தேசிய மலர் தொடர்பில் சுற்றாடல்துறை அமைச்சு இணக்கப்பாடொன்றை எட்டியுள்ளது. சரியான தேசிய மலர் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் நேற்றைய (திங்கட்கிழமை) சந்திப்பில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய நிம்பியா ஸ்டெலாடா என்ற விஞ்ஞானப் பெயரினால் அழைக்கப்படும், நீலோற்பமலர் நாட்டின் தேசிய மலரென குறித்த குழு தீர்மானித்துள்ளதாக உயிர்ப் பல்வகைமை செயலகத்தின் பணிப்பாளர் அஜித் சில்வா குறிப்பிட்டார்.
இதற்கமைய நீலோற்பல மலரின் புகைப்படம் அனைத்து பாடசாலைப் புத்தகங்களிலும் உள்ளடக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தேசிய மலர் தொடர்பான புகைப்படம் தவறாக பிரசுரிக்கப்பட்டமை தொடர்பில் எழுந்த பிரச்சினையால் இந்தக் குழு நியமிக்கப்பட்டது.
இந்தத் தீர்மானம் எதிர்வரும் சில வாரங்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக உயிர்ப் பல்வகைமை செயலகத்தின் பணிப்பாளர் அஜீத் சில்வா மேலும் குறிப்பிட்டார்.