அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே



INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


Thursday, May 30, 2013

முகலாயர் ஆட்சிக்காலம் (கி.பி.1526-1858, ஹி.932-1274)

புகழ் மிக்கதோர் ஆட்சி மரபினை இந்தியாயாவில் நிலை நாட்டிய பெருமை முகலாயரையே சாரும். இந்திய வரலாற்றில் முஸ்லிம்களது ஆட்சியின் பொற்காலமாக முகலாயரது ஆட்சிக்காலம் கருதப்படுகிறது. சுமார் 3 நூற்றாண்டுகளுக்கு மேலாக இந்தியாவை ஆட்சி செய்த இவர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்திய உபகண்டத்தில் பெரும் பகுதி முழுவதையும் தமதாட்சியின் கீழ் கொண்டு வந்தார்கள். இவர்கள் இந்தியாவின் அரசியல், பொருளாதார, சமய, சமூக மாற்றங்களுக்கு தமது பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர்.

முகலாயப் பேரரசு உச்ச நிலையில் இருக்கும்பொழுது, அக்காலத்தில் பாரதம் என்று அழைக்கப்பட்ட இந்தியாவின் பெரும் பகுதியையும், ஆப்கானிஸ்தானின் ஒரு பகுதி, பாகிஸ்தான் என்பவற்றையும் உள்ளடக்கிய பேரரசாக அது இருந்தது. கிபி 1526 தொடக்கம், 1712 வரையான காலப்பகுதியில் இந்த அரசு நிலைபெற்றிருந்தது. துருக்க-பாரசீக அல்லது துருக்க-மங்கோலிய திமுரிட் தலைவனான பாபர், 1526 ஆம் ஆண்டில் கடைசி டில்லி சுல்தானான இப்ராஹிம் லோடி என்பவரை, முதலாவது பானிபட் போரில் தோற்கடித்து முகலாய அரசைத் தோற்றுவித்தார். "முகல்" என்பது மங்கோலியர் என்பதற்கான பாரசீக மொழிச் சொல்லாகும். இவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்களாவர்.

இந்தியாவில் இஸ்லாமிய ஷரீஅத் அமைப்பிலான ஆட்சியை முகலாயர் தமதாட்சிக் காலத்தில் ஏற்படுத்தினர். இவர்களது ஆட்சியின் கீழ் இவர்கள் பின்பற்றிய சமயப் பொறை காரணமாக மக்கள் சுதந்திரமாக வாழ்ந்தனர். நீண்ட கால ஆட்சியொன்றை முகலாயர் தொடர்வதற்கு அவர்கள் பின்பற்றிய சமய சகிப்புத் தன்மையே காரணமாக அமைந்தது எனலாம். இவர்களது இராணுவத்தில் சேர்ந்திருந்த முஸ்லிமல்லாதோருக்கு ஜிஸ்யாவிலிருந்தும் விலக்களிக்கப்பட்டிருந்தது.

முகலாயராட்சியில் இஸ்லாமிய கலாசார முறை நன்கு பேணப்பட்டது. முஸ்லிம்கள் மட்டுமன்றி முஸ்லிமல்லாதோரும் கலாசார நடைமுறைகளிலும் பண்பாட்டு அம்சங்களிலும் இஸ்லாமிய நடைமுறைகளையும் பின்பற்றியது மட்டுமன்றி அதனை ஒரு கௌரவமாகவும் கருதினர்.

சாதிப்பாகுபாடு நிறைந்திருந்த இந்தியாவில் சமத்துவத்தை நிலை நாட்ட முகலாயர் சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டனர். இதனால் கவரப்பட்டுத்தான் இந்துக்களில் அதிகமானோர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். இதற்கு மாறான வேறெந்த வழிமுறையாலும் இஸ்லாம் அங்கு பரவவிலை.

முகலாயப் பேரரசர்கள்


பாபர் 1526 - 1530 (47)


ஹுமாயூன் 1530 - 1540 - 1556 (48)


அக்பர் 1556 - 1605 (63)


ஜஹாங்கீர் 1605 - 1627 (58)


ஷாஹ்ஜஹான் 1627 - 1658 - 1666 (74)


ஔரங்கஜீப் 1658 - 1707 (89)


பாபர் (கி.பி.1526 - 1530 / 932 - 937)


துருக்கியில் கலீபா சுலைமானும் பிரான்ஸை 1ம் ஃபிரான்சிஸ்ஸும் ஜெர்மனியை 5ம் சார்ல்ஸ்ஸும் இங்கிலாந்தை 8ம் ஹென்றியும் ஆரசோச்சிய காலத்தில் இந்தியாவை ஆட்சி செய்தவரே பாபராவார். இவர்களோடு பாபரை ஒப்பிடும்போது பாபர் மிகச் சிறந்த வீரராகவும் கலைஞராகவும் அறிஞராகவும் விளங்குகிறார். இதனால்தான் வின்ஸ்ஸன் ஸ்மித் போன்றவர்கள் இவரை 16ம் நூற்றாண்டில் ஆசியாவிலேயே தலை சிறந்த ஆட்சியாளர் என சிலாகித்துக் கூறுகின்றனர். மனிதாபிமானம் மிக்க இவர் தனது நண்பர்களைப் போற்றினார்; உறவினர்களை நல்வழிப்படுத்தினார். இந்தியாவின் மீது படையெடுத்துக் கொள்ளையடித்துச் சென்ற முன்னோர்களைப் போலல்லாமல் நிரந்தர ஆட்சி அமைத்து மக்களுக்கு நிலையான வாழ்வு தந்தார். அவரது சகோதரர் நஸீர் மிர்ஸா அவருக்குப் பல தொல்லைகள் தந்த போதிலும் பாபர் தன்னம்பிக்கையோடு செயலாற்றினார். எது நடப்பினும் அது ஆண்டவன் செயல் என்று இருப்பார். தோல்வியைக் கண்டு துவண்டு விடாமலும் வெற்றியைக் கண்டு சோம்பியிராமலும் தன் செயல்களை சீர்பட நடத்தினார்.

இவர், 1483ல் பர்கானாவின் ஆட்சியாளராக இருந்த உமர்ஷேக்கின் புத்திரராவார். துருக்கிய மொழிச் சொல்லான "பாபர்" எனும் பதத்திற்கு புலி என்பது பொருள். பாபரும் தன் பெயரின் பொருளுக்கேற்ற வகையில் வலிமை மிக்கவராகவும் துணிவுள்ளவராகவும் விளங்கினார். இவர் மத்தியாசியாவில் வாழ்ந்த இரு பெரும் போர் வீரர்களான ஜங்கீஸ்கான், தைமூர் முதலானவர்களின் வழித்தோன்றலாவார்.பாபரின் தந்தை அகால மரணமடிந்ததால் 11 வயதிலேயே பர்கானாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானார்.

இவர் முதலில் சமர்க்கந்த். ஆட்சியாளராக இருந்து அதை இழந்த பின்னர் 1504ல் காபூல் பிரதேசத்தின் ஆட்சியாளரானார். இக்காலை டில்லி இப்ராஹீம் லோடிக்கு எதிராகப் படை நடாத்திச் சென்று லோடியத் தோற்கடித்து இந்தியாவின் ஆட்சியாளரானார். இப்படையெடுப்பு முதலாம் பனிபட் படையெடுப்பு எனப்படுகிறது. இப்படையெடுப்புக்கு அப்பாலும் இவரது காலத்தில் பல படயெடுப்புக்கள் இடம்பெற்றன. 1ம் பனிபட் போர் (1526), கான்வாப் போர் (1527), சந்தேரிப் போர், கோக்ரா நதிப் போர் (1529) முதலாம் போர்கள் பாபர் காலத்து முக்கிய போர்களாகும்.

