Saturday, January 19, 2013
அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா?
Saturday, January 19, 2013
Article
அஷ்ஷெய்க் தாஹிர் எம் நிஹால் (அஸ்ஹரி)
அதிபர், கதீஜதுல் குப்ரா மகளிர் கல்லூரி, வடதெனிய‘‘வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பதற்கு அல்லாஹ்வே சான்று பகர்கின்றான். மேலும், அந்த வல்லமைமிக்க நுண்ணறிவாளனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்பதற்கு வானவர்களும் அறிவுடையோரும் நேர்மையிலும் நீதியிலும் நிலைத்த வண்ணம் சான்று பகர்கின்றனர்.’’ (3: 18)
இமாம் இப்னுல் கையிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் ‘மிப்தாஹு தாருஸ் ஸஆதா’ எனும் நூலில் ‘கல்வியின் சிறப்பும் அதன் மகத்துவமும்’ எனும் தலைப்பில் மிகவும் ஆழமாக ஆராய்ந்து அழகிய கருத்துக்களை முன்வைத்துள்ளார். இதில் கல்வியின் சிறப்பை விளக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதாரங்களை குர்ஆன், சுன்னாவிலிருந்து மிகவும் அற்புதமாகத் தொகுத்துத் தந்துள்ளார். இவ் ஆதாரங்கள் அனைத்திலும் மேற்குறிப்பிட்ட வசனத்தை முதன்மைப்படுத்தி, அது எவ்வாறு கல்வியின் சிறப்பை விவரிக்கின்றது என்பதனைத் தெளிவுபடுத்த பின்வரும் குறிப்புக்களை வழங்கியுள்ளார்:
1. மனிதர்களில் அறிஞர்களை மாத்திரம் குறிப்பிட்டு சான்று பகர்ந்துள்ளமை.
2. அல்லாஹ்வுடைய சாட்சியுடன் அறிஞர்களின் சாட்சியத்தை இணைத்துக் குறிப்பிட்டுள்ளமை.
3. வானவர்களின் சாட்சியுடன் சேர்த்து கல்விமான்களின் சாட்சியத்தை குறிப்பிட்டுள்ளமை.
4. அல்லாஹுத் தஆலா சாட்சியாளர்களாக ஆக்கியவர்கள் நிச்சயம் நீதமானவர்களாகவே இருப்பார்கள். இதில் கல்விமான்கள் போற்றப்பட்டும் தூய்மைப்படுத்தப்பட்டும் உள்ளமை.
5. கல்விமான்களைக் குறிக்கும் ‘உலுல் இல்ம்’ எனும் சொற் பிரயோகம் அவர்கள் கல்வியின் உரித்தாளிகள், சொந்தக்காரர்கள் என்பதும் கல்வி அவர்களிடத்தில் இரவல் வாங்கப்பட்ட ஒன்றல்ல என்பதும் எடுத்துக் காண்பிக்கப்பட்டுள்ளமை.
6. சாட்சியாளர்களில் மிகவும் உயர்வும் கண்ணியமும் உடைய அல்லாஹுத் தஆலா முதலில் சாட்சி பகர்ந்து, அடுத்ததாக அவனது சிருஷ்டிகளில் மிகவும் உன்னதமான சிருஷ்டிகளாகிய வானவர்களையும் மனிதர்களில் அறிஞர்களையும் கொண்டும் சாட்சி பகர்ந்துள்ளமை.
7. எதற்காக இங்கு சாட்சியம் கூறப்பட்டுள்ளதோ அது உலகிலேயே மிகவும் உன்னதமான உயர்வான ஒரு விடயமாகும். அது ஏகத்துவத்தைக் குறிக்கும் எனும் உயர் கலிமாவாகும். உயர்வான ஒரு விடயத்துக்கு உயர்வானவர்களைக் கொண்டே சாட்சி கூறப்படுவதுதான் பொருத்தமானது.
8. அறிவுடையோர்களின் சாட்சியத்தை நிராகரிப்போருக்கு ஆதாரமாக ஆக்கியிருப்பது அவர்கள் ஏகத்துவத்தின் அத்தாட்சிகளாகவே திகழ்கின்றார்கள் என்பதையே குறிக்கும்.
