அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே



INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


Saturday, December 22, 2012

மனப்பாடம்' செய்யாதீர்கள்...'மனப்படம் செய்யுங்கள்!

நினைவாற்றல்... இது நமக்கான பெரும் வரப்பிரசாதம். நம்முடைய தேர்வு அமைப்புகளும், பணித்திறனும், நடைமுறை வாழ்க்கையும் நினைவாற்றல் திறனின் மேம்பாட்டுக்கு ஏற்றவாறே அமைந்துள்ளன... சிறப்பு பெறுகின்றன!
இங்கே, பள்ளி பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு, நினைவாற்றல் திறனுக்கான நடைமுறை குறிப்புகளை தருகிறார், சர்வதேச நினைவாற்றல் பயிற்சியாளர் ஜான் லூயிஸ்.


17 வருடங்கள் முதுநிலை ஆசிரியராக இருந்து, தற்போது 5 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் பணியாளர்களுக்காக நினைவாற்றல் பயிற்சியளித்து வரும் ஜான் லூயிஸ், நான்கு முறை உலக நினைவாற்றல் சாம்பியன்ஷிப் வென்ற ஒரே இந்தியர். நினைவாற்றலை உரசிச் சொல்லும் 'ரூபிக் க்யூப்’ போட்டியில் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர். அடிப்படையில் ஆசிரியர் என்பதால், தனது அனுபவத்தை ஒட்டிய அற்புதமான நினைவாற்றல் உத்திகளை உதிர்க்கிறார்.


''படிப்பது, படித்தவற்றை மனதில் இருத்துவது, பிற்பாடு பரீட்சைக்காக மீண்டும் நினைவுகூர்வது... இதுதான் நினைவாற்றலை வலுப்படுத்தும் மூன்று முக்கிய நிலைகள். இதில் சில அடிப்படைகளை புரிந்து கொண்டால்... நினைவாற்றல் கலை என்பது சுலபமாவதோடு, சுவாரஸ்யமாகவும் கைவந்துவிடும். படிப்பதற்கு முன்பாக, படிக்கும்போது, படித்த பிறகு என மூன்று கட்டங்களாக இவற்றைப் பார்க்கலாம்.


படிப்பதற்கு முன்பாக..!
படிக்க அமர்வதற்கு முன்பாக, முதலில் மனதளவில் தயாராக வேண்டும். அந்த தயார்படுத்துதல் சுய ஆர்வத்துடன் நிகழ வேண்டும். மேற்படிப்பாக எதைப் படிக்கப் போகிறோம், படித்து என்ன வேலைக்கு செல்லப் போகிறோம், எந்த மாதிரியான சாதனைகளை செய்யப் போகிறோம், எவ்வளவு வசதி வாய்ப்புகளுடன் நலமாக வாழப் போகிறோம் என ஏற்கெனவே கற்பனை செய்திருப்பவற்றை, சில விநாடிகள் நினைத்துப் பார்ப்பது, அதற்கு உதவும். இவற்றை ஒரு சந்தோஷ சபதமாக மனதுக்குள் அல்லது கண்ணாடி முன்பாக சொல்லிவிட்டு படிக்க அமரலாம்.


வீட்டில் தினமும் ஒரே இடத்தில் அமர்ந்து படிப்பது நல்லது. அந்த இடம் போதுமான காற்றோட்டம் பெற்றிருப்பதோடு, டி.வி, வாகன இரைச்சல் குறைவானதாகவும் இருக்க வேண்டும். பாடம் தொடர்பான அனைத்துப் பொருட்களையும் கைக்கெட்டும் தூரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். மூளையின் ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கு அத்தியாவசிய மானது தண்ணீர் என்பதால், வாட்டர் பாட்டிலும் உடன் இருக்கட்டும். சற்று முன்பாகத்தான் டி.வி, அரட்டை போன்றவற்றிலிருந்து திரும்பியிருப்பின், கவனத்தை ஒருமுகம் செய்ய புதிர்களைத் தீர்ப்பது, சுடோகு போன்றவற்றில் இரண்டொரு நிமிடங்களை வார்ம் - அப் செய்யலாம்.


படிப்பதற்கான நேரம் ஒவ்வொருவருக்கும் ஏற்ப காலை, மாலை, இரவு என அமையலாம். ஆனால், தினசரி அதேநேரத்தில் படிப்பது நல்லது. ஒரு சிட்டிங்கில் சேர்ந்தாற்போல 50 நிமிடங்கள் படிப்பதை மட்டுமே மூளை தொடர்ந்து கிரகிக்கும். அதற்கு ஏற்றவாறு பாட அளவை திட்டமிட்டு அமர வேண்டும்.


