கல்வியமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் இது தொடர்பான சுற்றுநிருபம் ஒன்றினை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இனிவருங்காலங்களில் க. பொ. த. சாதாரணதரத்தில் சித்தியடைந்த தேசிய பாடசாலை மாணவரொருவர் தான் க.பொ.த. உயர்தரத்தில் தொடர வேண்டிய துறை, மொழி மூலம் மற்றும் ஏனைய வசதிகள் இருப்பினும் எக்காரணம் கொண்டும் அவர் தனது பாடசாலையினை விட்டு இன்னொரு தேசிய பாடசாலையில் சேர்த்துக் கொள்ளப்பட இயலாதெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உயர்தரத்தை தொடர்வதற்கு சகல வசதிகளுடனும் கூடிய தேசிய பாடசாலையொன்றிலிருந்து இன்னுமொரு தேசிய பாடசாலைக்கு மாணவர்களை இடம்மாற்றிக் கொள்வதற்கு தடை விதிக்கப்பட வேண்டுமென என்னால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.
இதனையடுத்து இது தொடர்பான விசேட சுற்றறிக்கையொன்று வெளியிடப் பட்டிருப்பதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.
தடை விதிகளை மீறி மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் தேசிய பாடசாலை அதிபருக்கெதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்படுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அனைத்து பாடசாலைகளிலும் க. பொ. த. உயர்தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பெற்றோரின் அளவுக்கதிகமான ஆர்வம் காரணமாக பிரபலமான பாடசாலைகளிலுள்ள மாணவர்களை இன்னுமொரு பிரபலமான பாடசாலையில் சேர்த்துக்கொள்வதற்கான பல்வேறு முயற்சிகள் நடை பெற்று வருகின்றன. இதனால் சட்டவிரோதமான குளறுபடிகள் பல உண்டாக இடமுண்டு எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.