அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் 2013 /15 கல்வியாண்டுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பயிலுனர்களுக்கான பதிவு நடவடிக்கைகள் ஜுலை 03 ஆம் திகதி புதன்கிழமை காலை 9 மணி முதல் நடைபெறும் என பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் தெரிவித்தார்.
கற்கை நெறிகளுக்கு தெரிவான பயிலுனர்களுக்கான கடிதம் ஏற்கனவே அவர்களது தனிப்பட்ட முகவரிக்கு அஞ்சலிடப்பட்டுள்ளதாகவும் பீடாதிபதி நவாஸ் மேலும் குறிப்பிட்டார்.
விஞ்ஞானம் 30, கணிதம் 30, தமிழ் 30, ஆரம்பக் கல்வி 50, வணிகமும் கணக்கியலும் 20, இஸ்லாம் 15, விஷேட கல்வி 15 என மொத்தம் 190 பயிலுனர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சையிலிருந்து இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பதிவுக்கான கடிதம் கிடைத்தவர்கள் மாத்திரம் 03 ஆம் திகதி கல்லூரிக்கு சமூகமளித்து பதிவு செய்து கொள்ள வேண்டும். கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களுடன் சமூகமளிப்பது அவசியமாகும் எனவும் பீடாதிபதி வலியுறுத்தினார்.
புதிய பயிலுனர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நோன்பு விடுமுறையைத் தொடர்ந்து ஆரம்பமாகவுள்ளன. இதே வேளை அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி இரண்டாந்தவணை விடுமுறைக்காக ஜுலை 05 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மூடப்படவுள்ளது.