கல்வியின் சிறப்பைக் குறிக்கும் இவ்வசனம் அல்லாத வேறு பல வசனங்களையும் இமாம் இப்னுல் கையிம் (ரஹிமஹுல்லாஹ்)அவர்கள் அழகாகத் தொகுத்துள்ளார். அவற்றில் ஒரு சில வசனங்களை மிகவும் சுருக்கமாக முன்வைக்கின்றோம்.
1. சுவனவாதிகளும் நரகவாதிகளும் சமமாகாததைப் போன்று அறிவுடையோரும் அறிவில்லாதோரும் சமமாக மாட்டார்கள்.
‘‘எவர் மறுமையை அஞ்சி தன் இறைவனுடைய ரஹ்மத்தை ஆதரவுவைத்து இராக் காலங்களில் ஸுஜூது செய்தவராகவும் நிலையில் நின்றவராகவும் வணங்குகிறாரோ அவர் (நிராகரிப்பவரைப் போல்) ஆவாரா? (நபியே!) நீர் கூறும்: அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக (இக்குர் ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள்தாம்.’’ (39: 9)
‘‘நரகவாசிகளும் சுவர்க்கவாசிகளும் சமமாக மாட் டார்கள். சுவர்க்கவாசிகளே பெரும் பாக்கியம் உடையோர்.’’ (59: 20)
2. அறியாமையில் மூழ்கியுள்ளவன் பார்வையை இழந்த குருடனுக்கு சமமானவன்.
‘‘உம் இறைவனால் உம் மீது நிச்சயமாக இறக்கப்பட்ட (வேதத்)தை உண்மையென அறிகிறவர் குருடராக இருப்பவரைப் போலாவாரா? நிச்சயமாக (இவ்வேதத்தின் மூலம்) அறிவுடையவர்கள்தாம் நல்லுபதேசம் பெறுவார்கள்.’’ (13: 19)
3. அறிவுடையோரே சத்தியத்தை அடைந்து கொள்வர்.
‘‘எவர்களுக்குக் கல்வி ஞானம் அளிக்கப் பட்டுள்ளதோ, அவர்கள் உமக்கு உம்முடைய இறைவனிடமிருந்து அருளப் பெற்ற (இவ்வேதத்)தை உண்மை என்பதையும் அது வல்லமைமிக்க, புகழுக்குரியவனின் நேர்வழியில் சேர்க்கிறது என்பதையும் காண்கிறார்கள்.’’ (34: 6)
4. மேலதிகத்தை வேண்டி பிரார்த்திக்குமாறு நபி அவர்களுக்குப் போதிக்கப்பட்டதும் கல்விச் செல்வமாகும். ஆகவே, உண்மை அரசனாகிய அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்.
‘‘இன்னும் (நபியே!) உமக்கு (குர்ஆனின்) வஹி அறிவிக்கப்பட்டு அது முடிவதற்கு முன்னதாகவே குர்ஆனை ஓத நீர் அவசரப்படாதீர். இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக!’’ (20: 114)
5. அல்லாஹுத் தஆலா கல்வி ஞானமுடையோரின் அந்தஸ்தை உயர்வடையச் செய்கின்றான்.
‘‘ஈமான் கொண்டவர்களே! சபைகளில் நகர்ந்து இடம் கொடுங்கள் என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், நகர்ந்து இடம் கொடுங்கள் அல்லாஹ் உங்களுக்கு இடங்கொடுப்பான். தவிர, எழுந்திருங்கள் என்று கூறப்பட்டால், உடனே எழுந்திருங்கள். அன்றியும், உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும் கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான். அல்லாஹ்வோ நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.’’ (58: 11)
6. கல்வி ஞானமுடையோர் அல்லாஹ்வை மிகவும் அஞ்சக் கூடியவர்கள்.
‘‘இவ்வாறே மனிதர்களிலும் ஊர்வனவற்றிலும் கால்நடைகளிலும் பல நிறங்கள் இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சுவோரெல்லாம் அறிஞர்கள்தாம். நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன் மிக மன்னிப்பவன்.’’ (35: 28)
7. அல்லாஹ்வின் அருட்கொடைகளில் கல்வி மிக மகத்துவம் வாய்ந்த அருட்கொடையாகும்.
