கிழக்கு மாகாண கல்வி வலயங்களில் ஆசிரியர் இடமாற்ற சபையின் தீர்மானமின்றி மேற்கொள்ளப்பட்ட சகல ஆசிரியர் இடமாற்றங்களையு
ம் உடனடியாக ரத்துச் செய்யுமாறு மாகாணக் கல்வித் திணைக்களம் சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களையும் கேட் டுள்ளது.
அதேநேரம் மார்ச் 31 ஆம் திகதி வரை ஆசிரியர் இடமாற்றங்கள் எவையும் மேற்கொள்ளப்படக் கூடாது எனவும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிஸாமினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இச்சுற்றிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது;
கிழக்கு மாகாணத்தில் சில கல்வி வலயங்களில் ஒழுங்குபடுத்தப்பட்ட இடமாற்ற சபைகள் எதுவுமின்றி வலயக் கல்விப் பணிப்பாளர்களினால் தன்னிச்சையாக இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதனால் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பல தொழிற்சங்கங்கள் முறையிட்டுள்ளதுடன் மூன்று நாள் கால அவகாசத்தில் இடமாற்றக் கடிதங்கள் வழங்கப்பட் டுள்ளதாகவும் முறையிட்டுள்ளது.
முறை தவறிய ஆசிரியர் இடமாற்றங்களினால் ஆசிரியர்கள் மனநிலை பாதிக்கப்படுவதையும் பாடசாலைகள் பாதிக்கப்படுவதையும் அனுமதிக்கக் கூடாது எனவும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மேன் முறையீடு செய்யும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமெனவும் ஆளுனரும் மாகாணக் கல்விச் செயலாளரும் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
எதிர்காலத்தில் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்கு முன்னுரிமை வழங்கி ஆசிரியர் இடமாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வருடம் பூராக ஆசிரியர் இடமாற்ற செயற்பாடுகள் வலயங்களில் இடம்பெறக் கூடாது எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆசிரியர் இடமாற்றம் சபையின் ஒப்புதல் இன்றி மேற்கொள்ளப்பட்ட சகல ஆசிரியர் இடமாற்றங்களையும் இடைநிறுத்தி அல்லது இரத்துச் செய்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் மேற்முறையீடுகளை இம்மாதம் 23ம் திகதி வரை ஏற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வருடம் மார்ச் மாதம் 31ம் திகதி வரை எந்த ஆசிரியர் இடமாற்றங்களையும் மேற்கொள்ள வேண் டாம் எனவும் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் மேலும் வலயக் கல்விப் பணிப்பாளர்களை கேட்டுள்ளார்.