தகவல் – எம்.எம்.ஏ.ஷாகிர்Kattankudi.info
மஞ்சந்தொடுவாய்க் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட தற்போது அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் அஷ்ஷெய்க் செய்யத் அலவி ஷரீப்தீன் (நளீமி) அவர்கள் கடந்த 2012 மே 31ம் திகதி அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரிலுள்ள விக்டோரியா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கல்வித் துறையில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.
இவருக்கான கௌரவம் விக்டோரியா பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி பீடர் டோகின்ஸ் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. பலநூறு மாணவர்கள் பட்டம் பெற்ற போதிலும் இவ்வருடம் இப்பல்கலைக்கழகத்தில் இச்சகோதரர் அடங்கலாக ஐவர் மாத்தரமே கலாநிதிப் பட்டம் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவில் கல்வித் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றுக் கொண்ட முதல் இலங்கையர் என்ற பெருமையும் இவரையே சாரும்.
கல்விப் பீடத்தில் பேராசிரியர் நிகொலா யெல்லான்ட் அவர்களின் கீழ் ‘இளைஞர் சமூகமும், கல்வியும்‘ என்ற தலைப்பில் இச்சகோதரரால் சமர்ப்பிக்கப்பட்ட கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வானது பல்வேறு உண்மைகளை வெளிக் கொணர்ந்ததுடன் பல்கலைக் கழக சமூகத்தினால் அமோக வரவேற்பையும் பெற்றது.
சகோதரர் செய்யத் அலவி ஷரீப்தீன் கடந்த 1990ம் ஆண்டு காத்தான்குடி ஹூசைனியா பள்ளிவாயலில் ஷஹீதாக்கப்பட்ட என்றும் எமது மதிப்பிற்குரிய அஷ்ஷஹீட் ஷரீப்தீன் ஆசிரியர் அவர்களின் சிரேஷ்ட புதல்வாராவார். இவர் கடந்த இரண்டு தசாப்தங்களாக அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த போதிலும், எமது பிரதேச மக்களின் பிரச்சினைகளை மறக்காமல் பல்வேறு சமூகப் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டும் வருகின்றார். குறிப்பாக வறிய மாணவர்களின் கல்வி ஊக்குவிப்புக்கான மாதாந்த புலமைப்பரிசில்களையும், வேறு ஆதரவுகளையும் கடந்த பல வருடங்களாக வழங்கி வருகின்றார்.
தனது ஆரம்பக் கல்வியை காத்தான்குடி 1ம் குறிச்சி மட் அந்-நாஸர் வித்தியாலயத்தில் கற்றதுடன், காத்தான்குடி மத்திய கல்லூரியிலும், மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியிலும் கல்வி கற்ற பின் பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் ஷரீஆ கல்வியினைப் பூர்த்தி செய்து நளீமிய்யாவில் பட்டம் பெற்றுக் கொண்டதுடன், பேராதனைப் பல்கலைக் கழகத்தின் இளமானிப் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து கொழும்பு பல்கலைக்கழகத்தில் பத்திரிகையாளருக்கான டிப்ளோமா பட்டத்தைப் பூர்த்தி செய்த இவர் தொடர்ந்தும் சட்டக் கல்வியைக் கற்பதற்காக கொழும்பு பல்கலைக் கழகத்தில் சட்ட பீடத்தில் நுழைந்தார்.
1990ம் ஆண்டின் பயங்கரவாத அகோரத்தில் தனது குடும்பத்தில் பல உயிரிழப்புக்களை எதிர்நோக்கிய நிலையில் அகதியாக கொழும்பில் தஞ்சமடைய வேண்டிய நிலைக்கு இவரது குடும்பம் தள்ளப்பட்டது. இந்த நிலையில் தனது சட்டப் படிப்பைத் தொடர முடியாமல் 1992ம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்கு உலக வங்கியின் புலமைப்பரிசிலைப் பெற்றுச் சென்ற இச்சகோதரர் தனது முதுமானிப் பட்டத்தை கல்வித் துறையில் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் உள்ள டீகின் பல்கலைக் கழகத்தில் பெற்றுக் கொண்டார். தனது தந்தையின் வழியில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் நோக்குடன் கடந்த எட்டு வருடங்களுக்கு மேல் அபுதாபி நகரில் தங்கியிருந்து பல்கலைக் கழக கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகவும் கடமையாற்றியிருந்தார். இது தவிர அவுஸ்திரேலியா, நியுஸிலாந்து ஆகிய நாடுகளில் பாடசாலைகளிலும், பல்கலைக் கழகங்களிலும் பணியாற்றியுள்ளார்.
