
க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் தேசிய அடையாள அட்டையினைப் பெற்றுக் கொள்வதில் உள்ள சிக்கல்கள் குறித்து முறையிடுவதற்கு விசேட தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.இவ்வாண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையில் தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்வதில் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து முறையிடுவதற்கு இந்த விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்து என ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜகத் விஜேவீர தெரிவித்துள்ளார்.
அதன்படி நாடளாவிய ரீதியில் இருந்தும் இவ்வாண்டு நடைபெறவுள்ள க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் தோற்றவுள்ள, பரீட்சார்த்திகள் கடந்த அக்டோபர் மாதத்துடன் 16 வயது பூர்த்தியடைந்திருக்கும் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை ஆட்பதிவுத் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.
எனினும், இந்த அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்வதில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அது தொடர்பாக பரீட்சைக்கு ஆரம்பமாவதற்கு முன்னதாக பாடசாலை அதிபர்கள் மற்றும் மாணவர்கள் ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு 011-2583122 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக அறியத்தரமுடியும் எனவும் ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜகத் விஜேவீர மேலும் தெரிவித்துள்ளார்.