுக்கப்படுதல் அவசியமாகும். இதன் ஊடாக மாணவர்கள் காண்பிக்கும் நிலைமைகளை அவதானித்து அடிப்படைத் தகவல்களை உரிய படிவத்தில் பதிவுசெய்வதையும் கவனத்திற் கொள்ளல் வேண்டும்.
எனவே ஒவ்வொரு பிள்ளையினதும் ஆற்றல்களைக் குறிப்பாக இனங்காண முயற்சி செய்வதுடன் இறுதியாக 28 நியதிகளைக் கொண்ட கணிப்பீடுகளையும் கணிப்பிடுதல் முக்கியமாகும். ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் கூறப்பட்டுள்ள உத்தேச குறிக்கோள்களை அடையத்தக்க வகையிலும் மாணவர்களின் ஆற்றல்களை இனங்காணும் வகையிலும் தாமாகத் தயார்படுத்தி செயற்பாடுகளை சுதந்திரமான முறையில் ஆசிரியர் செயற்படுதல் சிறப்பாக அமையும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள குறிக்கோள்களை அடைவதனூடாக பாடசலையைப் பிள்ளைகள் விரும்பும் ஓரிடமாக மாற்றி கற்றல் கற்பித்தல் செயன்முறையை உருவாக்குவதற்கு இவ்வேலைத் திட்டம் துணையாக அமையும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.