பிரதியமைச்சரின் ஊடகஇணைப்பாளர் முகம்மட் சஜி இலங்கை மாணவர்களுக்கு சவுதி பல்கலைக்கழகங்களில் முதுமானிப்பட்டப்படிப்பிற்கு அதிக புலமைப்பரிசில்! பிரதி அமைச்சரின் விஜயத்தில் கைச்சாத்து.அண்மையில் ஜெனிவாவில் இடம் பெற்ற மாநாட்டின் போது இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் தமது நன்றிகளைத் தெரிவித்துவரும் அதே வேளை! இலங்கைக்கு அதிகளவான அரபு நாடுகளின் ஆதரவும் கிடைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கைக்கு ஆதரவு வழங்கிய அரபு நாடுகளில் சவுதி அரேபியாவும் மிகமுக்கிய நாடுகளில் ஒன்று. கடந்த வாரம் மாண்புமிகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தமது நன்றிகளைத் தெரிவிப்பதற்காகவும், இலங்கை அரசாங்கம் சார்பாகவும் இலங்கை வாழ் மக்கள் சார்பாகவும், கௌரவ சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புழ்ழாஹ் சவுதி அரேபியாவுக்கான விஜயத்தினை மேற்கொண்டார்.
அமைச்சின் இவ்விஜயத்தின் போது சவுதி அரேபியாவின் முக்கிய அமைச்சர்கள், அமைச்சின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள், தொண்டு நிறுவனங்களின் தலைவர்கள் போன்ற பல முக்கியஸ்தர்களையும் பிரதி அமைச்சர் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
இச்சந்திப்புக்களின் போது பல்வேறுப்பட்ட அரசியல், சமூக, கலை, கலாச்சார விழுமியங்கள் தொடர்பாகவும் இங்கு ஆராயப்பட்டன.
அண்மையில் ஐக்கிய நாடுகளின் மனிதஉரிமைக் கூட்டத்தின் போது இலங்கைக்கு சவுதி அரேபியா ஆதரவு வழங்குவதற்கு மிகமுக்கிய பலமாகத்திகழ்ந்த ராபிதத்துல் ஆலம் உலக முஸ்லிம் லீக் அமைப்பிற்கும் தமது நன்றிகளைத் தெரிவிக்கும் பொருட்டு பிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ், ராபிதத்துல் ஆலம், உலக முஸ்லிம் லீக் அமைப்பினுடைய செயலாளர் நாயகம் டாக்டர் அப்துல்லாஹ் பின்; அப்துல் முஹ்சீன் அல்தூர்க்கி, மற்றும் சவுதி அரேபியா மனித உரிமை ஆணையகத்தின் தலைவர் ஆகியோரையும் மக்கா தலைமையகத்தில் சந்தித்து இலங்கை ஜனாதிபதி அவர்கள் சார்பாகவும் இலங்கை அரசாங்கம் சார்பாகவும் இலங்கை வாழ் மக்கள் சார்பாகவும் தமது நன்றிகளைத் தெரிவித்தார். இதன்போது இலங்கையில் யுத்த போர்ச் சூழல் நீங்கி சமாதானம் நிலவி வருவதையிட்டு தாம் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் டாக்டர் அப்துல்லாஹ்பின்; அப்துல்முஹ்சீன் அல்தூர்க்கி தெரிவித்தார். தொடர்ந்தும் ராபிதத்துல் ஆலம் உலக முஸ்லிம் லீக் அமைப்பு இவ்வளர்ச்சிக்கு பல விதத்திலும் இலங்கைக்கு உதவிகளை நல்கும் எனவும் தெரிவித்தார்.
பிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ் இவ்விஜயத்தின் போது ஜித்தாவிலுள்ள சர்வதேச இஸ்லாமிய நிவாரண நிதியத்தின் செயலாளர் நாயகம், டாக்டர் கலீல் பாஷா அவர்களையும் சந்தித்து உரையாடினார், இதன்போது இலங்கையில் அதிநவீன இருதய சத்திரசிகிச்சை வைத்தியசாலை ஒன்றை நிறுவுவது தொடர்பாகவும் அதன் முக்கியத்துவம் பற்றியும் பிரதியமைச்சர் செயலாளர் நாயகத்திடம் விளக்கிக் கூறியுள்ளார். அதன் பொருட்டு அதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் சர்வதேச இஸ்லாமிய நிறுவனம் மேற்கொள்வதாகவும் அவ்வமைப்பின் செயலாளர் பிரதியமைச்சரிடம்; தெரிவித்தார்.
இதேவேளை சவுதி அரேபியா மன்னர் மலீக் அப்துல் அஸீஸ் பல்கலைக்கழகத்திற்கும் அமைச்சர் விஜயத்தினை மேற்கொண்டார், பல்கலைக்கழகத்தின் முக்கிய பீடாதிபதிகள், விரிவுரையாளர்களையும் சந்தித்து இலங்கை மாணவர்களுக்கு சவுதி அரேபியா பல்கலைக்கழகங்களில் முதுமானிப்பட்டக் கற்கை நெறிகளை கற்பதற்கு அதிகமான மாணவர்களுக்கு புலமைப்பரிசில் ஊடாக இடம் வழங்கவும், இன்னும் பல்வேறுப்பட்ட இணக்கப்பாடுகளும் இப்பேச்சுவார்த்தையின் போது கைச்சாத்திடப்பட்டன.
இதன்போது பிரதியமைச்சருக்கும் அவரோடு சென்ற ஜித்தாவுக்கான இலங்கை கௌன்சிலர் ஜெனரல் டாக்டர் உதுமாலெப்பை உட்பட பிரதிஅமைச்சரோடு சென்ற குழுவினருக்கும் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதாக பிரதியமைச்சரின் ஊடகஇணைப்பாளர் முகம்மட் சஜி தெரிவித்தார்.