பாபர் பன்முக ஆளுமை படைத்த ஒருவராக விளங்கினார். கலைஞர், கவிஞர், இலக்கியவாதி, பேச்சாளர், கட்டடக்கலை நிபுனர் என ஆவரது ஆளுமையின் தளம் பரந்து நின்றது. இளமையில் அனுபவித்த துன்பங்கள் காரணமாக இரக்கம், அன்பு, வீரம், சகிப்புத் தன்மை ஆதியாம் குணங்கள் பாபரிடம் குடிகொண்டன. இவர் கண்ட போர்க்களங்களின் எண்ணிக்கை அவரது வாள் நாளைவிட அதிகமான்னதாகும். பாபரின் இவ்வாறான வெற்றிகளுக்குப் பின்வருவனவற்றைக் காரணங்களாகக் குறிப்பிடலாம்.
1. நங்கு பயிற்றப்பட்டிருந்த அவரது இராணுவம் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் பேணியதோடு இந்தியாவைக் கைப்பற்ற வேண்டும் என்ற விடயத்தில் ஒருமுகப்பட்டிருந்தம்மை.
2. நவீன ரக ஆயுதங்களைப் பயன்படுத்தும் திறனைப் பெற்றிருந்தமை.
3. பாபரே தன்னளவில் சிறந்ததொரு படைத் தளபதியாகவும் போர்-வீரராகவும் யுத்த அனுபவம் மிக்கவராகவும் காணப்பட்டமை.

தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒழுங்கையும் அமைதியையும் நிலை நாட்டிய பாபர், நாட்டு மக்களோடு மிக நல்ல முறையில் நடந்து கொண்டார். மக்களையும் அவர்களது உடமைகளையும் பாதுகாத்தார். திருடர்களையும் வழிப்பறிக்காரர்களையும் ஒடுக்கிய அவர் குறு நில மன்னர்களின் துன்புறுத்தல்களில் இருந்தும் மக்களைக் காத்தார்.

பாபர் தனது வரலாற்றை "பாபர் நாமா" என்ற பெயரில் துருக்கி மொழியில் எழுதினார். ஃபார்ஸியிலும் துருக்கி மொழியிலும் போர், காதல், மது போன்ற தலைப்புக்களில் கவிதைகளும் எழுதினார். இவர் ஹனஃபி மத்ஹபைத் தழுவி சட்ட நூலொன்றையும் எழுதியுள்ளார்.

பாபர் ஓய்வின்றிப் பல போர்களில் தொடராக ஈடுபட்டதாலும் இந்தியாவின் சுவாத்திய நிலை தனது உடல் நிலைக்குச் சாதகமாக அமையாததாலும் காலப்போக்கில் இவரது உடல் நிலை குன்றியது. இவ்வேளை மகன் ஹுமாயூனுக்கு ஏற்பட்டிருந்த குணப்படுத்த முடையாத நோய் கண்டு மேலும் மனம் வருந்தினார். ஏலவே நோய்வாய்ப்பட்டிருந்த பாபரின் உடல் நிலை இதனால் மேலும் மோசமாகியது. இறுதியாக பாபருக்கு ஏற்பட்ட வயிற்றுக் கோளாறின் காரணமாக 1530ல் அவர் மரணமானார். பாபர் மரணப் படுக்கையில் இருந்தபோது தனது மகன் ஹுமாயூனை அடுத்த வாரிசாக நியமனம் செய்தார்.

ஹுமாயூன் (1530 - 1556 / 937 - 963)


இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவிய பாபரின் மூத்த மகனாகிய இவரது இயற் பெயர் நாஸிருத்தீன் ஹுமாயூன் என்பதாகும். 1508ல் காபூலில் பிறந்த இவரது தாயின் பெயர் மஹிம் பேகம் என்பதாகும். சிறு வயதிலேயே அரபு, ஃபார்ஸீ, துருக்கி முதலாம் மொழிகளையும் சோதிடம், கணிதம் போன்ற கலைகளையும் கற்றுத் தேர்ந்தார்.

பாபருக்குப் பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஹுமாயூன், ஷாஹ் நஸீருத்தீன் ஹுமாயூன் எனும் பெயருடன் 1530ல் அஆக்ராவில் மகுடம் சூடிக்கொண்டார். இவரது ஆட்சியைக் கவிழ்க்க இவரின் உடன் பிறந்தவர்களும் ராஜபுத்திரர்களும் ஆப்கானியரும் முனைப்புக் காட்டினர். அவருக்கெதிராகப் போர்களும் சதிகளும் புரட்சிகளும் தொடர்ந்தன. எனினும் தனது தந்தையின், "உடன் பிறந்தவர்களோடு நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமென்ற" இறுதி அறிவுரையை கடைசிவரை காப்பாற்றினார். அந்தவகையில் தனது சகோதரர்களை ஆளுநர் பதவிகளில் அமர்த்தினார். எடுத்துக் காட்டாக, சகோதரர் கம்ரானிடம் காபூலும் கந்தகாரும் ஒப்படைக்கப்பட்டன. பிறிதொரு சகோதரரான ஹிந்தாவிடம் மேவாத் போன்ற பகுதிகளைக் கையளித்தார். இத்தனை செய்தும் அவகள் ஹுமாயூனுக்குத் துரோகமே இழைத்தனர்.

ஆட்சிக்கு வந்ததும் ஹுமாயூனுக்கு எதிராகப் பல எதிர்ப்புக்கள் தோன்றின. அவற்றைச் சரியான திட்டங்களின்றி எதிர்க்க முற்பட்டார். எதிராளிகளை அன்புக்கரம் கொண்டு அரவணைத்தார். உண்மையில் இதுவே அவரதுவீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்தது.

1540ல் கன்னோசிப் எனும் போரில் ஷெர்ஷாஹ் என்பவர் ஹுமாயூனைத் தோற்கடித்ததால் அவர் ஆட்சியை இழந்தார். 1555ல் ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் வரை ஊரூராக உதவி கேட்டு அலைந்து திரிந்தார். இக்காலங்களில் (1540 - 1555) அவரது சகோதரர்கள்கூட அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதியில் பாரசீகரின் உதவியோடு மீண்டும் டில்லியைக் கைப்பற்றினார். பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஹுமாயூன் ஆட்சியை மீண்டும் கப்பற்றியபோதும் அரச வாழ்க்கையை அனுபவிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிட்டவில்லை. 1556ல் ஒரு நாள் வாசிகசாலையில் இருந்து மாடிப் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தபோது நினைவிழந்து கீழே விழுந்தார். மறு நாள் மரணமானார். இவர் மரணித்தபோது மகன் அக்பர் போர் முகாமொன்றில் வெகு தொலைவில் இருந்தார். அக்பர் வந்து சேரும்வரை சுமார் 17 நாட்கள் ஹுமாயூனின் மரணம் வெளி உலகிற்குத் தெரியாதிருந்தது. அக்பர் வந்து சேர்ந்த பிற்பாடே அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

சுமார் கால் நூற்றாண்டு காலம் இந்தியாவை ஆட்சி செய்துள்ள இவர் ஐந்தாண்டு காலம் பல நாடுகளுக்கு அலைந்து திரிந்து நாடோடி வாழ்க்கை வாழ்ந்தார். ஆட்சிக்காலம் முழுவதும் சோதனை மிகுந்த காலமாக அமைந்திருந்ததே தவிர நிலையான - உறுதியான - முன்னேற்றம் தரும் ஆட்சியொன்றை அவரால் அளிக்க முடிய்ட்வில்லை. ஆயினும் அவர் கலை, இலக்கியத் துறையின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளார். கட்டடக் கலையும் ஓவியக் கலையும் இவரது காலத்தில் சிறப்புற்று விளங்கின. கட்டடக் கலைஞர்களும் ஓவியர்களும் பாரசீகத்திலிருந்து அழைத்துவரப்பட்டனர்.

