உயர்கல்வி அமைச்சு
மஹாபொல புலமைப் பரிசில் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக செயற்பாடுகளை குழப்பினால் அல்லது வகுப்புகளுக்குச் செல்லாமல் இருப்பார்களாயின் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற புலமைப் பரிசில்கள் இரத்துச்செய்யப்படும் என்ற நடைமுறையினை நேற்றைய தினம் உயர்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இது மஹாபொல நம்பிக்கை நிதியத்தின் கொள்கையில் கூறப்பட்டுள்ள நிபந்தனையாகும். ஆனாலும் இக் கொள்கைகள் இதுவரை காலமும் அமுலாக்கப்படவில்லை என உயர் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களில் மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகள் அதிகரித்து வருவதாலும் பல்கலைக்கழக விவகாரங்களில் மாணவர்கள் தேவையற்ற விதத்தில் தலையிடுவதாலும் அதனை நிறுத்துவதற்கு இத் திட்டம் பெரிதும் பங்காற்றும் என்பதனால் மஹாபொல நம்பிக்கை நிதிய கொள்கையில் கூறப்பட்டள்ள நிபந்தனைகளை இறுக்கமாக நடைமுறைப்படுத்துவது அவசியம் என பல்கலைக்கழகங்கள் கருதுகின்றன என உயர்கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் பல்கலைக்கழக ஒழுங்குவிதிகளுக்கு அமைய மாணவர்கள் செயற்படாது விடின், மஹாபொல திட்டத்திலிருந்து அவர்களை நீக்கும் சட்டத்தை கடுமையாக அமுலாக்கினால் மாணவர்களை இடைநிறுத்தம் செய்தல், விசாரணை மேற்கொள்ளுதல், பொலிஸார் கைது செய்தல் ஆகிய நிலைமைகளை வெகுவாக குறைக்கமுடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.