
குளிப்பவர்கள் அனைவரும் ஒருமுறை படித்துத்தான் பாருங்களேன்!
இன்றைய நவீன காலகட்டங்களில் சோப்பை பயன்படுத்தாமல் குளிப்பது நூறு சதவீத முழுமையான குளியலாக இருக்காது என்பதில் எவர்க்கும் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். பிறந்து சில மாதங்கள் ஆன குழந்தைகளைக் குளிப்பாட்ட கூட இன்று நாம் சோப்பை பயன்படுத்துகிறோம். ஆனால் சென்ற தலைமுறை மக்களின் குளியலறையில் சோப்பு இந்த அளவிற்கு முக்கிய இடத்தை பெற்றிருந்ததா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும்.
உதாரணத்திற்கு நமது தாத்தாவை எடுத்துக்கொள்வோம். நம்மை போல சிறு வயதிலிருந்தே அவர் சோப்புகளை பயன்படுத்தியிருப்பார் என்று எவரும் கூறிவிடயியலாது. சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும், சோப்புகளை மனிதர்கள் எந்தனை ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார்கள் என்று நினைகிறீர்கள் நண்பர்களே ஒரு நூறு இருநூறு ஆண்டுகளாக பயன்படுத்தி வருவார்கள் என்று நீங்கள் நினைப்பீர்களா ம்ம்ஹூம் அதுதான் இல்லை சோப்புகளை சுமார் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்கள் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது தான் உண்மை. பண்டைய பாபிலோனியர்கள் என்னும் தற்போதைய ஈராக்கியர்கள் தான் உலகிலேயே முதன் முதலில் சோப்புகளை தயாரித்து பயன்படுத்தியவர்கள் ஆவர்.

இது குறித்து ஆராய்ந்த அன்றைய பாபிலோனிய வேதியியலாளர்கள், கறைகளை அகற்றி சுத்தம் செய்வதற்க்காக ஒரு பொருளை உருவாக்கிட வேண்டும் என்று ஆவல் கொண்டனர். அந்த பொருள் தண்ணீரில் கரையக் கூடியதாக இருக்க வேண்டும் அதே நேரம் இலகுவாக கரைந்துவிடாமலும் இருக்க வேண்டும், மிக முக்கியமாக அது கறைகளையும் அகற்றவேண்டும் என்பது அவர்களின் முன்னின்ற சவாலாக இருந்தது.
அதனை தொடர்ந்து, சாம்பலுடன், விலங்குகளின் கொழுப்புகளில் இருந்து பெறப்பட்ட கொழுப்பு எண்ணெய், மெழுகு, மற்றும் உப்பு இவற்றுடன் தண்ணீரையும் சேர்த்து ஒரு காரகரைசல் தயாரிக்கப்பட்டது. தயாரிக்கப்பட்ட இந்தக் காரகரைசலை(alkali) சூடுபடுத்தி கொதிக்க வைத்து வற்றச் செய்தனர். காரகரைசல் வற்றி தின்ம நிலையை அடைந்ததும் அவை சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்டது. இதுதான் மனிதன் முதலில் தயாரித்த சவர்க்காரம் (soap) ஆகும். தயாரித்த சோப்புகள் முதலில் தரையை சுத்தம் செய்யவும் பின்பு ஆடைகளை சுத்தம் செய்யவும் இறுதியாக குளிக்கவும் பயன்படுத்தினார்கள். பின்னர் இத்தொழில்நுட்பம் சில வணிகர்களின் வாயிலாக சிரியா, ரோம், எகிப்த்து மற்றும் மொரோக்கோ வரை சென்றடைந்தது.சரி சோப்பு தயாரித்தாகிவிட்டது, இனி இந்த சோப்பிற்கு, சோப்பு என்று எப்படி பெயர் வந்ததது என்று பார்ப்போமா?