ஹுமாயூன் அன்புள்ளமும் ஈகைக் குணமும் மிகுந்தவர். பிறரை மன்னிக்கும் தயாள குணம் படைத்த இவர் எவருக்கும் தீங்கு செய்யா உள்ளம் படைத்தவராகவும் காணப்பட்ட்டார். இருப்பினும் அவரது வாழ்க்கை போராட்டம் மிக்கதாகவே அமைந்திருந்தது. அப்போராட்டங்கள் முடிவுறும் தருணத்தில் அவரது வாழ்வும் முடிந்து போனது.

ஹுமாயூன் இந்தியாவுக்கு வழங்கிவிட்டுச் சென்ற அன்பளிப்புக்களுள் பெறுமதி மிக்கதும் போற்றுதலுக்குரியதுமான அன்பளிப்பாக அவரையடுத்து ஆட்சிபீடமேறிய மாமன்னர் அக்பர் கருதப்படுகின்றார். பகைவர்களையும் நண்பர்களாக்க முனைந்த இவரை வரலாற்றாசிரியர்கள் பண்பட்ட ஒரு மனிதர் எனக் குறிப்பிடுவது நோக்கத்தக்கது.

அக்பர் (1556 - 1605 / 963 - 1014)


இந்தியாவில் அரசாண்ட சிறப்புமிக்க அரசர்களுள் அக்பரும் ஒருவர். அளப்பரிய அல்லல்களுக்கிடையில் பிறந்து வளர்ந்து, படிக்காத மேதையாகி, வீரனாகவும் விவேகியாகவும் வாழ்ந்து பேரரசு ஒன்றை அமைத்து எம்மதமும் சம்மதம் என்ற சமயப் பொறையுடன் செங்கோலோச்சிய ஒருவர் இவர். இந்தியாவிலிருந்த இரு பெரும் மதங்களான இந்து மதத்தையும் இஸ்லாத்தையும் இணைக்கும் ஒரு பாலமாக அமைந்து, காலமெல்லாம் இருந்துவந்த மதப் பூசல்களுக்கு முடிவவு காண முயன்ற விந்தை மனிதர் இவர். களத்தில் தோல்வியே கண்டிறாதவர். அவரது சீரிய ஆட்சி முறையின் சுவடுகளை முகலாயருக்குப் பின் வந்த ஆங்கிலேயரின் ஆட்சி முறையிலும் காணலாம். அக்பரின் ஆட்சியில் மத பேதமின்றிப் பதவிகள் வழங்கப்பட்டன. எல்லா மதத்தினரையும் பின்னிப் பிணைத்து வலிமைமிக்க பேரரசொன்றை நிறுவிய பெருமை அக்பரையே சாரும். அக்பர் நிலவரி நிர்வாகத்திலும் சமூகத்திலும் செய்த சீர்திருத்தங்கள் அவருக்கு வரலாற்றில் நிலையான ஒர் இடத்தைப் பெற்றுத் தந்தன. இவரது அரவணைப்பில் கலைகள் வளர்ந்தன; கற்றோர் களிப்புற்றனர். முஸ்லிம்கள் இந்தியாவில் காலூன்றிய நாள் முதல் அவர்களது ஆட்சி முடிவடையும் வரை அக்பரைப் போன்ற ஒரு மாமன்னர் தோன்றவில்லை எனலாம்.

அக்பரின் தந்தை முகலாயப் பேரரசர் ஹுமாயூன் ஆவார். ஹுமாயூன் ஆட்சியை இழந்து சிந்துவில் அலைந்து கொண்டிருந்தபோது அப்பிரதேசத்தில் இருந்த அமர்கோட் எனும் சிற்றூரில் கி.பி.1542ல் அக்பர் பிறந்தார். இளமையில் புத்தகப் படிப்பு அக்பருக்கு வேம்பாய்க் கசந்தது. பாரசீக அறிஞர் அப்துல் ல்தீப் என்பவர் அவருக்கு முழு நேர ஆசிரியராக நியமிக்கப்பட்டபோதும் இவர் படிப்பில் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை. மாறாக குதிரைச் சவாரியிலும் அம்பெய்தல், வேட்டையாடுதல் முதலானவற்றிலும் அலாதிப் பிரியம் காட்டினார். இயல்பிலேயே இவர் சிறந்த அறிவுக்கூர்மையையும் நினைவாற்றலையும் பெற்றிருந்தார்.

தந்தை ஹுமாயூனின் மரணத்தயடுத்து அப்போது 13 வயது மட்டுமே நிரம்பியிருந்த அக்பர் ஆக்ராவில் வைத்து பாதுஷாவாக 1556ல் முடிசூட்டப்பட்டார். இவர் சிறுவராக இருந்ததால் ஆரம்பத்தில் ஆட்சிப் பொறுப்பு முழுவதும் அக்பரின் உதவியாளராக இருந்த பைராம்கானிடம் ஒப்படைக்கப்பட்டது. வயது 18 ஆனதும் ஆட்சிப் பொறுப்பைக் கையிலெடுக்க விரும்பியதால் பைராம்கானுக்கும் அக்பருக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியது. தனது ஆப்கானிய உதவியாளர் ஒருவரின் துணை கொண்டு பைராம்கானைத் தீர்த்துக் கட்டி, ஆட்சிப் பொறுப்பு முழுவதையும் தனதாக்கிக் கொண்டார்.

ஆட்சியைப் பலப்படுத்திய அக்பர் பின்னர் தனது சாம்ராஜ்யத்தின் எல்லையை விஸ்தரிக்க விரும்பினார். முதற்கட்டமாக குவாலியர் கோட்டை மீது படை நடாத்திச் சென்று அதனைத் தன்வசப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து மாளவம் (1561), கோண்டுவானா (1564), சிதூர் (1567), குஜ்ராத் (1572), கிழக்கு வங்கம் (1574), மேவார் (1576), காஷ்மீர் (1586) போன்ற பல பிரதேசங்கள் கைக்கப்பற்றப்பட்டு அக்பரின் ஆட்சியின் கிழ் கொண்டுவரப்பட்டன.இதன் பின்னரும் தக்காணம், அஹ்மத் நகர், காந்தேஷ் முதலாம் பகுதிகள் அக்பரால் கைப்பற்றப்பட்டன.