காத்தான்குடி, ஓட்டமாவடி, மீராவோடை, நாவலடி, மருதமுனை, கொலன்னாவ, மத்திய முகாம், வாழைச்சேனை, பூநொச்சிமுனை, பாலமுனை உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இச்சகோதரரின் ஆதரவில் பல்வேறு சமூகப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வெறுமனே பணத்தை வெளிநாட்டில் இருந்து அனுப்பி வைத்து சமூகப் பணி செய்யுங்கள் என்று இருந்துவிடாமல், தானே தனிப்பட்ட முறையில் தனது வேலைப்பழுக்களுக்கு மத்தியில் குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு வருகை தந்து, மிகவும் கவனமாகவும், கச்சிதமாகவும் செய்து முடிக்கின்ற ஆற்றலும், ஆர்வமும் உள்ளவர் இவர். தனது உறவினர்கள், நண்பர்கள், அறிந்தவர்கள் என்ற உறவில் பல அரசியல்வாதிகளின் தொடர்புகள் இருந்த போதிலும், சமூகப் பணிகளை அல்லாஹ்வின் திருப்தியை மாத்திரம் எதிர்பார்த்து அரசியல் சாயம் பூசாது செய்கின்ற போதுதான் அவை நிரந்தரமாகவும், தூய்மையாகவும் இருக்குமென்பது இவரது கருத்தாகும்.
அவுஸ்திரேலியாவின் தேசிய மாணவர் சம்மேளனத்தின் (FAMSY) தேசியத் தலைவராகவும், விக்டோரியாவின் இஸ்லாமிக் கவுன்ஸிலின் (ICV) செயலாளராகவும் கடமையாற்றியதோடு மட்டுமல்லாது அல்லாஹ்வின் நாமம் ஒலிக்கும் பூமியெல்லாம் எமது பூமியே என்பதை விசுவாசிக்கும் இவர் பௌதீக வரையறைகளையும், புலம்பெயர்ந்த வாழ்வையும் தனது பணிகளுக்கு தடையாகக் கருதுவதில்லை. இந்த அடிப்படையில் தான் பிறந்த, வளர்ந்த பிரதேச மக்களுக்கு தன்னால் இயன்ற பல பணிகளை முன்னெடுத்தும் வருகின்றார். தஃவா பணியென்பது வறுமையொழிப்பை உள்வாங்கியதாய் இருக்க வேண்டும் என்பதும், கல்வித் தாபனங்கள், மருத்துவசாலைகள், ஆன்மீகத்தை வளர்க்கும் மஸ்ஜித்கள் இவைகளை தஃவா அமைப்புக்கள் அழகாய்த்திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படையில் சமூகத்திற்கு வழங்கும் போதுதான் தஃவாப் பணி காத்திரமாய் இருக்க முடியும் என்றும் நம்புகின்றார்.
வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வசிக்கின்ற ஒவ்வொரு சகோதரரும் தமது பெயர்களில் ஒவ்வொரு பவுண்டேசன்களை நிறுவி அதன் மூலம் சிறுமைப்படுத்தப்பட்டுள்ள எமது சமூகத்திற்காக, அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக, வாழ்வின் பிரகாசத்திற்காக பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற கருத்தை உறுதியாக கூற விரும்புவதாகவும், தான் அந்த ஒழுங்கிலேயே செயற்பட்டு வருவதாகவும் இவர் கூறுகின்றார்.
இவரது பணியை அல்லாஹ்தஆலா பொருந்திக் கொள்ள வேண்டும் என்றும், இவரது முன்மாதிரியைப் பின்பற்றி புத்தி ஜீவிகள், வசதிபடைத்தோர் தமது சமுதாயப் பணியை முன்னெடுக்க முன்வரவேண்டுமென்பது எமது எதிர்பார்ப்பாகும்.