‘‘(நபியே!) உம் மீது அல்லாஹ்வின் அருளும் அவனுடைய கிருபையும் இல்லாதிருந்தால், அவர்களில் ஒரு கூட்டத்தார் உம்மை வழிதவறி நடக்கும்படி செய்ய முயன்றிருப்பார்கள். ஆனால், அவர்கள் தம்மையே அன்றி வழி தவறும்படி செய்ய முடியாது. இன்னும் அவர்களால் உமக்கு எவ்விதமான தீங்கும் செய்துவிட முடியாது. மேலும் அல்லாஹ் உம்மீது வேதத்தையும் ஞானத்தையும் இறக்கியுள்ளான். நீர் அறியாதிருந்தவற்றையும் அவன் உமக்குக் கற்றுக் கொடுத்தான். உம்மீது அல்லாஹ்வின் அருட்கொடை மகத்தானதாகவே இருக்கின்றது.’’ (4: 113)
8. கல்வியை அல்லாஹுத் தஆலா வாழ்வாகவும் ஒளியாகவும் ஆக்கியுள்ளான்.
‘‘மரணமடைந்த ஒருவனை நாம் உயிர்ப்பித்து எழுப்பினோம். இன்னும் அவனுக்கு ஓர் ஒளியையும் கொடுத்தாம். அதைக் கொண்டு அவன் மனிதர்களிடையே நடமாடுகிறான். மற்றொருவன் இருள்களில் சிக்கிக் கிடக்கிறான். அதைவிட்டு அவன் வெளியேறவே முடியாது. இவ்விருவரும் சமமாவாரா? இவ்வாறு நிராகரிப்பவர்களுக்கு அவர்கள் செய்யக்கூடிய (பாவச்) செயல்கள் அழகாக்கப் பட்டுள்ளன.’’ (6: 122)
9. வேட்டைக் கலை கற்பிக்கப்பட்ட நாய், கற்பிக்கப்படாத நாயை விட மிகவும் சிறந்ததாகும்.
அதாவது, கற்பிக்கப்பட்ட நாய் வேட்டையாடியதை உண்பதை முஃமின்களுக்கு அல்லாஹுத் தஆலா ஆகுமாக்கி வைத்துள்ளான்.
‘‘(நபியே!) அவர்கள் (உண்பதற்குத்) தங்களுக்கு ஹலாலான (அனுமதிக்கப்பட்ட)வை எவை என்று உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும் உங்களுக்கு ஹலாலானவை, சுத்தமான நல்ல பொருள்களும் அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கின்றபடி வேட்டையாடும் பிராணி, பறவைகளுக்கு நீங்கள் பயிற்சியளித்து அவை வேட்டையாடி நீங்கள் பெற்றவையையும் புசியுங்கள். எனினும், நீங்கள் (வேட்டைக்கு விடும்போது) அதன்மீது அல்லாவின் பெயரைக் கூறி விடுங்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகவும் விரைவானவன்.’’ (5: 4)
10. கல்வியைத் தேடிச் சென்ற மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வரலாற்றைக் குறிப்பிட்டு அல்லாஹ் ஸூரா அல்கஹ்பில் விளக்கியுள்ளான்.
‘‘(இவ்வாறு) அவ்விருவரும் நம் அடியார்களில் ஒருவரைக் கண்டார்கள். நாம் அவருக்கு நம்மிடமிருந்து கிருபை அருளியிருந்தோம். இன்னும் நாம் அவருக்கு நம்மிடமிருந்து கல்வி ஞானத்தையும் கற்றுக் கொடுத்திருந்தோம். உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட நன்மையானவற்றை நீங்கள் எனக்குக் கற்பிக்கும் பொருட்டு, உங்களை நான் பின்தொடரட்டுமா? என்று அவரிடம் மூஸா கேட்டார்.’’ (18: 65,66)
11. புனித அல்குர்ஆனின் முதலாவது இறக்கிவைக் கப்பட்ட வசனத்தை கல்வியின் அவசியத்தை வலியுறுத்தியே அல்லாஹுத் தஆலா இறக்கி வைத்துள்ளான்.