ஆட்சியைப் நிலைப்பலப்படுத்தும் தனது திடடத்தின் அடுத்த கட்டமாக இராஜபுத்திரர்களுக்கும் தனக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடலானார். இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சி வேரூன்ற வேண்டுமானால் இந்து வீரர்களான இராஜபுத்திரர்களின் உறவும் ஒத்துழைப்பும் அவசியம் என்பதை அக்பர் நன்கு உணர்ந்திருந்தார். எனவே அக்பர் இராஜ புத்திரர்களோடு மென்மையாக நடந்து கொண்டார். இந்துக்களைப் பகைத்துக் கொள்ளாமல் அவர்களை அரவணைக்கவும் செய்தார். 1562ல் தனதாட்சிக்குப் பணிந்த ஜெய்ப்பூர் அரசர் பீஹர்மாலின் புத்திரியைத் தனது மனைவியாக்கிக் கொண்டார். இவரின் புத்திரர்தான் இளவரசர் ஸலீம் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னரும் தனக்குப் பணிந்த ஆட்சியாளர்களின் புத்திரிகளை மணந்து கொண்டதோடு மட்டுமன்றித் தனது உறவினர்களையும் இந்துப் பெண்களை மணக்கச் செய்தார். இராஜபுத்திரர்கள் பலரை அக்பர் தனது நிர்வாகத்தில் உயர் பதவிகளிலும் அமர்த்திக் கொண்டார். இத்தகைய திருமணங்கள் ஆட்சிக்கு நன்மை பயப்பதாகவே அமைந்தன.

மன்னர் அக்பரது இந்த இராஜ புத்திரக் கொள்கை இந்து முஸ்லிம் பண்பாட்டு ஒருமுகப்பாட்டுக்கு வழிகோலியது. கருத்துப் பரிமாற்றமும் கலாசாரப் பரிமாற்றமும் தடையின்றி இடம்பெற்றன. இந்துக்கள் உருது, பாரசீகம் போன்ற மொழிகளைக் கற்றனர். முஸ்லிம்களும் சமஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிகளைக் கற்றனர். இந்நடைமுறை நாளடைவில் இந்து மதக் கொள்கைகளின்பால் அக்பரை ஈர்க்கச் செய்தது. தனது இந்துமத மனைவியருக்கு அவர்களது சமயச் சடங்குகளையும் விழாக்களையும் மேற்கொள்ள இடமளித்ததோடு நில்லாது தானும் அம்மதத்தின் ஆசாரங்கள் பலவற்றையும் மேற்கொண்டார். நாள்தோறும் தனது ஜன்னலருகே நின்று பொது மக்களுக்கு தரிசனமளித்தார். தீபாவளி, சிவராத்திரி போன்ற பண்டிகைகளைக் இந்துக்களோடு சேர்ந்து கொண்டாடினார். நெற்றியில் திலகமிடுவதையும் வழக்காக்கிக்கொண்டார். இந்துக்களைப் போலவே தலையில் குடுமி வைத்து தலைப்பாகை கட்டிக்கொண்ட அக்பர், இந்து மத ஆசாரப்படி காலில் வீழ்ந்து வணங்கும் வழகத்திற்கும் தனது அவையில் அனுமதி வழங்கியிருந்தார்.

அக்பர் புகுத்திய புதிய சமயக் கொள்கையே "தீனே இலாஹீ" (இறை ஒருமைப்பாடு) என்பதாகும். பல ஆண்டுகளாக இறைவனைப் பற்றி ஆழமான ஆய்வுகளை மேற்கொண்ட அவர், இதர சமயங்களின் குறை நிறைகளையும் அலசி ஆராய்ந்தறிந்ததன் விளைவாகப் பிறந்ததே இந்தப் புதிய மார்க்கமாகும். நாடு முழுவதற்குமான ஒரு பொதுச் சமயம் தேவை எனும் கருத்தியலை மையப்படுத்தியதாகவே அக்பரின் இக்கொள்கை அமைந்தது. வஹ்ததுல் வுஜூத் சிந்தனைத் தாக்கத்துக்கு உட்பட்டிருந்த ஜிஸ்திய்யாத் தரீக்காவின் கருத்தியலால் அக்பர் கவரப்ப்பட்டிருந்ததன் விளைவாகவே இந்த தீனே இலாஹீ சிந்தனை அவருள் கருக்கொண்டதென்பர்.

அக்பர் தனனது பாட்டனைப்போலவே நெஞ்சுரம்மிக்க ஒரு கடமை வீரராகத் திகழ்ந்தார். இளமை முதல் போர்களிலும் வேட்டையாடுவதிலும் ஈடுபாடு காட்டியதால் அவர் மிகச் சிறந்த உடற்பலத்தைப் பெற்றிருந்தார். வீரத்தில் மாவீரன் அலக்ஸாண்டருக்கு ஒப்பிடப்பட்டார். கடினமான ஒரு பணியைக்கூட விருப்போடு ஏற்றுக்கொள்வது அவரது இயல்பாக இருந்தது. ஒரு சமயம் அஜ்மீருக்கும் ஆக்ராவுக்கும் இடையிலான 240 மைல் தூரத்தை சரியாக ஒரே நாளில் சவாரி மூலம் சென்று முடித்தார்.

அக்பர் சிறு வயது முதலே குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். சிலபோது அளவு கடந்து குடித்ததால் தன்னிலை கெட்டுத் தடுமாறிய சந்தர்ப்பங்களும் உண்டு. வாலிப வயதில் காம வெறி கொண்டலைந்த அக்பர், அழகிய பெண்களை அடைவதில் அதீத ஆவல் கொண்டிருந்தார். பிற்காலத்தில் தன் தவறுகளை உணர்ந்து திருந்தி வாழ்ந்தார். கோபமுற்ற சந்தர்ப்பங்களில் தீயெனக் கொதித்த அக்பர், கோபம் தணிந்த வேளைகளில் குளிரும் நிலவு போன்று காட்சியளித்தார்.

படியா மேதையான அக்பருக்கு கேள்வி ஞானமே அதிகமிருந்தது. அவரிடம் காணப்பட்ட இந்த இயல்பான ஞானம்தான் அவரை மெய்ப்பொருள் காணவும் வைத்தது.

எல்லா மன்னர்களியும் போலவே இவரும் இந்தியக் கட்டடக் கலை வளர்ச்சியில் பெரும் பங்களிப்புச் செய்தார். தனது மகன் ஸலீமின் பிறப்பையொட்டி ஆக்ராவில் 7 மைல் சுற்றளவு கொண்ட , மூன்று பக்கங்கள் சுவரால் சூழப்பட்ட ஒரு சிறுப் நகரை நிருமணித்தார். ராணி ஜோத்பாய் மாளிகை, பீர்பால் இல்லம், தீவானி காஸ், செங்கோட்டை, திவனே ஆம், யானை வாசல், ஹிரான் மினார், லாகூர் கோட்டை, அலகாபாத் கோட்டை முதலியன அக்பரின் கட்டடக் கலை ஆர்வத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

அக்பர் மேற்கொண்ட சீர்திருத்தங்களுள் சமூக சீர்திருத்தங்களும் முக்கியமானவை. உடன் கட்டையேறும் மரபைப் பெண்கள்மீது திணிப்பதைத் தடுத்தார். குழந்தைத் திருமணத்தினைத் தடை செய்த அவர் திருமணத்தில் கணவன் - மனைவியின் இசைவு கட்டாயமானது என வலியுறுத்தியதோடு நில்லாது திருமண வயதை ஆண்களுக்கு 16 எனவும் பெண்களுக்கு 14 எனவும் நிருணயித்தார். பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கே பலதார மணம் செய்ய அனுமதித்த அக்பர் பல மனைவியரைக் கொண்டிருந்தார் என்பது நோக்கத்தக்கது.

