கடந்த வருடம் நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கான இசெட் புள்ளிகளை புதிய மற்றும் பழைய திட்டத்தின் அடிப்படையில் வெவ்வேறாக கணிப்பிடுமாறு உயர் நீதிமன்றம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி கடந்த வருடம் இசெட் புள்ளி கணிக்கப்பட்ட முறையை இரத்து செய்யுமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் உயர்தர பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் சிலர் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்து இன்று (25) தீர்ப்பளித்துள்ள பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க தலைமையிலான உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட குழு இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் இசெட் புள்ளி மீள் கணிப்பிடப்பட்டு அறிவிக்கப்பட வேண்டும். பழைய மற்றும் புதிய முறை இரண்டையும் ஒன்றிணைத்து கடந்த வருட உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு இசெட் புள்ளி விநியோகிக்கப்பட்டதால் மாணவர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டனர்.
அதனால் வெளியிடப்பட்ட பரீட்சை பெறுபேறுகளை இரத்து செய்யுமாறு மனுதாரர்கள் விடுத்த கோரிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம் இசெட் புள்ளியை மாத்திரம் இரத்து செய்து மீள் கணிப்பீடு செய்யும்படி தீர்ப்பளித்துள்ளது