அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.
நாவின் விபரீதங்கள்
முன்னுரை:
நாவை அடக்கியாளாதவன் உண்மை முஸ்லிமல்லன்!’என்பது பெருமானாரின் கருத்து.இந்த கருத்தை ஆதாராமாக வைத்துதான் இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது. பேசுவதால் ஏற்படும் விபரீதங்களையும் துன்பங்களையும் இந்த நூல் தெளிவுபடுத்துகிறது.
“நாவின் விபரீதங்கள்” என்ற இந்த நூல் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் “அபாதுல்லியான்” என்ற அரபி நூலிலிருந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. நாவின் விபரீதங்களிலேயே மிகக்கொடியது புறம் பேசுதல். ஆனால் இந்தத் தலைப்பு இதில் இடம் பெறவில்லை. ஏனென்றால் இமாமவர்கள் முழு நீள அத்தியாயங்களுடன் அதைத் தனிப்பட்ட தலைப்பாக விளக்கியிருக்கிறார்கள். புறம் என்றால் என்ன, அதற்கு மூல காரணம் என்ன? தவிர்ப்பது எப்படி? என்பன போன்றவை அங்கு விரிவாக ஆராயப்பட்டிருக்கின்றன.
பேச்சுக்கலை வளர்ந்திருக்கும் இக்காலத்திற்கு இந்நூல் பெரிதும் பயன்படும் என நம்புகிறோம் இன்ஷா அல்லாஹ்.
மொழி பெயர்ப்பாளர்: ச.அப்துல் வஹ்ஹாப்
பகுதி 1 – நாவின் விபரீதங்கள்
எல்லாம் வல்ல இறைவன் நாவைக் கொடுத்திருக்கிறான் மனிதனுக்கு, இறைவனின் அன்பளிப்புகளில் அது மகத்தானது. அது சிறியதொரு சதைத் துண்டுதான், என்றாலும் அதனால் விளையும் விபரீதங்கள் தாம் எத்தனை! உருவாகும் பயன்கள் தாம் எத்தனை! அது சக்தி வாய்ந்த பொருள். உள்ளத்தின் கருத்துக்களை அதுதானே படம் பிடித்துக் காட்டுகிறது! “நல்வழியை நான் பின்பற்றி நடக்கிறேன்!” என்று சொன்னதும், “ஒதுக்கித் தள்ளுங்கள் உங்கள் இஸ்லாத்தை! எங்களுக்கு தனி மார்க்கம் உண்டு, எங்கள் முன்னோர் பின்பற்றிய மார்க்கத்தைத்தான் நாங்கள் பின்பற்றுவோம். வேறு எந்த மார்க்கமும் எங்களுக்குத் தேவையில்லை” என்று சொன்னதும் அந்தச் சிறிய சதைத் துண்டுதானே! அது உலகையும் அதிலுள்ளவற்றையும் விளக்குகிறது. கற்பனையில் உள்ளதையும் உள்ளமையில் கட்டுண்டதையும் அது கண்ணாடியில் தோன்றுவதைப் போல் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. படைப்பினங்களனைத்தும் அறிவுக்குக் கட்டுப்பட்டு விடுகின்றன. தான் அறிந்த அறிவுகள் அனைத்தையும் மனிதன் நாவில் உதவியால் மற்றவர்களுக்குக் கூறுகிறான். அது சில வேளை விண்ணகத்தையும் அளந்து பார்க்கிறது. வேறு சில சமயம் விண்மீன்களையும் வெண்ணிலாவையும் எடை போடுகிறது. இன்னும் சில சமயம் உயிரினங்களையும் அவற்றைப் படைத்த இறைவனையும் வம்புக்கிழுக்கிறது!
இந்த சதைத் துண்டுக்குள்ள ஆற்றல் மனிதனின் அவயவங்களில் வேறு எதற்கும் கிடையாது. உங்கள் கண்கள் நிறத்தையும் உருவத்தையும் பார்க்கின்றனவே தவிர, அவை நிறத்தைப் பற்றியும் உருவத்தைப் பற்றியும் விளக்கம் தருவதில்லை. கண்ணுக்குள்ள ஆற்றல்கூடக் காதுக்குக் கிடையாது. அது பார்ப்பதுமில்லை; பார்த்ததை மற்றவர்களுக்குக் கூறுவதுமில்லை. குரலையும் கீதத்தையும் கேட்கும் ஒரே ஆற்றல் அதற்குண்டு. நீங்கள் இனிய கீதத்தைக் காதால் கேட்டு இன்பமடைகிறீர்கள். ஆனால் அந்த காது கீதத்தின் இனிமையை மற்றவர்களுக்கு உணர்த்துமா? உணர்த்தாது. உணர்த்தும் ஆற்றல் மனதில் பதியப்பேசும் ஆற்றலும் நாவின் பிறப்புரிமைகள். அது தான் அனுபவித்த அறுசுவை உணவைப் பற்றிக் கூறுவதுபோல், கண்ணால் கண்டதையும், காதால் கேட்டதையும் தெளிவாக விளக்கிக் காட்டுகிறது. ஒரு குருடனுக்குக் கடலையும் நிலவையும் விளக்குகிறது. செவிடனின் உள்ளத்தில் அது கீதத்தின் இனிமையையும் திருக்குர்ஆன் ஓதும்போது கிடைக்கும் இன்பத்தையும் ஆழமாகப் பதித்து விடுகிறது. நாவு இல்லையேல் குருடன் நிலவைப் பார்க்க முடியாது. சுருங்கச் சொன்னால், வெற்று மனதோடு பிறக்கும் மனிதனுக்கு அது இறைவனைப் பற்றிய அறிவைப் போதித்து விடுகிறது.
