இலங்கை முஸ்லிம்களின் உயர் கல்வி தொடர்பான ஒரு அடிப்படைப் பிரச்சினை பற்றிய கவனம், சமூகத்தின் அவதானத்தையும், கரிசணையையும் பெற வேண்டிய அவசியம் இன்றைய சூழலில் எழுந்துள்ளது.
இது நாட்டின் உயர் கல்வியைப் பொறுத்தளவில் பொதுவான ஒரு பிரச்சினையாக விளங்கினாலும், ஏனைய சமூகங்கள் இது தொடர்பாக கூடிய கவனம் செலுத்தி அதற்கான மார்ரீடுகளைப் பற்றி சிந்தித்து செயற்படுத்த முனைந்துள்ளன. ஆனால் முஸ்லிம் சமூகம் இது பற்றி போதிய கவனம் செலுத்தவில்லை என்றே கூறல் வேண்டும். க.பொ.த. உயர்தர பரீட்சை முடிவுகளின்படி முஸ்லிம்கள் மிகக் குறைந்தளவு திகையினரே தேசிய பல்கலைக் கழகங்களில் அனுமதி பெரும் வாய்ப்பைப் பெறுகின்றனர். அதிலும் பல்கலைக் கழகப் பிரவேசத்திற்கான புதிய புள்ளியிடல் திட்டத்தின் மூலம் முஸ்லிம்களின் பல்கலைக் கழகப் பிரவேசம் மேலும் பாதிக்கப்படுகின்றது. இந்நிலையில் பல்கலைக் கழகத்திற்கு அனுமதி பெறத் தகைமை பெற்றிருந்தும், அந்த வாய்ப்பை இழக்கும் முஸ்லிம் மாணவர்களின் எதிர்காலம் எவ்வாறு அமையப்போகிறது என்பது மிகப் பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது.
திறமையும் ஆற்றலுமிக்க இந்த மாணவர்கள் எத்தகைய வழியுமின்றி பாதைகளிலும், வீதிகளிலும் அரட்டையடித்துக் காலத்தை வீணாக்கப் போகிறார்களா? அல்லது வேறு வழியின்றி வெளிநாட்டுத் தொழில்களைப் பெற்று, தங்களது ஆற்றல்கள், திறமைகளுடன் எந்த வகையிலும் இணங்காத தொழில்களில் ஈடுபட்டு தங்களது திறமைகள், ஆற்றல்களைப் பொருளாதார நன்மைகள் ஒன்றை மட்டுமே கருத்தில்கொண்டு மழுங்கச் செய்யப்போகிறார்களா? அது பற்றி ஆழமாகச் சிந்திக்க சமூகம் கடமைப்பட்டுள்ளது.
முஸ்லிம் மாணவர்கள் உயர் கல்விக்கு ஒரே வழியாக பல்கலைக் கழகப் பிரவேசத்தை மட்டுமே தெரிந்து வைத்துள்ளனர். அந்த வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில், உயர் கல்விக்கான வாயிலே தங்களுக்கு மூடப்பட்டுவிட்டதாக எண்ணுகின்றனர். ஆனால், மிகச் சிறந்த எதிர்காலத்தை அளிக்கக்கூடிய பல கற்கை நெறிகளை மேற்கொள்வதன் மூலம் தங்களது உயர் கல்வியை மிக வெற்றிகரமாகத் தொடர முடியும் என்பதையும் அவர்கள் அறியாதுள்ளனர்.
எனவே, இத்துறையில் முஸ்லிம் மாணவர்கள் வழிகாட்டப்பட்டு, நெறிப்படுத்தப்படல் அவசியம். இக் கற்கை நெறிகள், அவற்றை மேற்கொள்வதற்கான கல்வி நிறுவனங்கள் பற்றிய அறிவும் வழிகாட்டுதலும் இந்த மாணவர்களுக்கு வழங்கப்படல் வேண்டும். இக் கற்கை நெறிகளை மேற்கொள்ள வசதியற்ற மாணவர்களுக்குப் புலமைப்பரிசில்கள் ஏற்பாடு செய்யப்படல் வேண்டும். உயர் கல்விக்குத் தகைமை பெற்ற மாணவர்கள் தமது சமூகத்தினதும், நாட்டினதும், மனித இனத்தினதும் ஒரு அங்கமாக உள்ளனர். இந்த மனித வளத்தை உரிய முறையில் பயன்படுத்தத் தவறினால் அதனால் ஏற்படும் இழப்பை சாதாரனாமாகக் கொள்ளல் முடியாது.
-நன்றி: இஸ்லாமிய சிந்தனை (இதழ்:03/2012)