படிக்கும்போது..!
முதல் முறையாக ஒரு பாடத்தைப் படிக்கிறோம் என்றால், கவனம் அவசியம். வகுப்பில் நடந்த பாடத்தை அல்லது செய்முறையை மனதில் ஒருமுறை படரவிட்டு, கையில் பென்சிலுடன் முக்கியமான வார்த்தைகளை அடிக்கோடிட்டவாறே வாசிப்பைத் தொடர வேண்டும். இரண்டாம் முறை படிக்கும்போது அடிக்கோடிட்ட முக்கிய வார்த்தைகளை மட்டும் ஒன்றுக்கொன்று வரிசையாகத் தொடர்புபடுத்தி மனதுக்குள் இருத்திக்கொள்ள வேண்டும்.


படிப்பது என்றாலே மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என சகல தரப்பினரும் நினைப்பது... மனப்பாடம் செய்வதைத்தான். ஆனால், அடிப்படைக் கூறுகள் தவிர்த்து, மற்றவற்றை மொட்டையாக மனப்பாடம் செய்தால்... அவை மனதில் தங்காது. பாடத்தைப் புரிந்துகொண்டு, உணர்ந்து, காட்சிப்படுத்தி, அவற்றின் பொருளோடு படிக்கும்போதுதான் அவை மனதில் தங்கும். அதாவது, மனப்பாடம் செய்யாதீர்கள்... மனப்படம் செய்யுங்கள்!


காட்சிப்படுத்துதல் என்பது எளிமையாகவும், மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். உதாரணத்துக்கு 'அந்தமான் நிக்கோபார்’ என்பதை அந்தமான்+நிக்குது+பார் என்றும், 'எத்தியோப்பியா’வை எத்தி+உதப்பியா, 'என்சைக்ளோபீடியா’வை என்+சைக்கிளை+பிடிய்யா என்றும் ஆரம்பித்து, அர்த்தமற்ற வார்த்தைகளுக்கும் பெயர்சொற்களுக்கும்கூட அர்த்தமுள்ள ரைமிங் மற்றும் பஞ்ச் டயலாக்குகளை பயன்படுத்தலாம்.
இவற்றை காட்சிப்படுத்திக் கொள்வதும் அவசியம். இதற்கு இரண்டு வழிகள் உதவும். முதலாவது, PLAYV (Picture, Location, Association, funnY, Visualisation) மெத்தட். அதாவது, பாடத்தை, அது தொடர்பாக மனதில் தோன்றும் படத்தை, அடுத்தடுத்த கருத்துக்களை ஒன்றோடு ஒன்றாக தொடர்புப்படுத்தி, வேடிக்கையாக காட்சிப்படுத்திக் கொள்வது. இதை சுவாரஸ்யமாக்க, கார்ட்டூன் உத்தி உதவும். எதையும் மிகைப்படுத்தி பிரமாண்டமாகவும், வண்ணங்களோடும், கவர்ச்சிகரமாகவும் கற்பனை செய்துகொள்ளலாம். இது பொதுவான வாசிப்புக்கு உதவும்.


கடினமான புதிய வார்த்தைகளை மனதில் இருத்த AMPM (Alternative, Meaningful, Personalize, Mental picture) மெத்தட் கை கொடுக்கும். அதாவது, பாடத்திலிருந்து மாறுபட்ட, அதேசமயம் அர்த்தமுள்ள, தனிப்பட்ட விதத்தில், மனப்படமாக இருத்திக்கொள்ளுதல். உதாரணத்துக்கு, ஃப்யூஜியாமா (Fujiama) என்ற மிகப்பெரும் எரிமலையின் பெயரை ஞாபகம் வைத்துக்கொள்ள, எங்கள் உறவினரான பிஜி என்ற பெண்மணி, ஒரு எரிமலை மீது நின்று கொண்டிருப்பதைப் போல கற்பனை செய்துகொண்டான் என் மகன். இதையே இன்னொரு மாணவன் தனக்குப் பிடித்த உடையான பைஜாமா அணிந்துகொண்டு, அவனே எரிமலை அருகில் நிற்பதாக கற்பனை செய்து, அந்த வார்த்தையை மனதில் பதிய வைத்துக் கொண்டான். இப்படி கற்பனை, காட்சிப்படுத்துதல் எதுவானாலும் அதில் ஒரு பர்சனல் டச் இருப்பின் அது நினைவுப் பெட்டகத்திலிருந்து எளிதில் அழியாது.