நாவைத் தவிர்த்து மற்றப் புலன்கள் குறிப்பிட்ட எல்லையில் நின்று சுழல்கின்றன. அந்த எல்லையை அவற்றால் கடக்கமுடியாது. மல்லிகை மலரை காதுக்கருகில் கொண்டு போவதால் அதன் நறுமணத்தை நுகர முடியாது. காதுக்கு நுகரும் ஆற்றல் கிடையாது. புத்தகத்தை முகர்ந்து பார்ப்பதால் அதில் அடங்கியுள்ள கருத்துக்களை உங்களால் நுகர்ந்து கொள்ள முடியுமா? ஆனால் நாவு இப்படிக் கட்டப்பட்டதல்ல. அது எதையும் கூறும்; எப்போதும் கூறும்; எப்படியும் கூறும். கூறும் ஆற்றல் அதன் தனியுரிமை. அந்த உரிமையில் மற்றப் புலன்கள் பங்குபெற முடியாது. அது நற்காரியத்தில் ஈடுபட்டால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். தீயக் காரியத்தில் அது தலையிட்டால் சமூகமே அழிந்து விடும். ஒரு சமயம் “இறைவனே, இறைவனே என்று துதிக்கும் நாவுதானே மறு சமயம் அவன்மீது வசை பாடுகிறது. நாவைக் கட்டுப்படுத்தாதவர்கள் மறுமையில் மட்டுமின்றி இம்மையிலும் கேவலப்பட வேண்டி ஏற்படும். மனிதனின் நாவுதான் அவனுக்கு மறுமையில் பெருந்துன்பத்தைக் கொடுக்கிறது. இந்த இக்கட்டிலிருந்து நீங்கள் தப்ப எண்ணினால் உங்கள் நாவின் இயக்கத்துக்குக் கட்டுப்பாடு ஏற்படுத்துங்கள். மனம் போன போக்கில் எதையும் பேசாதீர்கள். மார்க்கத்தின் கட்டளைகளைக் கண்டிப்புடன் பின்பற்றுகிறவர்கள்தாம் நாவின் விபரீதங்களிலிருந்து தப்ப முடியும். இம்மைக்கும் மறுமைக்கும் பயன்படாத எதையும் இவர்கள் பேசமாட்டார்கள். விபரீதம் ஏற்படக்கூடிய எந்த வார்த்தையும் இவர்கள் வெளியிடமாட்டார்கள்.
பொதுவாக எந்தப் பேச்சு விபரீதத்தை உண்டாக்கும், எந்தப் பேச்சு சமாதானத்துக்கு வழி வகுக்கும் என்பதை பொதுமக்கள் தெரிந்து வைத்திருக்க மாட்டார்கள். நல்ல பேச்சையும் கெட்ட பேச்சையும் நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டும். அதன்பின் இந்த துறையில் உங்களுக்கு வெற்றி கிட்டலாம். அவற்றை நீங்கள் தெரிந்து கொள்ளவில்லையென்றால் ஏற்படும் விபரீதங்களைப் பற்றி இப்போது ஒன்றும் சொல்ல முடியாது. நன்கு தெரிந்தவர்களே தடுமாறிக் கொண்டிருக்கும் போது ஒன்றும் தெரியாதவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். மனிதன் வெளியுறுப்புக்களில் மிகக்கொடியது நாவு. மற்ற உறுப்புக்களைப் போல் இது அடிக்கடி சோர்வு கொள்வதில்லை. நினைத்த மாத்திரத்தில் நினைத்த விஷயத்தைப் பற்றிப்பேசும் திறனுள்ளது இது. எத்தகைய சிரமமுமில்லாமல் இது இயங்க ஆரம்பித்து விடும். நல்ல காரியத்தில் சில வேளை நாவு பொறுமை காட்டினாலும் கெட்ட காரியத்துக்கு அது என்றைக்கும் தயங்காது. மற்றவர்களின் மர்மங்களையெல்லாம் சந்திக்கும் இழுக்கும் நாவு அதில் எத்துணை இனிமையக் காண்கிறது! பொய்யுரைப்பதில் அவதூறு பேசுவதிலும் அது எத்துணை இன்பம் அடைகிறது! எச்சரிக்கிறேன். அதை அசட்டை செய்து விடாதீர்கள். அதன்பின் அதனால் ஏற்படும் துன்பத்தையும் அவமானத்தையும் உங்களால் தாங்க முடியாது. எதையேனும் பேசிக் கொண்டிருப்பதை விட மௌனம் சாதிப்பது மிகச் சிறந்தது என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. தேவையில்லாமல் நீங்கள் எதையும் கூறவேண்டாம். தேவை ஏற்பட்டால் தேவைக்கதிமாகப் பேசவேண்டாம். எதையும் அலசி ஆராய்ந்து பாருங்கள். மார்க்கத்திற்கு முரண்பட்டதையும் விபரீத விளைவுகளை உருவாக்கக் கூடியதையும் நீங்கள் பேசாதீர்கள். சிந்தனைக்கும் மௌனத்துக்கும் உங்கள் வாழ்க்கையில் முக்கியத்துவம் கொடுங்கள்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்
நாவின் விபரீதங்கள்
மூலம்: இமாம் கஸ்ஸாலி (ரஹ்)