இலங்கை முஸ்லிம்களின் கலங்கரையாக விளங்கும் ஜாமியா நளீமிய்யா இஸ்லாமிய கலாபீடத்தை தனியார் இஸ்லாமிய பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நளீமிய்யாவின் முகாமைத்துவ சபையிடம் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கையிலேயே இது பற்றிக் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
முஸ்லிம் சமூகத்தின் கல்வித்துறைக்கு உயிருட்டியவர்களில் ஜாமிய்யாவின் ஸ்தாபகர் நளீம் ஹாஜியார் முதன்மையானவர். அவரால் உருவாக்கப்பட்ட நளீமியா கலாபீடம் உலகின் பல பாகங்களிலும் தமது திறமைசாலிகளை விதைத்துள்ளது. இத்தொடரின் ஒரு அங்கமாக இஸ்லாமியப் பல்கலைக்கழகமாக ஜாமிய்யாவை மாற்ற வேண்டுமென்ற சிந்தனையை நாம் வைக்கிறோம். இச்சிந்தனைக்கு இன்றுள்ள சூழலில் மிகப் பொருத்தமானது நளீமிய்யா மட்டுமே.
கடந்த 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற புத்தசிரவாக பிக்கு பல்கலைக்கழக திருத்தச்சட்டமூல விவாதத்தின் போது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா, இஸ்லாமிய பல்கலைக்கழகமொன்றின் தேவையை வலியுறுத்தியமையை எடுகோளாகக் கொண்டு அதற்கான சூழல்கொண்ட பேருவளை ஜாமிய்யா நளீமிய்யாவை ஓர் இஸ்லாமியப் பல்கலைக்கழகமாக மாற்ற அரசியல் மற்றும் சூழ்நிலைகளை மறந்து முன்வரவேண்டும்.
இன்று முஸ்லிம் கல்வி வீதம் அதிகரித்துக்கொண்டுவரும் சூழ்நிலையில் பல்கலைக்கழக ஒழுக்க விழுமியங்களை கேள்விக்குறியாகியுள்ளன. இதனைச் சீராக்க வேண்டுமாயின் தனியான இஸ்லாமியப் பல்கலைக்கழகம் என்ற எண்ணக்கருவை நோக்கி முஸ்லிம் சமூகுத்தினர் நகர வேண்டியுள்ளது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.