கி.பி.78-ஆம் ஆண்டளவில் புகழ் பெற்று விளங்கிய ரோமானிய எழுத்தாளரான பிளினி தி எல்டர் (Pliny the Elder) 'இயற்கையின் வரலாறு' (Historia Naturalis) என்ற தனது நூலில் சோப்பை பற்றி குறிப்பிடுகையில் Sapo என்று குறிப்பிடுவதற்கு பதிலாக, தவறுதலாக Soap என்று குறிப்பிட்டுவிட்டார், உச்சரிப்பதற்கு sapo என்பதை விட Soap என்பது மிக எளிதாக இருந்ததால் அன்று முதல் இன்றுவரை அந்த பெயரே நிலைத்துவிட்டது.கிட்டத்தட்ட பதிமூன்றாம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய யூனியனிலுள்ள பெரும்பாலான நாடுகள் சோப்புகளை இறக்குமதி செய்ததே தவிர தயாரிக்கும் முயற்ச்சியில் எந்த நாடுகளும் ஈடுபடவில்லை என்று தான் கூற வேண்டும், பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பாதியில் தான் ஐரோப்பிய யூனியனின் தேவைக்கென்று பிரான்ஸிலுள்ள டௌலோன் மற்றும் மார்ஸிய்லீ (Toulon, Marseille) ஆகிய நகங்களில் சோப்பு தயாரிக்கும் பணி துவங்கியது.
பதினாறாம் நூற்றாண்டு வரை மனிதர்கள், துணிகளை துவைப்பதற்க்கும் குளிப்பதற்கும் ஒரே சோப்புகளைத்தான் பயன்படுத்தினார்கள். பிரான்ஸில் சோப்பு தயாரிக்கப்பட்ட சில காலங்களிலேயே அதாவது பதினாறாம் நூற்றாண்டில் துவக்கத்திலேயே மனிதர்கள் குளிப்பதற்க்காக தனியாக மென்மையான சோப்புகள் தயாரிக்கும் பணி துவங்கியது. இதில் விலங்குகளின் கொழுப்புக்கு பதிலாக ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய், மற்றும் சின்னம் எண்ணெய் ஆகியவை பயன்படுத்தப்பட்டன.

தரமான சோப்பாக இருந்த காரணத்தினால் பியர்ஸ் சோப்பின் விலையும் சற்று அதிகமாகத்தான் இருந்தது இந்த காரணங்களால் சோப்புகளை அப்போது மேல்தட்டு மக்கள் மட்டுமே பயன்படுத்தினார்கள் என்று தான் சொல்ல வேண்டும். எல்லோரும் பயன்படுத்தும் வண்ணம் தரமான சோப்புகளை குறைந்த விலையில் தயாரிக்கும் தொழில்நுட்பத்தினை வில்லியம் கோசேஸ் (William Gossage) என்பவர் கண்டறிந்து அறிமுகப்படுத்தினார். இதன்பிறகு தான் சோப்புகளை ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்க நாடுகளில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்த ஆரம்பித்தனர்.உலகில் அனைத்தும் நாடுகளிலும் உள்ள மக்களை சோப்பு சென்றடைய காரணமாக இருந்தவர்கள் வில்லியம் லீவர் மற்றும் ஜேம்ஸ் லீவர் என்ற இரு சகோதரர்கள் என்று சொன்னால் மிகையில்லை.
ஒரு பொருளை தயாரிப்பது மட்டும் முக்கியமல்ல அதனை சந்தைப்படுத்தும் வித்தை அறிந்தவனால் மட்டுமே அப்பொருளை உலககெங்கும் வாழும் அனைத்து நாட்டுமக்களிடமும் கொண்டு போய் சேர்த்திட முடியும் என்ற உண்மையை இவர்கள் தான் உலகிற்கு தெரியச்செய்தவர்கள் ஆவர். இவர்கள் இருவரும் இணைந்து 1886-ல் லீவர் பிரதர்ஸ் (Lever Brothers) என்ற பெயரில், பொருட்களை சந்தைப்படுத்தும் கம்பெனி ஒன்றை துவங்கினார்கள். இவர்களில் திறமையால் தான் சோப்பு உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் மிகக்குறுகிய காலத்தில் பட்டி தொட்டி எங்கும் சந்தைப்படுத்தப்பட்டது. லீவர் பிரதர்ஸ் என்ற கம்பெனி பின்னாளில் யுனிலீவர்ஸ் (Unilever) என்று பெயர் மாற்றம் அடைந்து மிகப்பெரும் நிறுவனமாக வளர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.