கல்வித்துறையிலும் இவர் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டார். பாடசாலைக் கல்வித் திட்டத்தில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். அதன் முதற் கட்டமாக பண்டைய இலக்கிய நூல்களைப் பாடசாலைகளில் கற்பிக்க வழி செய்ததோடு கணிதம், மருத்துவம், வானியல், வரலாறு, மனைப் பொருளியல் முதலான பாடங்களைப் போதிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்.

ஆன்மீகத்தைப் பொறுத்தவரை அக்பர் அசோகரோடு ஒப்பிடப்படுகிறார். சமய விவாதங்களில் கலந்து கொண்டு பரம் பொருள் ஒன்றுதான் என்பதை வ்லியுறுத்தினார். மக்களிடையே சமய ரீதியாக ஏற்படும் பூசல்களுக்கு இறைவன் பற்றிய அறிவின்மையே காரணமென்றார்.சமய சார்பற்ற சமூகமைப்பொன்றைத் தோற்றுவிக்கும் பணியில் அவர் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் புரட்சிகரமானவை. இவரது சிந்தனைப் போக்குகள் ஷரீஅத்துக்கு முரணாக அமைந்தமையால் அக்பர் மார்க்க மேதைகளால் விமர்சிக்கக்கப்பட்டார்.

சுமார் 50 வருடகால ஆட்சியின் பின்னர் மன்னர் அக்பர் தனது 63ம் வயதில் காலமானார். இவரது அடக்கவிடம் ஆக்ராவிலுள்ள சிக்கந்தரா எனுமிடத்தில் அமையப் பெற்றுள்ளது
.
ஜஹாங்கீர் (1605 - 1627 / 1014 - 1036)


அக்பர் இறக்கும்போது தனது புத்திரர் ஸலீம்தான் தனக்குப் பின்னர் ஆட்சியாளராக வரவேண்டுமென விரும்பினார். இதன்படி 1605ல் (ஒக்டோபர் 21)நூருத்தீன் முஹம்மத் ஜஹாங்கீர் பாதுஷா காழி எனும் பட்டப்பெயரோடு இவர் ஆட்சியில் அமர்ந்தார். ஜஹாங்கீர் என்ற பாரசீகப் பதத்திற்கு உலகைக் கைப்பற்றி ஆள்பவன் என்பது பொருளாகும்.

1569ல் பிறந்த இவர் இளம் பராயத்திலேயே பாரசீகம், துருக்கி, ஹிந்தி முதலாம் மொழிகளை விரும்பிக் கற்றார். இளமையிலேயே இலக்கியம், கணிதம், புவியியல், உயிரியல், இசை, ஓவியம், தாவரவியல் முதலானவற்றை முறையாகக் கற்றுத் தேர்ந்தார். ஃபைராம்கானின் மகன் அப்துர்ரஹீம் போன்ற திறமை மிக்க ஆசான்களிடம் கல்வி பயின்றார். இவரிடம் நற்குணங்கள் குடிகொண்டிருந்தது போலவே தீய குணங்களும் குடிகொண்டிருந்தன. 17 வயதிலேயே ஜஹாங்கீர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். சிற்றின்ப ஆசையில் மூழ்கித் திளைத்தார். ஓயாத குடியும் ஒழியாத சிற்றின்ப நாட்டமும் தனது தந்தை அக்பரிடமிருந்து பெற்றிருந்த உடற்கட்டை நிலைகுலையச் செய்தன. இவர் தனது இறுதிக் காலத்தில் அதிகாரத்தை இழந்து, அவரது அழகிய மனைவி நூர்ஜஹானின் கைகளில் ஒரு பொம்மை போலவே செயற்பட்டு வந்தார்.

பதவிக்கு வந்த ஜஹாங்கீர் ஆரம்பமாகப் பல சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவற்றுள் பன்னிரு கட்டளைகள் (துஸ்தூருல் அமல்) என்ற பெயரிலவர் வெளியிட்ட அறிக்கை முக்கியமானதாகும். இதற்கு மேலாக அவர் ஆற்றிய பணிகளைப் பின்வருமாறு நோக்கலாம்.
1. கைதிகளை விடுதலை செய்தார்.
2. அவரது பெயர் பொறிக்காப்பாட்டு நாணயங்கள் வெளியிடப்பட்டன.
3. நீதி வழங்குவதில் அதிக கவனம் செலுத்தினார்.
4. ஆக்ரா கோட்டையில் ஒர் ஆராய்ச்சி மணியைத் தொங்கவிடார். பொற் சங்கிலியொன்று அந்த மணியோடு இணைக்கப்பட்டிருந்தது. நீதி வேண்டுவோர் அந்தப் பொற்சங்கிலியை அசைத்து மணியோசை செய்தால் அரசர் நேரில் வந்து அவர்தம் குறைகளைத் தீர்த்து வைத்து முறை வழங்குவார்.

முன்னைய முகலாய மன்னர்களின் காலத்தில் போலவே ஜஹாங்கீரின் காலத்திலும் பல்வேறு படையெடுப்புக்கள் இடம்பெற்றன. அவற்றுள் கீழ்க் குறிப்பிடப்படும் இடங்களில் இடம் பெற்ற படையெடுப்புக்கள் முக்கியமானவை.
1. வங்காளம் (1612)
2. மேவார் படயெடுப்பு (1614)
3. தக்காணத்தின் மீதான படயெடுப்புக்கள் (1608 - 1617)
4. காங்காரா (1620)

இவ்வளவு வெற்றிகளுக்கு மத்தியில் ஏற்கெனவே ஹுமாயூன் காலத்தில் கைநழுவி அக்பரால் மீண்டும் கைப்பற்றப்பட்டிருந்த கந்தகார் பிரதேசம் இவரது காலத்தில் மீண்டும் கை நழுவிப் போனது. இவரது கட்டளையை ஏற்று இவரது மகன் குர்ரம் கந்தகார்மீது படையெடுப்பு மேற்கொள்ளாததே இதற்குக் காரணமாகும். இவரது மூத்த மகன் குஸ்ரூ இவரை எதிர்த்துக் கலகம் செய்தபோது மகனின் எதிர்ப்பை வெற்றீகரமாக முறியடித்தார்.

உல்லாசப் பிரியரான ஜஹாங்கீர் சுகபோகங்களில் மூழ்கித் திழைத்தார். இதனால் இவரது காதல் மனைவி நூர்ஜஹானே ஆட்சியை நடாத்தி வந்தார். நூர்ஜஹான் தனது கணவனை பொம்மையாக்கி அதிகாரம் முழுவதையும் தனதாக்கிக் கொண்டார். இதன் மூலம் தன் உறவினர்களை உயர் பதவிகளில் அமர்த்தினாள். தன் சகோதரனுக்கு ஆஸப்கான் எனப் பட்டம் சூட்டி அரசவையில் அவருக்கு முக்கிய இடம் கொடுத்தார். நூர்ஜஹானின் தந்தை கியாஸ்பேக்கும் அரசவையில் முக்கிய செல்வாக்குப் பெற்றார். இக்காலத்துப் பெண்கள் போதியளவு உரிமைகளையும் சலுகைகளையும் பெற்று வாழ்ந்தனர். கலைத்துறை வளர்ச்சிக்கு ஊக்குவிப்பு வழங்கிய இவர் பாரசீகப் பாடல்களைத் தானே இயற்றிப் பாடினார். எல்லையற்ற அதிகாரங்களோடு நடந்து கொண்டதால் குர்ரம் புரட்சி செய்தார்.