அடுத்ததாக, கண்ணுக்கான 20 X 20 டெக்னிக். மனித கண்ணின் தொடர்ச்சியான உழைப்பு ஒரு சமயத்தில் 40 நிமிடங்கள் மட்டுமே. எனவே, 20 நிமிட படிப்புக்கு பிறகு, 20 விநாடிகள் இடைவெளிவிட்டு, அந்நேரத்தில் 20 மீட்டர் தொலைவிலிருக்கும் ஏதேனும் பசுமையான இயற்கையான விஷயங்களின் மீது பார்வையை ரிலாக்ஸ் செய்துவிட்டு, பாடத்துக்குத் திரும்பலாம். இப்போது 20 நிமிடங்கள் படித்ததன் குறிப்புகளை இரண்டு நிமிடங்களில் திருப்பிப் பார்த்துவிட்டு, அடுத்த 20 நிமிட சுழற்சியை மேற்கொள்ள வேண்டும். இப்படி இரண்டு சுற்றுகள் முடித்ததும்... அடுத்த 40 நிமிட அமர்வுக்கு முன்பாக 10 நிமிட பிரேக் அவசியம். ஆக, இப்படியான இடைவெளிகள் ஒரு மணிக்கு ஒருமுறை என்பதாக அமைந்துவிடும்.


படித்த பிறகு..!
எவ்வளவு படித்தாலும் அவை மூளையின் நிரந்தரப் பதிவாக மாற, ரிவிஷனில் இருக்கிறது சூட்சமம். விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, படித்த பாடம் அடுத்த 24 மணி நேரத்தில் 40% மறதிக்குள்ளாகிறது. இப்படியே விட்டால்... 21 நாட்களில் குறிப்பிட்ட பாடத்தை படித்ததற்கான சுவடே இருக்காது. எனவேதான் நம்முடைய பாரம்பரியத்தில் ஒரு பழக்கத்தை வழக்கமாக மாற்றிக் கொள்ள, 21 நாள் பயிற்சி மேற்கொள்ளலை வைத்திருக்கிறார்கள்.


ரிவிஷனில் இந்த 4 நிலைகளைப் பின்பற்றுங்கள். முதல் நாள், 3-வது நாள், 7-வது நாள், 30-வது நாள் என்ற கணக்கில், ஆங்கிலம், அறிவியல் என ஒவ்வொரு பாடத்தையும் தினசரி நான்கு விதமாக திருப்பிப் பார்க்கவேண்டும். 'தினசரி வீட்டுப்பாடம், கிளாஸ் டெஸ்ட் இவற்றுக்கான நேரமே தடுமாற்றமாகும்போது தினசரி நான்கு ரிவிஷன்களா?' என மிரள வேண்டாம். படிப்பதற்கு ஒரு மணி நேரம் எடுத்துக்கொண்ட பாடம், முதல் ரிவிஷனுக்கு 10 நிமிடமே எடுத்துக்கொள்ளும். அடுத்தடுத்த ரிவிஷன்கள் மேலும் குறைவான நிமிடங்களில் முடிந்துவிடும். மேலும் இந்த ரிவிஷனை கடினமான பாடங்களை முதல்முறை படிக்கும்போது இடையிடையே மேற்கொள்ளலாம்; அல்லது தூங்குவதற்கு முன்பாகவோ பயணத்தின்போதோ, காத்திருப்பின்போதோகூட மேற்கொள்ளலாம். சிலர் எதற்கெடுத்தாலும் எழுதிப் பார்ப்பார்கள். இது ரிவிஷனுக்கான நேரத்தைச் செரித்துவிடும். எட்டாம் வகுப்புக்கு மேல் கடினமான பாடப் பகுதிகளை மட்டுமே எழுதிப் பார்த்தால் போதுமானது.


ஆயத்தம், படித்தல், திருப்பிப் பார்த்தல் இவற்றோடு... க்ளைமாக்ஸான பரீட்சை தினத்தையும் அவ்வப்போது மனக்காட்சியில் வெற்றிகரமாக பலமுறை டிரெயிலராக ஓட்டிப்பார்ப்பது நல்லது. இது கடைசி நேர தடுமாற்றங்களை தவிர்க்கச் செய்யும்.
இவை தவிர்த்து, அத்தியாவசிய தூக்கம், உணவு, ரிலாக்ஸாக்கும் உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, தினசரி குறைந்தது 2 லிட்டர் தண்ணீர்... இவற்றையும் மறந்துவிட வேண்டாம்!