‘‘(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.’’ (96: 1)
கல்வியின் சிறப்பை விளக்கும் இவ்வாறான பல குர்ஆனிய வசனங்களை முன்வைத்து பல ஹதீஸ்களையும் இமாம் இப்னுல் கையிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தொகுத்துத் தந்துள்ளார்கள். அவற்றில் ஒரு ஹதீஸை மாத்திரம் முன்வைக்கின்றோம். இதில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கல்வியை நீண்ட நாள் வரட்சியின் பின் பொழியும் பெரு மழைக்கு ஒப்பிட்டு பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்:
‘‘அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் கல்வி ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையானது, பூமியில் பொழிந்த பெரு மழை போன்றதாகும். அப்பூமியில் ‘நகிய்யா’ என்று அழைக்கப்படும் செழிப்பான ஒரு பகுதி, மழை நீரை உள்வாங்கி ஏராளமான புற்களையும் செடி கொடிகளையும் முளைக்கச் செய்தது. அப்பூமியில் ‘அஜாதிப்’ என்று அழைக்கப்படும் கரடுமுரடான ஒரு பகுதியும் இருந்தது. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொண்டது. அதனை அல்லாஹ் மனிதர்களுக்கு பயன்படச் செய்தான். அதனை மனிதர்கள் அருந்தினர் தமது கால்நடைகளுக்கும் புகட்டினர் விவசாயமும் செய்தனர். மேலும் அப்பெருமழை ஷகீஅன்என்று அழைக்கப்படும் (ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரையிலும் பொழிந்தது. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை. புற்பூண்டுகளை முளைக்க விடவும் இல்லை. இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று நான் கொண்டுவந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து, பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும் நான் கொண்டு வந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர்வழியை ஏற்றுக் கொள்ளாமலும் வாழ்பவனுக்குமான உவமையாகும்.’’ (அல்புகாரி)
கல்விக்கு மழை நீரை உவமையாக்கியிருப்பது, மனிதனுக்கு நீரின் அவசியத்தைப் போன்று கல்வியின் அவசியத்தை வலியுறுத்துவதாகவே அமைந்துள்ளது. மனிதன் தனது அனைத்துப் பயன்களையும் அடைந்து கொள்வதற்கு நீர் அடிப்படையாக இருப்பது போன்று கல்வியும் மனிதனின் அடிப்படைத் தேவையாகவே உள்ளது.
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் கருத்துப்படி, மனிதனுடைய அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகிய உணவு, பானத்தை விடவும் கல்வியின் தேவை மிக முக்கியமானதாகும். ஏனெனில், மனிதன் ஒரு நாளைக்கு இரு முறை உணவு உட்கொண்டால் போதுமானதாகும். ஆனால், கல்வியைப் பொறுத்தவரை மனிதன் தனது ஒவ்வொரு மூச்சுடனும் எந்நேரமும் தேவையுடையவனாகவே உள்ளான்.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸின் உள்ளடக்கத்தினை பின்வரும் வசனத்திலும் கண்டு கொள்ள முடியும் என்பதுவே இமாம் இப்னுல் கையிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் கருத்தாகும்.
‘‘அல்லாஹ் வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்தான். ஒவ்வொரு நதியும் ஓடையும் தம் கொள்ளளவிற்கு ஏற்ப நீரால் நிரம்பி ஓடியது. பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அதன் மேற்பாகத்தில் பொங்கும் நுரையைச் சுமந்து செல்கிறது. நகைகள்,பாத்திரங்கள் போன்றவற்றைச் செய்வதற்காக மக்கள் உலோகங்களை நெருப்பில் உருக்கும்போதும் இதே போன்ற நுரை ஏற்படுகிறது. அல்லாஹ் இவற்றை சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் உவமையாகக் கூறுகின்றான். (பலன் தராத) நுரை ஒன்றுமில்லாமல் போய்விடுகின்றது. எது மக்களுக்குப் பலனளிக்கின்றதோ அது பூமியில் தங்கி விடுகின்றது. இவ்வாறு அல்லாஹ்உவமானங்கள் மூலம் தன் செய்திகளை விளக்குகின்றான்.’’ (13: 17)