ஜஹாங்கீர் அளவுக்கு மீறி மதுவருந்தியதால் உடல் நலம் குன்றி நோய்வாய்ப்பட்டார். ஓய்வுக்காக காஷ்மீர் சென்றார். அங்கு கி.பி.1627ல் காலமானார். மனைவி நூர்ஜஹான் 1645ல் காலமானார்.

ஷாஹ்ஜஹான் (1627 - 1658 / 1037 - 1067)

முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் மூன்றாவது புதல்வரான இவர் கி.பி.1592/3ல் லாகூரில் பிறந்தார். தாயார் பெயர் பல்மதி - ராஜா உதை சிங்கின் மகள். இவரது இயற் பெயர் மிர்ஸா குர்ரம் என்பதாகும். இவர் அக்பரின் முகச்சாயலைப் பெற்றிருந்தார். இளமையில் இவர் மீது ஜஹாங்கீர் அதிக அன்பு செலுத்தியதோடு இவரைத் திருப்திப்படுத்த எதை வேண்டுமானாலும் செய்து வந்தார். பாரசீக மொழியில் ஆர்வம் காட்டிய ஷாஹ்ஜஹான்; அரசியல், சமயம், மருத்துவம் முதலாம் துறைகளை விரும்பிக் கற்றார். 1610ல் மீர்சா எனும் பெண்ணையும் 1612ல் அர்ஜுமந்த் பானு பேகம் எனும் பெண்ணையும் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மேலதிகமாகத் தனது அந்தப்புரத்தில் இருந்த பல பெண்கள் ஷாஹ்ஜஹானின் நெஞ்சத்தில் உலா வந்தனர்.

இவர் ஆட்சிக்கு வருவதை விரும்பாத இவரது எதிரிகள் இவருக்கெதிராகப் பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டனர். இவரின் செல்வாக்கைக் குலைக்க நூர்ஜஹான செய்த சதிகளும் முறியடிக்கப்பட்டன. எந்த சலசலப்புக்கும் அஞ்சாத பனங்காட்டு நரிபோல திடமான உள்ளத்தோடு போராடி சகல் எதிர்ப்புக்களையும் வெற்றி கொண்டவராய் 1628ல், அபுல் முஸாபிர் ஷஹாபுத்தீன் முஹம்மது ஷாஹ்ஜஹான் அனும் பட்டத்தோடு ஆட்சியில் அமர்ந்தார்.

ஷாஹ்ஜஹானின் ஆட்சிக் காலத்தை முகலாய ஆட்சியின் பொற்காலம் என்பர். இக்காலத்தில் ஆட்சி செழிப்புற்று ஓங்கியது. பொன்னும் பொருளும் காண்போரை மலைக்கச் செய்தன. தாஜ்மஹல், முத்து மசூதி, அலிமசூதி முதலியவை அவரது ஆட்சியின் அடையாளங்களாக விளங்குகின்றன. டெல்லி, லாகூர், காஷ்மீர் முதலாம் இடங்களில் அமைக்கப்பட்ட எழில் மிகு பூங்காக்கள் இவருக்கு தோட்டக் கலையிலும் மலர்களிலும் இருந்த ஆர்வத்தை எடுத்துக்காட்டுகின்றன. தைமூரின் வழிவந்த முகலாயரின் வழித்தோன்றலில் ஷாஹ்ஜஹானே ஆட்சித் திறனிலும் கருவூலத்தைக் கட்டிக் காப்பதிலும் நிலவரிச் சீர்திருத்தங்கள் செய்வதிலும் படை வீரர்கள், அதிகரிகளின் திறமைகளைக் கண்டறிவதிலும் சிறந்தவராக விளங்கினார். குடி மக்களுக்கு துன்பம் விளைவித்த கவர்னர்களையும் இதர அதிகாரிகளையும் பதவி நீக்கம் செய்ததால் ஆட்சியில் அமைதி நிலவியது.

முகலாயர் ஆட்சியில் ஷாஹ்ஜஹான் காலத்து ஆட்சி பரந்து விரிந்த ஒரு பேரரசாகக் காணப்பட்டது. ஒரு தந்தை தனது குடும்பத்தைக் கட்டிக் காப்பது போல அவர் தனது குடிமக்களைக் காத்தார். முகலாயரது கட்டடக் கலை இவரது காலத்திலேயே உச்ச நிலையை அடைந்தது. ஷாஹ்ஜஹான் நிறுவிய எழில் மிகு காதல் சின்னத்தை (மாளிகையை) அவரே, "இவ்வுலகின் விண்ணுலகம்" எனக் குறிப்பிடுகிறார். வெண் சலவைக் கற்களால் நிர்மாணிக்கப்பட்ட இவ்வழகு மாளிகை இன்றும் உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகின்றது. தனது முன்னோரிடம் இருந்து பெற்றுக்கொண்ட செல்வமும் நாட்டின் வர்த்தக விருத்தியால் கிடைத்த வருமானமும் தனது ஆட்சியின் கீழிருந்த பெரு நிலப்பரப்புக்களிலிருந்து கிடைக்கப்பெற்ற திறைகளும் இவரை மிகப்பெரும் செல்வந்தனாக்கின. இதனால், இது நுண்கலையில் அவருக்கிருந்த ஆர்வத்தைத் தூண்டியது. இதன் விளைவாக எழில் மிகு கட்டடங்கள் அவரது ஆட்சியில் எழுந்தன. இவர் முகலாயரின் அகஸ்டஸ் என்று கூட வர்ணிக்கப்படுகிறார். தனித் தங்கத்தில் வடித்தெடுக்கப்பட்ட முத்துக்களும் நவரத்தினங்களும் பதிக்கப்பட்ட ஒளி மிக்க மயிலாசனத்தில் ஆட்சி செய்த ஷாஹ்ஜஹானின் ஆட்சி இன்னும் ஒளி பெற்று விளங்கியது. இவரது அரசவையை போர்வ்வீரர்களும் கவிஞர்களும் கலைஞர்களுமே அணி செய்தனர்.

ஷாஹ்ஜஹான் ஆட்சியில் இந்துக்கள் உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டனர். அவரது மகன் தாரா இந்துக்களோடு நெருங்கிப் பழகினார். இருப்பினும் இவரது ஆட்சியை சமயப் பொறையுடன் கூடிய ஆட்சிதான் என்று கூறுவதற்கில்லை. ஷாஹ்ஜஹான் அடிப்படையில் ஒரு ராஜபுத்திரியின் மகனாக இருந்தபோதும் இவரது காதலி மும்தாஜின் மார்க்க ஈடுபாடு இவரையும் பற்றிக்கொண்டது. இதனால் அக்கால முஸ்லிம்கள் இவரை சமயத்தின் காவலர் என அழைத்தனர். ஷாஹ்ஜஹான் தன் தந்தையை விட வைதீகமானவர். அவரிடம் சமய வெறி காணப்படாவிட்டாலும் சிலபோது அவரது நடத்தைகள் அவரிடம் சமயவெறி இருந்தது என்பதைக் காட்டின. அவர் தனதாட்சியில் முஸ்லிமல்லாதோரை துன்புறுத்தாவிட்டாலும் அக்பரின் சமயப் பொறை படிப்படியாக இவரது காலத்தில் கைவிடப்பட்டது எனலாம்.

