2013ம் ஆண்டு சட்டக்கல்லூரிக்கு புதிய மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஒருவார காலத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது.
சட்டக்கல்லூரியின் அதிபர் இத்தகவலை இன்று (08) காலை வெளியிட்டதாக சட்டபீட மாணவர் ஒன்றிய செயலாளர் எரந்த எஸ் வனசிங்க தெரிவித்தார்.
2012 ஒகஸ்ட் மாதம் இடம்பெற்ற பரீட்சையை அடுத்து சட்டக்கல்லூரிக்கு 309 மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சிங்கள மொழியில் 155 மாணவர்களும் தமிழ் மொழியில் 133 மாணவர்களும் ஆங்கில மொழியில் 21 மாணவர்களும் சட்டக்கல்லூரிக்கு அனுமதி பெற்றுள்ளனர்.
எனினும் 2012 சட்டக்கல்லூரி பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களில் அதிகமானோர் முஸ்லிம் மாணவர்கள் என்று சட்டபீட மாணவர் ஒன்றியம் பிரச்சினையை ஏற்படுத்தியதோடு நேற்று (07) கல்லூரிக்கு முன் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியது.
இதனால் சட்டக்கல்லூரிக்கு புதிய மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதென கல்லூரியின் அதிபர் அறிவித்துள்ளார்.
இதேவேளை, சட்டக்கல்லூரி தேர்விற்கும் தனக்கும் இவ்வித தொடர்புமில்லை என நீதி அமைச்சர் ரவுப் ஹக்கீம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அத தெரண - தமிழ்)