Monday, February 13, 2012
இசட் (Z) புள்ளி விவகாரம்
Monday, February 13, 2012
News
உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்பு ..
2011ம் ஆண்டு இடம்பெற்ற உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட இசட் புள்ளிகளை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
மே மாதம் 10 ஆம் திகதி இவ் ஆட்சேபனை மனு மீதான விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார். உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 16 மாணவர்களுடன் இணைந்து இலங்கை ஆசிரியர் சங்கம் குறித்த அடிப்படை மனித உரிமை மீறல் அனுவை தாக்கல் செய்துள்ளது.
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தலைமையிலான மூன்று நீதியரசர்கள் கொண்ட குழு முன் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களை இணைத்து இசட் புள்ளி வழங்க மேற்கொண்ட நடவடிக்கையில் சிக்கல்கள் காணப்படுவதாக மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டார். இதனால் மாணவர்கள் பலர் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் இசட் புள்ளி கணிப்பில் எவ்வித சிக்கல்களும் ஏற்படவில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டார்.
எனினும் இது தேசிய பிரச்சினை என்பதால் மனு மீது விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தெரிவித்தார். இதன்படி எதிர்வரும் மே மாதம் 10ம் திகதி மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதோடு எதிர்ப்புகள் இருப்பின் அதற்கு முன்னர் முன்வைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.