அடுத்த வருடத்திற்காக அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு புதிய மாணவர்களை சேர்த்து கொள்வதற்கான சுற்று நிருபம் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி 2013 ஜனவரி 31 இல் ஐந்து வயதைப் பூர்த்திசெய்த பிள்ளைகளை முதலாம் தரத்திற்கு அனுமதிக்க விண்ணப்பிக்க முடியும் என்பதோடு, இந்த காலப் பகுதிக்குள் 6 வயது அல்லது 6 வயதைத் தாண்டிய பிள்ளைகள் அதனிலும் பார்க்க குறைந்த வயதுடைய தகைமையுடைய பிள்ளைகளை அனுமதித்த பின்னரே அனுமதிக்கப்படுவர் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் பிள்ளைகளைச் சேர்க்க விரும்பும் பாடசாலைகளுக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு பெற்றோர்களை கேட்டுக்கொண்டுள்ளது.
2013 இல் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான சுற்று நிருபத்தின் பிரகாரம் விண்ணப்பிக்கும் பாடசாலைகளுக்கு அருகில் வசிக்கும் பிள்ளைகளுக்கு 50 வீதமும் பழைய மாணவர்களின் பிள்ளைகளுக்கு 25 வீதமும், பிள்ளைகளின் சகோதரர்கள் அந்தப் பாடசாலையில் கற்பார்களாயின் அதன் அடிப்படையில் 15 வீதமும், கல்வி அமைச்சின் கீழுள்ள அரச பாடசாலைகளோடு தொடர்புடைய நிறுவன மற்றும் அலுவலகங்களில் சேவையாற்றுவோரின் பிள்ளைகளுக்கு 5 வீதமும், அரச சேவையில் இடமாற்றம் பெற்றுச் செல்வோரின் பிள்ளைகளுக்கும் 4 வீதமும், பிள்ளைகளுடன் வெளிநாடுகளிலிருந்து வருவோரின் பிள்ளைகளுக்கு ஒரு வீதமும் இடம் வழங்கப்படவுள்ளன.
இதில் மேற்குறித்த விடயங்களின் உறுதிப்படுத்துலுக்கான புள்ளிகளின் அடிப்படையிலேயே மாணவர்களின் அனுமதி இடம்பெறவுள்ளன.
இதன் படி பாடசாலைக்கு அருகில் வசிப்போர் அடிப்படையில் விண்ணப்பிப்போருக்கு வாக்காளர் பதிவிற்கு 35 புள்ளிகள் வரையும் வதிவிடத்தை உறுதிப்படுத்த 10 புள்ளிகளும் வதிவிடத்தை உறுதிப்படுத்தும் மேலதிக ஆவணங்களுக்கு 5 புள்ளிகளும் பாடசாலை மற்றும் வதிவிடத்திற்கான தூரத்திற்கு 50 புள்ளிகளும் வழங்கப்படும்.
பழைய மாணவர்களின் பிள்ளைகளை அனுமதிக்கும் போது பெற்றோர் குறித்த பாடசாலையில் கற்ற ஒரு வருடத்திற்கு 2 புள்ளிகள் என்ற ரீதியில் 26 புள்ளிகள் வரையும் பாடசாலையில் கற்ற போது பாடசாலைக்குப் பெற்றுக் கொடுத்த வெற்றிகளுக்கும் 25 புள்ளிகளும், பாடங்கள் தொடர்பான நடவடிக்கைகளுக்கு 25 புள்ளிகளும் , பழைய மாணவர் சங்க உறுப்பினருக்கு 24 புள்ளிகளும் வழங்கப்படும்.
பிள்ளையின் சகோதரர் பாடசாலையில் கற்பாராயின் ஒரு வகுப்புக்கு 3 புள்ளிகள் என்ற ரீதியில் 30 புள்ளிகளும் வாக்காளர் பட்டியலில் பெற்றோரின் பெயர் இருப்பின் 15 புள்ளிகளும் பாடசாலை மற்றும் வதிவிடத் தூரத்திற்கு 35 புள்ளிகளும் வதிவிடத்தை உறுதிப்படுத்தலுக்கு 10 புள்ளிகளும், பாடசாலையில் சகோதரர்கள் பெற்ற வெற்றிகளுக்கு 10 புள்ளிகளும் வழங்கப்படும்.
கல்வி அமைச்சுக்கு கீழ் அரச பாடசாலைகளுடன் தொடர்புடைய நிறுவனம் மற்றும் அலுவலகங்களில் சேவையாற்றும் பிள்ளைகளை அனுமதிக்கும் போது பெற்றோர் சேவை புரியும் காலத்திற்கு 20 புள்ளிகள் வரையும் நிரந்தர வதிவிடம் மற்றும் சேவையாற்றும் இடத்திற்கான தூரத்திற்கு 35 புள்ளிகள் வரையும் கஷ்ட சேவைகள் தொடர்பாக 25 புள்ளிகளும் எடுக்கப்படாத விடுமுறைகளுக்கு 10 புள்ளிகளும் வழங்கப்படவுள்ளன.
இதேவேளை அடுத்த வருடத்தில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிக்கும் போது வசதிக் கட்டணம், சேவைக் கட்டணம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க அங்கத்துவ கட்டணம் தவிர்ந்த வேறு எந்தக் கட்டணங்களோ அல்லது பொருட்களையோ அறவிடுவதற்கு தடை விதித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.