கடந்த வருடம் இடம்பெற்ற ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சையில் பாடசாலைப் பரீட்சார்த்திகளில் 3 ஆயிரத்து 908 பேர் 9 பாடங்களில் "ஏ' தர சித்தியைப் பெற்றுள்ளதாதோடு 12 ஆயிரத்து 795 பேர் 9 பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் புள்ளி விபரத் தரவுகள் குறிப்பிட்டுள்ளன.
அத்துடன் இம் முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய பாடசாலைப் பரீட்சார்த்திகளில் 60.8 வீதமானோர் உயர்கல்வியைத் தொடர்வதகு தகுதி பெற்றுள்ளனர்.
இது கடந்த மூன்று ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இம்முறை 0.3 சதவீதம் அதிகமாகும்.
சாதாரண தரப் பரீட்சைக்கு 4 லட்சத்து 43 ஆயிரத்து 298 பேர் தோற்றினர். இவர்களில் 2 லட்சத்து 70 ஆயிரத்து 332 பேர் பாடசாலைப் பரீட்சார்த்திகள். இவர்கள் தொடர்பான புள்ளி விவரங்களையே பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
9 பாடங்களிலும் "ஏ' தர சித்திபெற்ற 3 ஆயிரத்து 908 மாணவர்களில், மேல்மாகாணத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளடங்குகின்றனர். அதேபோன்று 9 பாடங்களிலும் சித்தியடைய தவறிய 12 ஆயிரத்து 795 மாணவர்களில், ஊவா மாகாணத்தை சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளடங்குகின்றனர்.
மேலும் கணித பாடத்தினைப் பொறுத்த வரையில் கடந்த 2010ம் ஆண்டு 60.38 சதவீதத்தினர் சித்தியடைந்த போதும் கடந்த ஆண்டு இடம்பெற்ற சாதாரண தரப் பரீட்சையில் 55.33 சதவீதத்தினரே சித்தியடைந்துள்ளனர்.
ஆங்கில பாடத்தைப் பொறுத்த வரையில் 2010ம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையில் 42.36 சதவீதத்தினர் சித்தியடைந்தபோதும் 2011ம் ஆண்டு பரீட்சையில் 44.57 சதவீதமாக அதிகரித்துள்ளது. விஞ்ஞான பாடத்தைப் பொறுத்த வரையில் 2010ம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையில் 61.72 சதவீதத்தினர் சித்தியடைந்துள்ளனர். இது 2011 ம் ஆண்டு 62.40 சதவீதமாக அதிகரித்துள்ளது.
வரலாற்றுப் பாடத்தைப் பொறுத்த வரையில் 73.78 சதவீதத்தினர் 2010ம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த போதும் கடந்த ஆண்டு 66.45 சதவீதமாக குறைவடைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் உள்ளது.