கலை, இலக்கியத் துறையிலும் இவர் அதிக ஈடுபாடு காட்டினார். அவரே ஓர் இலக்கியவாதியாக இருந்ததால் ஏராளமான அறிஞர்களை ஆதரித்தார். பாரசீக இலக்கிய வளர்ச்சியில் இவரது பங்கு மகத்தானது. கட்டடக் கலையில் பெரிதும் ஆர்வம் காட்டிய இவர், தாஜ்மஹல், முத்து மசூதி, ஜாமிஆஹ் மஸ்ஜித், செங்கோட்டை, ஷாஹ்ஜஹான்பாத் (ஆக்ராவிலிருந்து மாற்றப்பட்ட புதிய தலை நகர் - டில்லி) முதலானவற்றை நிருமாணித்தார். மயிலாசனத்தை ஏழே ஆண்டுகளில் செய்து முடித்து அதன்மீது வீற்றிருந்து ஆட்சி செலுத்தினார். கவிஞர்களை ஆதரித்தார். குத்ஸி என்ற கவிஞரின் வாயில் மூன்று முறை தங்கக் காசுகாச்களை நிரப்பிக் கௌரவித்தார். இசைக் கலையின் வளர்ச்சியிலும் பெரிதும் ஊக்கமளித்தார்.

இவ்வளவு சிறப்புக்களையும் பெற்றிருந்த ஷாஹ்ஜஹான் தான் இறப்பதற்கு முன்பு தனது மகன் ஔரங்கசீப்பாலும் சிறைக்காவலன் முதாமத் என்ற கொடியவனாலும் பல அவமானங்களுக்கு உள்ளாக்கப்பட்டு குடிக்கத் தண்ணீர் கூட இல்லாத நிலையில் உயிர் நீத்தார். தான் நிறுவிய தாஜ்மஹலைப் பார்த்து ஏங்கிய நிலையிலேயே இவரது உயி பிரிந்ததென வரலாறு குறிப்பிடுகிறது.. ஒரு தாய் வயிற்றில் பிறந்த தனது பிள்ளைகள் நால்வரும் ஒருவரை ஒருவர் பகைத்துக்கொண்டு யுத்தங்கள் செய்து கொண்டதை கண்கூடாகக் கண்டு துயருற்ற ஒரு துர்ப்பாக்கியசாலித் தந்தை வரலாற்றில் இவரொருவராக மட்டுமே இருந்திருக்க முடியும்.

ஒளரங்கஸீப் (ஆலம்கீர்) (1658 - 1707 / 1068 - 1117)


சக்கரவர்த்தி ஷாஹ்ஜஹானின் மூன்றாவது மகனான இவர் 1618ல் தோஹாத் எனுமிடத்தில் பிறந்தார். ஸஅதுல்லாஹ்கான், பீர் முஹம்மது ஹாஷிம் ஜெய்லானி, முல்லா ஜீவன், முஹம்மது கானோஜி, அப்துல் ஹமீத் சுல்தான்பூரி முதலானோர் இவரின் இளமைக் கால ஆசான்களாவர். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கிய இவர் பாரசீக மொழியில் பல கவிதைகள் புனைந்தார். இளமை முதலே சூபித்துவத்தில் நாட்டம் காட்டியதால் உல்லாச சுகபோகங்களை உதறித் தள்ளிவிட்டு எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இதனால் மக்கள் அவரை "ஃபக்கீர் இளவரச்ன்" என்றே அழைத்தனர். இவர் தனது 24வது வயதில் காடுகளுக்குச் சென்று தனித்துத் தியானத்தில் வீற்றிருக்கும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தார். உலகைத் துறந்து துறவறத்தை மேற்கொள்ளப்போவதாகவும் ஒரு சமயம் அறிவிப்புச் செய்தார். எனினும் விதி அவரை உலகின் பக்கமே இழுத்து வந்து ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியது. அதற்கு முழு முழுத் தகுதி உடையவராகவும் அவர் காணப்பட்டார். "தைமூர் வழியில் தோன்றிய அனைத்து மன்னர்களையும்விட சமயப் பற்றிலும் உடல் வான்மையிலும் நீதி வழங்குவதிலும் இவர் சிறப்புற்று விளங்கினார்" என்று வரலாற்றாசிரியர் "காபிகான்" குறிப்பிடுவது நோக்கத்தக்கது.

ஔராங்கஸீபின் ஆழ்ந்த மார்க்கப் பற்றுத்தான் அவருக்கு எதிரியாகவும் அமைந்தது. அக்பரின் சீர்திருத்தங்களால் இஸ்லாத்தின் சிறப்புக் குன்றியிருப்பதாகவும் இந்துக்கள் செல்வாக்கு மிகுந்து காணப்படுவதாகவும் கருதிய அவர் அந் நிலையை மாற்ற முயன்று ஈற்றில் தோற்றுப் போனார். இவரது காலத்து மார்க்க அறிஞர்கள் வழங்கிய தீர்ப்புக்கள் அனைத்தையும் சேர்த்து "பதாவா ஆலம்கீரி" எனும் பெயரில் வெளியிட்டார்.

இவர் வீரத்திலும் துணிவிலும் வல்லவராக விளங்கினார். யானையையும் புலியையும் அடக்கி வெற்றிவாகை சூடிய அக்பரினதும் ஷாஹ்ஜஹானினதும் வழியில் வந்தவர் என்ற வகையில் இவரிடமும் யானைகளை அடக்கும் வல்லமை காணப்பட்டதென்பர். 16வது வயதில் 10 000 குதிரைப்படை வீரர்களுக்கும் 4000 காலாட் படையினருக்கும் தளபதியாக இவருக்கு அரச அந்தஸ்துப் பெற்ற சிவப்புக் கூடாரத்தைப் பயன்படுத்தவுன் அனுமதி வழங்கப்பட்டது.18வது வயதில் தக்காணத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டார். பின்னர் கொஞ்ச காலம் குஜ்ராத்தின் கவர்னராக இருந்த இவரை மன்னர் ஷாஹ்ஜஹான் பல்க் பிரதேசத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட படையெடுப்புக்குத் தளபதியாக நியமனம் செய்தார்.

ஷாஹ்ஜஹான் கடுமையாக நோய்வாய்ப்பட்டபோது அவர் உயிர் பிழைக்கமாட்டார் என்றெண்ணிய அவரது பிள்ளைகள் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகப் போராட்டம் செய்தனர். இவர்கள் ஆட்சிக்கு வந்தால் மார்க்க விரோதச் செயல்களில் ஈடுபடலாம் என அஞ்சிய ஔராங்கஸீப் முராத் என்ற தனது பிறிதொரு சகோதரனோடு சேர்ந்து அவர்களை எதிர்த்து நின்று போரட்டத்தில் வெற்றிவாகைசூடினார். ஆயினும் தந்தை ஷாஹ்ஜஹானைக் கைது செய்து சிறை செய்த பிறகே ஔராங்கஸீபுக்கு அரியணையில் அமரமுடிந்தது. அரியணையில் அமர்ந்த ஔராங்கஸீப் தனக்கு ஆலம்கீரி எனும் பட்டத்தைச் சூடிக்கொண்டார். ஆலம்கீர் என்பதற்கு அகிலத்தை அடக்கி ஆள்பவர் என்பது பொருள்.இருப்பினும் ஆட்சிக்கு வந்த நாள்முதல் மரணிக்கும் வரை அவர் போராட்டங்களையே சந்திக்க வேண்டியிருந்தார்.

ஆட்சிக்கு வந்த பின்னர்கூட முன்னர் போலவே இவர் எளிய வாழ்க்கையே வாழ்ந்தார். ஆட்சியின் வீழ்ச்சிக்கு ஆட்சியாளர்களின் சொகுசான வாழ்க்கையே காரணம் என்பதை உணர்ந்ததே இதற்குக் காரணமாகும். சாந்த குணமுடைய அவர் அறிஞர்களின் ஆலோசனைக்குச் செவிமடுத்தார். அரசவையில் நிலவி வந்த வீண் பகட்டுக்கள அனைத்தையும் அகற்றினார். உயரதிகாரிகளுக்கு பொன்னாலான உடை அன்பளிப்பாக வழங்கப்படுவதை நிறுத்தினார். அன்பளிப்புக்களை வெள்ளித் தட்டில் வைத்துக் கொண்டுவர வேண்டாம் என்றும் கேடயத்தில் வைத்துக் கொண்டுவந்தால் போதுமானது என்றும் கூறினார். ஒவ்வொரு நாளும் அரண்மனை ஜன்னல் அருகே நின்று பொதுமக்களுக்குத் தரிசனம் அளிக்கும் வழக்கத்தையும் தனது இறுதிக் காலத்தில் அடியோடு நிறுத்தினார். அரசரின் தரிசனத்தைப் பெறுவதை இந்துக்கள் இறை வழிபாடு போன்று கருதி விரதம் அனுஷ்டித்துக் காத்திருந்ததாலேயே இவர் இத்தடைப்பாட்டை விதித்தார் எனக் கூறப்படுகிறது.

மிகவும் குறைவாகவே பேசும் பழக்கமுடைய ஔரங்கஸீப் தனது திட்டங்களை செயல்படுத்துவதிலேயே அதிக அக்கறை காட்டினார். உணவிலும் உடையிலும் எளிமை பேணித் துறவி போல் வாழ்ந்த அவர் மதுவிலும் மாதுவிலும் இன்பம் அனுபவிப்பதை தவிர்த்தார். தனது சொந்தத் தேவைக்கு பைத்துல் மால் நிதியைக் கூட பயன்படுத்தாது விட்டுவிட்டார். இஸ்லாத்தை நடைமுறையில் கொண்டு வர உத்தியோகபூர்வ முயற்சிகளை அவர் எடுக்க முயற்சித்ததாலேயே சீக்கியரும் மராட்டியரும் ஜாட் இனத்தினரும் அதுவரை ஔரங்கசீப்புக்கு அளித்து வந்த ஆதரவை நிறுத்திக் கொண்டனர். ஸுன்னத் வல் ஜமாஅத் சார்ந்த கொள்கைக்கு மதிப்பளித்த அவர் இஸ்லாத்துக்கு சவாலாக வரும் எந்தவொன்றையும் உதாஷீனம் செய்து வந்ததோடு போர்க்களங்களில் கூட தொழுகையை முறையாகப் பேணி வந்தார். இவர் தனது கையால் எழுதப்பட்ட இரண்டு குர்-ஆன் பிரதிகளை மஸ்ஜிதுந்நபவிக்கு அனுப்பியதாக கூறப்படுவதுண்டு.

ஔரங்கசீப்பின் தூய்மையான வாழ்வுக்கு; ஐ. சண்முகதாசன் என்பவர் எழுதிய உலக வரலாறு எனும் நூலுக்கு கவிப்பேரரசு வைரமுத்து வழங்கிய வாழ்த்துரையில் பதிவாகியிருக்கும் பின்வரும் வைர வரிகள் சான்றாக அமைகின்றன எனலாம்.

"கொடியவர் - கொடுமைக்காரர் என்று அறியப்பட்ட ஔராங்கஸீப், பொது வாழ்வில் எவ்வளவு தூய்மையானவராக இருந்தார் என்பதற்கு அவர் எழுதிய கடைசி உயில் சாட்சியாகிறது.
"என் கைகளால் தைக்கப்பட்ட குல்லாய்களை விற்ற பணம் 4 ரூபாய் 2 அணா, என் தலையணைக்குக் கீழ் இருக்கின்றன. நான் இறந்த பின்னர் எனது உடல் மீது போர்த்துவதற்குத் துணி வாங்க அதைப் பயன்படுத்துங்கள்.'
இந்த உயில் எழுத்து ஔராங்கஸீப் மீதிருந்த அத்தனை அழுக்குகளையும் சலவை செய்து விடுகிறது."

குறித்த அதே நூலில், தரப்பட்டிருக்கும், ஔரங்கசீப் தனது உயிலில் குறிப்பிட்டிருந்ததாகக் கூறப்படும் பின்வரும் அம்சங்களும் இங்கு நோக்கத்தக்கதாகும். "புனித குர்-ஆனிலிருந்து நான் எடுத்த பிரதிகளுக்காக எனக்கு ஊதியமாகக் கிடைத்த பணம் 350ரூபாய், என் கைப்பையில் உள்ளது நான் இறக்கும் நாளன்று அதை ஏழைகளுக்குத் தானம் செய்து விடுங்கள். இந்த நாடோடியின் கல்லறை மிகவும் எளிமையாக வானத்தைப் பார்த்தபடி இருக்க வேண்டும். எவ்வித அழகோ ஆடம்பரமோ செய்யக் கூடாது. ஊர்வலம், இசை எதுவும் கூடாது. என் கல்லறை மண்ணால் மூடப்பட்டிருக்க வேண்டும். அங்கே பசுமையன செடிகள் வளரட்டும். (உலக வரலாறு பக். 157)

13 நாட்கள் நோய்வாய்ப்பட்டுக் கிடந்த இவர் கி.பி.1707ம் ஆண்டு மரணமானார். இவரது விருப்பப்படியே எவ்விதமான ஆடம்பரமுமின்றி தௌலதாபாத் எனுமிடத்தில் இவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

"உமது எளிமைமிக்க அடக்கஸ்தலம் - அலங்காரம் ஏதுமில்லா சமாதி என்பன உலகை ஆண்ட அரசர்களில் நீ தான் உயர்ந்தவர் என்பதற்கு சான்றாக அமைகின்றது." என அல்லாமா இக்பால் இவர் பற்றி புகழ்ந்து பாடியிருக்கிறார்.

இந்த ஆக்கம் தே.க. நிறுவகத்தின் வழிகாட்டலின் கீழ் க.பொ.த. (உ/த) இஸ்லாமிய நாகரிக பாடாத்துக்கான ஆசிரியர் அறிவுறைப்பு வழிகாட்டி நூலுக்காக எழுதப்பட்டது. (அபூ ஷௌகீ).